மருத்துவர் விஜயகுமாரிடம் நெஞ்சு எரிச்சல் என சிகிச்சைக்கு வருகிறார் ஒருவர். அவரை முழுவதுமாக பரிசோதிக்கும் விஜயகுமார், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை உறுதிசெய்கிறார். தாமதிக்காமல் அதற்கான முதலுதவி சிகிச்சைகளை மேற்கொள்கிறார். அந்த நபர் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டியதும் ஆம்புலன்ஸில் ஏற்றி மேல்சிகிச்சைக்காக திருச்சிக்கு அனுப்பி வைக்கிறார். திருச்சி புள்ளம்பாடி பகுதியில் இப்படிக் கடந்த இருபது ஆண்டுகளில் சுமார் இரண்டாயிரம் பேரை மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்டிருக்கிறார் விஜயகுமார்.
இவரைப் போல திருச்சியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் நாற்பது மருத்துவர்கள் ஓசையின்றி சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் குருநாதர் மருத்துவர் எம்.சென்னியப்பன். திருச்சியைச் சேர்ந்த சென்னியப்பன் தென்னிந்திய அளவில் தலைசிறந்த இதய சிகிச்சை நிபுணர்களில் ஒருவர். யாரும் அவ்வளவு எளிதில் சந்தித்துவிட முடியாத இந்த மனிதர் மாரடைப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதய நோய்க்கு அவசர சிகிச்சையளிப்பது குறித்து சேவையுள்ளம் கொண்ட மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும் தனது நேரத்தின் பெரும் பகுதியைச் செலவிடுகிறார். இதற்காக இவர் உருவாக்கி இருக்கும் அமைப்புதான் இதய சுருள்படக்கழகம் (இசிஜி கிளப்)!
இந்த கிளப் ஆரம்பித்ததன் நோக்கம் குறித்து சென்னியப்பனே நம்மிடம் பேசுகிறார். “உலகில் மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. அதிலும் தென்னிந்தியாவில் இதன் தாக்கம் மிக அதிகம். மாரடைப்பால் நிகழும் இறப்பு விகிதத்திலும் நாம்தான் முதலிடம். இதற்குக் காரணம் மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை உடனடியாக அறிந்துகொள்ளவும், உடனடியாக உரிய சிகிச்சைகளை மேற்கொள்ளவும் இங்கே போதிய வசதிகள் இல்லாததுதான். பெரிய நகரங்களில் மட்டுமே இதய சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள். சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களில் இருப்போர் மாரடைப்பு ஏற்பட்டு, இவர்களைச் சென்றடைவதற்குள் மரணங்கள் நிகழ்ந்து விடுகின்றன. மாரடைப்பால் பாதிக்கப்படுவோரில் 35 சதவீதம் பேர் இப்படித்தான் மரணிக்கிறார்கள்.
நம்மால் முடிந்தவரை திருச்சியைச் சுற்றியாவது இது போன்ற மரணங்களைத் தவிர்க்கலாமே என்று எண்ணித்தான் 1995-ல், இதய சுருள் படக்கழகத்தை (இசிஜி கிளப்) உருவாக்கினேன். இதில் திருச்சியைச் சுற்றியுள்ள துறையூர், புள்ளம்பாடி, மணப்பாறை, துவரங்குறிச்சி, மண்ணச்சநல்லூர், திருவரம்பூர் போன்ற சிறுநகரங் களைச் சேர்ந்த சேவையுள்ளம் கொண்ட மருத்துவர்களை ஒருங்கிணைத்தேன்.