ஓரம்போ.. ஒத்திப்போ... பிரேக் இல்லாத பிரகாஷ் வண்டி வருது!

By காமதேனு

ஒரு காலைப் பொழுது. கன்னியாகுமரி - நாகர்கோவில் சாலையில் சைக்கிளில் மிதித்து வந்து கொண்டிருக்கிறார் அந்தப் பெரியவர். அவரது சைக்கிளின் மீது தன்னிச்சையாய் பார்வையை ஓட்டிய நான் சற்றே அதிர்ந்து போனேன். காரணம், அந்த சைக்கிளில் ‘பிரேக்’ என்னும் சமாச்சாரமே இல்லை!

அடடே என ஆச்சரியப்பட்டுஅந்தப் பெரியவரை ஓரம் கட்டினேன். வால்பாறை ஏரியாவைச் சேர்ந்த இவர் பெயர் பிரகாஷ். 66 வயதாகும் இவர் பிரேக் இல்லாமல் சைக்கிள் ஓட்டுவதே ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம்தான். இதுகுறித்து அவரே நம்மிடம் ஆர்வத்துடன் விளக்கினார். “நான் அந்தக் காலத்து சைக்கிள் சாம்பியன். ஊருக்கு மத்தியில் மைதானத்துல செட் போட்டு ராத்திரியும், பகலுமா நாள் கணக்குல விடாம சைக்கிள் ஓட்டுவேன். அப்படி சைக்கிள் ஓட்டித்தான் என் குடும்பத்தைக் காப்பாத்துனேன்.

ஆனா, வீட்டுக்கு வீடு டிவி பெட்டி வந்த பின்னாடி எங்க பொழப்புலேயும் மண்ணு விழுந்திருச்சு. வாகன விபத்துகளுக்கு இன்னிக்கு முக்கியக் காரணமாக இருப்பதே ‘பிரேக்’ தான். ரோட்ல அளவுக்கு மீறி, சீறிப் பாயுற வாகனங்கள் ‘பிரேக்’ இருக்கும் நம்பிக்கையில்தான் அப்படிப் போகுது. பிரேக் இல்லைன்னா விபத்து ஏற்படும்ன்னு பயம் வந்து மெதுவாக போவாங்கல்ல... சாலை விபத்துகளைத் தடுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் பிரேக் இல்லாத சைக்கிள்ல போறேன். நாலுபேரு இதைப் பார்த்துட்டு பிரேக் இல்லாம எப்படி ஓட்டுறீங்கன்னு கேட்கும்போது, என்னோட கருத்து பரவும்.

நான் வீட்டைவிட்டுக் கெளம்பி முழுசா எட்டு மாசம் ஆச்சு. இந்த விழிப்புணர்வை டெல்லி வரை பரப்புவதுதான் நோக்கம். எனக்கு செல்போனும் கிடையாது. அது இருந்தா வீட்டில் இருந்து நல்லது, கெட்டதுன்னு தகவல் வரும். நம்ம பயணம் தடைபட்டுப் போகும். புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா முடித்து கேரளா மார்க்கமாக தமிழகம் வந்துருக்கேன். தினமும் 60 கிலோ மீட்டர் பயணம் செய்வேன். சாலையோர பேருந்து நிறுத்தங்களிலும், கோயில் சத்திரங்கள்லயும் தங்கிக்குவேன்.
ஊட்டியிலருந்து கூடலூர் வழியாக மைசூர் போனேன். அது கடுமையான இறக்கங்கள் நிறைந்த பாதை. அதிலேயே பிரேக் இல்லாமல் சமாளிச்சுட்டேன். அதேபோல் அது யானைகள் வழிமறிக்கும் சாலை என வனத்துறையினர் எச்சரிச்சு வேன்ல ஏறச் சொன்னாங்க. ஆனா, நான் மறுத்துட்டேன். கடைசியில், 15 கிலோமீட்டர் தூரத்துக்கு என்னோடு வனத்துறை வண்டியும் வந்து பாதுகாப்பா அனுப்பி வெச்சாங்க. மிதமான வேகத்துலயே போறதால பிரேக் இல்லாதது ஒரு விசயமாகத் தெரியலை” என்று சொல்லிவிட்டு மெல்ல சைக்கிளை மிதிக்கிறார் பிரகாஷ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE