‘இயற்கை’ என்ற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில், நம்மில் பலருக்கும், பசுமையான மரங்கள் அடர்ந்த காடுகள்தான் மனதில் தோன்றும். ஆனால், அதுமட்டும்தான் இயற்கையா? சங்கம் வைத்து மொழி வளர்த்த தமிழர்கள், ‘பாலைத் திணை’ பற்றியும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஆம்… காடுகள், மலைகள், கடல்கள் போல பாலைவனமும் ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் தொகுப்பே!
“என்ன பாஸ்… ஒண்ணுமே இல்லாத இடத்தைத்தான் பாலைவனம்னு சொல்லுவோம். அது எப்படி சுற்றுச்சூழல் தொகுப்பாகும்?” என்று பலர் கேட்கலாம். நீங்களும் அந்தக் கேள்வியை கேட்பீர்களென்றால், ‘டெஸர்ட் சாலிட்டேர்’ எனும் புத்தகம் உங்களுக்காகத்தான்!
அதிகாரத்துக்கு அடிபணியாதவர்!
அமெரிக்காவின் முக்கியமான சூழலியல் எழுத்தாளர்களில் ஒருவர் எட்வர்ட் அபே. 1927-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி பிறந்தார். பள்ளி ஆசிரியரான இவரது தாய் மில்ட்ரெட் போஸ்டில்வெயிட், அபேவுக்குச் சின்ன வயதிலிருந்தே இலக்கியம் மற்றும் இசையில் ஈடுபாடு கொள்ளச் செய்தார். இவரது தந்தை, பால் ரிவெர் அபே, நாத்திகவாதியாகவும் சோஷலிஸ்ட்டாகவும் இருந்தார்.