நீரோட்டிய காலம்! - புதிய தொடர்

By காமதேனு

தொடங்குவதற்கு முன்…

தமிழ்நாடு என்ற பெயர் நம் மாநிலத்துக்குச் சூட்டப்பட்ட 50-வது ஆண்டு இது. எனினும் தொல்காப்பியரால் 2,000 ஆண்டுகளுக்கும் முன்னரே ‘தமிழ் கூறு நல்லுலகு’ என்று வரையறை செய்யப்பட்ட நிலம் இது. எந்தக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டவராக, எந்த மாநிலத்திலிருந்து வந்தவராக, எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் தமிழைப் பேசும் அனைவரையும் உள்ளடக்கும் ஒரு நல்ல வரையறையை முன்கூட்டியே தொல்காப்பியர் கொடுத்திருப்பது வியப்பளிக்கிறது. தமிழகத்தின் மூச்சிலேயே பன்மைக் கலாச்சாரம் இருக்கிறது என்பதன் அடையாளம்தான் இது.

தமிழ்நாட்டைப் போலவே பன்மைக் கலாச்சாரம் கொண்டது ஒருங்கிணைந்த தஞ்சை. (இனிமேல் ‘ஒருங்கிணைந்த தஞ்சை’யை வெறுமனே ‘தஞ்சை’ என்றே குறிப்பிடுகிறேன்.) ஆம்! இந்தத் தொடர் தஞ்சையின் கலாச்சாரப் பன்மை பற்றிப் பேசுகிறது; தஞ்சையின் வாழ்க்கையைப் பேசுகிறது. தஞ்சைக் கலாச்சாரம் என்கிறோம்; அதை எதுவெல்லாம் உருவாக்குகிறது, அவற்றில் இன்னும் தங்கள் பலத்தைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவை எவையெவை, காலப்போக்கில் உயிர்விட்டவை எவையெவை, நாம் இழந்தவை எவையெவை, இழக்க வேண்டியவை எவையெவை? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்தத் தொடரில் விடை தேடப் போகிறோம். இதற்காகத் தஞ்சையின் முக்கியமான இடங்களுக்கு என்னுடன் பயணிக்க காமதேனு வாசகர்களை நான் அழைக்கிறேன்!

மரபு, பண்பாடு, பாரம்பரியம் என்ற சொற்களையெல்லாம் மிகுந்த எச்சரிக்கை யோடு அணுக வேண்டிய காலம் இது. ஒரு மரபு அது தொன்மையானது என்பதா லேயே உயர்ந்ததாகவோ அவசியமானதாகவோ இன்று ஆகிவிடாது. ‘நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’ என்ற பிரச்சாரம் இன்றைய வாட்ஸ் -அப் யுகத்தில் வெகு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நம் முன்னோர்களைப் பற்றி நாம் பெருமைப்பட ஏராளமான விஷயங்கள் இருக்கின்றனதான். ஆனால், அதே முன்னோர்கள்தான் சாதிக்கொடுமைகள், பெண்ணடிமைத்தனம், நிலபிரபுத்துவம் உள்ளிட்டவற்றில் திளைத்திருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அவர்கள் நமக்குக் கொடுத்துவிட்டுப் போன கொடிய சீதனங்களாக அவற்றை இன்னும் நாம் சுமந்துகொண்டிருக்கிறோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE