நானொரு மேடைக் காதலன் - 10

By நாஞ்சில் சம்பத்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்டத் தலைநகரங்களில் நடத்திய கலை இலக்கிய இரவுகள், கலை இலக்கிய ஆர்வலர்களுக்கு அது உறங்காத இரவுகள். அரசியல், சாதி, சமயம் என்ற எல்லை கடந்து எல்லாத் தரப்பு மக்களையும் ஓர் இரவில் விழிக்க வைத்து, சிலிர்க்க வைத்து, விழிப்புணர்வை ஊட்ட வைத்து மக்கள் மனதில் பெரிய தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்திய கலை இலக்கிய இரவுகளை அனுபவித்தவர்கள் நிச்சயமாகக் கொடுத்து வைத்தவர்கள். இரண்டு மணி நேர திரைப்படத்துக்கே இடைவேளை விட்டு விடுகிறார்கள். ஆனால், இடைவேளைக்கே இடமில்லாமல் பறை முழக்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், தனிப்பொழிவு, நாட்டியம் என விடிய விடிய விடிவதற்காக நடக்கும் கலை இலக்கிய இரவுகள் வெறும் பொழுதுபோக்குவதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகள் அல்ல. அழுதும் தொழுதும் அழுந்தியும் அல்லல்படும் மக்களை ஆற்றுப்படுத்துகிற இரவுகள் அந்த இரவுகள். ஒரு  நொடிகூட சலிப்பில்லாமல் அலுப்புத் தட்டாமல் சங்கிலித் தொடர்போல் திறந்த வெளி மேடையில் விடிய விடிய நடக்கும் நிகழ்ச்சிகள் முடிகிறபோது ஐயோ முடிந்துவிட்டதே என எண்ணி ஏங்கும் அளவுக்கு நம்மைக் கொண்டு விட்டுவிடும். மழை விட்டும் விடாத தூவானம் போல அந்த இரவுகள் நெஞ்சை விட்டு நீங்காமல் இருக்கும்.

திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலிச் சீமையில் நடந்த கலை இலக்கிய இரவில் ‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்ற தலைப்பில் என்னைப் பேசப் பணித்தார்கள். என்னை அழைத்துப் பெருமைப்படுத்திய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப் பாளர் நண்பர் சேவியர் ``அதிகாலைக்கு அச்சாரம் போடுகிற விடிந்தும் விடியாத நடுநிசி மூன்று மணிக்கும் ஒருவர்கூட கலைந்து செல்லாமல் இந்தக் கூட்டம் கண்கள் பூக்கக் காத்திருக்கிறது என்றால் உங்கள் பேச்சைக் கேட்கத்தான். அதிலும் உங்கள் காதலனுபவத்தைக் கேட்கத்தான்...'' என்று சொன்னபோது என் பாடு விக்கல் எடுக்காத குறைதான். விம்மி அழாத நிலைதான். ``காதலைக் கடந்து வராமல் ஒருவன் இருக்க முடியாது. நானும் காதல் நந்தவனத்தில் கண்ணாமூச்சி ஆடியிருக்கிறேன். காதலை நேருக்கு நேர் சந்திக்கத் திராணியில்லாத கோழை நான் என்று சொல்லிக்கொள்வதில் வெட்கப்படவில்லை. காதல், சாம்ராஜ்யங்களைப் பந்தாடி இருக்கிறது. காதல், சாதிக்கு சமாதி கட்டியிருக்கிறது. காதல், மதத்தைச் சூறையாடியிருக்கிறது. காதல், ஏற்றத்தாழ்வைப் போக்கியிருக்கிறது. காதல், மேடு பள்ளங் களைச் சமன்படுத்தியிருக்கிறது. காதல், மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. கலவியையும் தாண்டி காதல் பனித்துளியைப் போல் பரிசுத்தமானது. இந்தப் பிரபஞ்சத்தில் மரணத்தைப்போல் உறுதியானது காதல் மட்டும்தான். ஆகவே, காதல் செய்யுங்கள். கண்ணனைக் கைத்தலம் பற்ற கனாகண்டது ஆண்டாளின் காதல். அழுதால் உன்னைப் பெறலாம் என்று நெக்கு உருகி சிவனை நினைந்து கண்ணீர் சிந்தியது மாணிக்க வாசகன் காதல். ஆண்களின் கற்பனை ஆட்சி செய்து பெண்களின் பொறாமைத் தீயை மூட்டி சீசர்களை ஒருவர் பின் ஒருவராக மயக்கி மண்டியிடச் செய்த கிளியோபாட்ராவின் காதல், ட்ரோஜன் போரில் முடிந்த அப்ரோடைட்- ஹெலன் காதல் எனக் காதல் விதவிதமாக நவநவமாகக் கூடு கட்டிக்கொள்கிறது.

கண் நிறைந்த காதலனின் அம்சா தூளிகா மஞ்சத்தை அலங்கரிக்க அரண்மனை வாழ்வைத் துறந்தவர்கள் உண்டு. மனதுக்குப் பிடித்தவ னைத் தனதாக்கிக் கொள்வதற்கு ஈன்று புறந்தந்த தாயைத் தந்தையைத் துறந்தவர் உண்டு. பழங்கள் உண்டு, பாலில் கைகழுவி, பட்டில் தொட்டில் கட்டி,  பவுனில் காது குத்தியவள் ஆட்கொண்டவனை அடைந்த பின் ஆழாக்கு அரிசிக்கு அலை பாய்ந்தது உண்டு. இரத்த சம்பந்தம் உள்ள சொந்தங்களையும் சுக துக்கங்களைத் தீர்மானித்த உறவுகளையும் காதலுக்காக வெறுத்தவர்கள் உண்டு. காதலுக்காக சிலுவைகளையும் சிரமங்களையும் அனுபவிப்பதில் சுகங் காணுகிற சுமை தாங்கிகள் உண்டு. வீட்டில் இருந்து வீதிக்கு வராதவள் கண்களில் சிக்கிக்கொண்ட காதலனுக்காகக் கடல் கடந்து சென்றதும் உண்டு. கலை இலக்கிய பெருமன்ற மேடை என்பதால் சொல்லி வைக்கிறேன். நீங்களும் நானும் பார்ப்பதற்குச் சூரியனிடத்தில் இருந்து ஒளியையும் நீங்களும் நானும் சிந்திப்பதற்கு வானத்திடம் இருந்து இதயத்தையும் வாங்கித் தந்த சிந்தனையாளன் காரல் மார்க்ஸின் காதல் அமரத்துவமான காதல். ஒருவனுக்கு மனைவி வாய்த்தால் காரல் மார்க்ஸுக்கு வாய்த்த ஜென்னியைப்போல் வாய்க்க வேண்டும். உலகமே வழிமொழிகிற வாழ்க்கை அவர்கள் வாழ்க்கை. காதலித்த தலைநாளில் பற்றிக்கொண்ட நேசம் கடைசிவரை குறையாமல் இருந்தது. உறையாமல் இருந்தது. ஜென்னி- காரல்மார்க்ஸ் காதலுக்கு வயதோ வறுமையோ தடையாக இருந்ததில்லை. 

1845- ம் ஆண்டு காரல்மார்க்ஸ் நவீனச் சிந்தனைகளின் தொட்டில் பாரீஸைவிட்டு துரத்தப்பட்டார். ஹெகலில் தத்துவங்களை எதிர்த்து ஜெர்மன் பத்திரிகையில் எழுதிய ஒரே காரணத்துக்காக பிரெஞ்சு அரசும் ஜெர்மனி அரசும் ஒரு சேர எதிர்த்தன. வேறொருத்தி மனைவியாக இருந்தி ருந்தால் வம்பு தும்புக்கும் போக வேண்டாம் என்று வழி மறித்திருப்பாள். ஆனால், ஜென்னியோ மார்க்ஸின் மன சாட்சியாக மலர்ந்தாள். மணமான மூன்றாவது ஆண்டில் மார்க்ஸும் ஜென்னியும் பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரத்துக்குத் துரத்தப்பட்டார்கள். அப்போதுதான் ஜென்னி சொன்னாள். ‘எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் இலட்சியவாதிகளான நாம் சரியாக இருக்கி றோம் என்பதற்கான அடையாளம் அது’ என்று! 

ஒரு வேலைக்காரனை வைத்துக்கொள்வதற்கு வசதியில்லாத காரல்மார்க்ஸுக்கு சுதந்திர வர்த்தகம், தத்துவ ஞானத்தின் தாளாத வறுமை என்ற நூல்களை எழுதிய மார்க்ஸுக்கு வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டும் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டும்  மார்க்ஸுக்குக் குறிப்புகள் எடுக்க, கையெழுத்துப் பிரதி களைச் சேகரிக்க, திருத்த, டைப் அடிக்க உறங்காமல் உழைத்த ஜென்னியை என்ன பெயர் சொல்லி அழைப் பது? மார்க்ஸ் பெல்ஜியத்தில் இருந்துகொண்டு ஜெர்மனி
யில் காக்கிச் சட்டைக்குள் இருந்த காட்டுமிராண்டிகளின் முகமூடியைக் கிழித்தெறிந்தார். ஜெர்மனியின் உந்து தலால் பெல்ஜியத்தில் இருந்தும் மார்க்ஸையும் ஜென்னி யையும் நாடு கடத்தினார்கள். வானத்துப் பறவை களைப் போல சரணாலயங்களை மாற்றிக்கொள்ள இயற்கை இடம் கொடுத்திருக்கிறது என்று அதையும் எளிதாக எடுத்துக்கொண்டாள் ஜென்னி. மீண்டும் மார்க்ஸும் ஜென்னியும் பிரான்ஸுக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. துயரம் மிகுந்த இந்தப் பயணங் களை ஒரு ஓடக்காரனின் உல்லாசப் பயணங்கள் என்றே வர்ணித்தார் ஜென்னி. அதன்பிறகு 10 ஆண்டுகள் லண்டன் அருங்காட்சியகத்தில் உட்கார்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு மூலதனத்தைக் கொண்டு வந்தார். 

நாடு கடத்தப்பட்ட போதெல்லாம் வறுமை அவரைத் தின்று தீர்த்தது. கல்லீரல் நோய், ஆஸ்த்மா, இரத்தக் கொதிப்பு ஆகிய நோய்கள் அவரைப் படாதபாடு படுத்திய வேளையிலும் மார்க்ஸுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருந்தவர் ஜென்னிதான். `இந்த உலகமே என்னைக் கைவிட்ட போதும் போராட்டங்களின் மத்தியில் என்னைத் துயரம் தொடர்ந்த போதும்  ஜென்னியின் மடியில் தலை சாய்த்துக்கொள்ளுகிற  ஒவ்வொரு நிமிடமும் நான் உலகத்தை மறந்து விடுகிறேன்’ என்றார் காரல்மார்க்ஸ். ஜென்னியும் ஏங்கெல்ஸும் பணிப்பெண் ஹெலன் டெமுதேவும் இல்லாவிட்டால் மார்க்ஸ் இல்லை. வறுமை தன்னை வாட்டத் தொடங்கியபோது ‘தீராத வறுமையாலும் நோயின் கொடுமையாலும் கண்ணீரும் கம்பலையுமாக இரவுகளைக் கழிக்கிறேன்’ என்று ஏங்கெல்ஸுக்கு எழுதினார் மார்க்ஸ். 1851-ல் மகள் பிறந்தாள். பிரான்சிஸ்கா என்று பெயரிட்டார்கள். கொதிக்கிற காய்ச்சலில் படுத்துக் கிடந்தபோதும் ஓய்வெடுப்பதற்காக உறங்குகிறேன் என்று மார்க்ஸை நம்பவைத்தாள் ஜென்னி. செல்ல மகன் எட்கார் இறந்தபோது எதற்குமே கலங்காத மார்க்ஸும் ஜென்னி யும் வானமதிர அழுதார்கள். மூலதனம் எழுதிய மார்க் ஸின் வீட்டில் மூலதனம் எதுவும் இல்லை. பிரெஷ்ய நாட்டு அமைச்சரின் தங்கை ஜென்னி ஒருநாள்கூட  மார்க்ஸிடம் முகம் சுளித்ததில்லை. ‘ நதியை நெருங்குகிற நேரம் வந்துவிட்ட பிறகு காலிலே செருப்பில்லை என்று காய்கிற வெயிலுக்காக கவலைப்பட்டால் எப்படி’ என்று எழுதினாள் ஜென்னி. 

‘ எனது கணவர் பயங்கரமான காலகட்டங்களிலேகூட எதிர்காலத்தைப் பற்றிய தனது நம்பிக்கையை ஒரு போதும் இழந்ததில்லை. அவரது மகிழ்ச்சியான சமூகப்பண்பு ஒருபோதும் அவரை விட்டு விலகியதும் இல்லை. என் குழந்தைகளை நான் கட்டி அணைத்துக்
கொண்டு நிற்பதை ஒருமுறை அவர் பார்த்தால்  போதும். வாழ்க்கைத் துன்பங்கள் அவரிடம் இருந்து விடை பெற்றுக்கொள்ளும்’ என்றும் ஜென்னி எழுதியி ருக்கிறாள்.  அபாயத்தை நேசித்தே வாழ்ந்தார்கள். ஒருநாள் ஜென்னி யைக் கைது செய்து வேசிகளை அடைக்கிற சிறையில் அடைத்தார்கள். அதை அவமானமாகக் கருதாமல் அந்தப் பெண்களின் அவல நிலைக்குக் காரணம் பொருளாதாரச் சீர்கேடே என்று கண்டறிய சிறை வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொண்டாள். ஒரு வயது குழந்தையாக இருந்த பாசமகள் பிரான்சிஸ்கா மரித்துப்போனாள். அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்க காசில்லை.  ‘நீ இதற்கு வருந்தவில்லையா ஜென்னி?’ என்று மார்க்ஸ் கேட்டார்.  ‘பிரான்சிஸ்கா பிறந்தபோது தொட்டில் வாங்க பணம் இருந்திருந்தால் அல்லவா இன்று அவளுக்குச் சவப்பெட்டிக்குப் பணம் இல்லை என்று வருந்தியிருப்பேன்’ என்றாள். 38 ஆண்டுகள் கசந்த வாழ்விலும் காதல் கசங்காமல் வாழ்ந்த ஜென்னி எல்லோருக்கும் கிடைத்துவிட்டால் அனைவரும் மார்க் ஸாக மாறி விடுவார்கள். வானம் இருக்கும் வரைக்கும் இந்தக் காதல் இருக்கும்.

ஆணில் பெண்ணையும் பெண்ணில் ஆணையும் பிரசவிக்கிற பிரளயச் சம்பவம்தான் காதல் என்று வலம்புரி ஜான் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை. அந்த உண்மைக்கு உயிர் தர காதல் செய்யுங்கள்” என்று நான் சொல்லி முடித்தபோது அங்கு நிலவிய மவுனம் என்னைச் சிலிர்க்க வைத்தது.  “ஊடுவதும் கூடுவதும் மட்டுமல்ல காதல். அது உயிரை உறைய வைக்கிற உன்னதம் என்று உணர்த்திவிட்டீர்கள்” என்று உரை கேட்டவர்கள் உரைத்தபோது கண்கள் பனித்தன.
(இன்னும் பேசுவேன்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE