எங்க ஊருல யாரும் பசியா இருக்கக் கூடாது- 2 ரூபாய்க்கு இட்லி தரும் ‘அய்யா உணவகம்’

By காமதேனு

ஒரு கப் டீ பத்து ரூபாய் விற்கும் இந்தக் காலத்தில், 2 ரூபாய்க்கு இட்லி கிடைக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? அப்படி ஒரு இட்லிக் கடையும் இருக்கிறது நம்புங்கள்! ஆனால், இது அம்மா உணவகம் அல்ல... ‘அய்யா உணவகம்’!

அம்பாசமுத்திரம் - பாபநாசம் சாலையில் மூன்றாவது கிலோமீட்டரில் வருகிறது அடையகருங்குளம். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ரெண்டு ரூபாய் இட்லிக் கடை எனக் கேட்டால் பட்டென வழி சொல்கிறார்கள். கடை அவ்வளவு பிரபலம்! நாம் சென்றிருந்த நேரத்தில் கடை வாசலில் சுடச்சுட வடை போட்டுக்கொண்டு இருந்தார் கடையின் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன். அவரது மனைவி மாரியம்மாள் பார்சல் கட்ட, பரிமாற என ஓடவும் நடக்கவுமாய் இருந்தார்.

உள்ளூர் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து காலை டிபன் சாப்பிட்டுச் செல்கிறார்கள். நாம் அங்கிருந்த 40 நிமிடங்களில் 20 ரூபாய்க்கு மேல் சாப்பிட்டவர்கள் யாருமே இல்லை. வயிறு முட்டச் சாப்பிட்டாலும் 15 ரூபாய்க்குள் அடங்கிப் போகிறது பசி. ஒரு பெரியவர், சாப்பிட்டுவிட்டு “அஞ்சு இட்லி, ஒரு பருப்புவடை’’ என உரக்கச் சொல்கிறார். “12 ரூபாய்” என மாரியம்மாளிடம் இருந்து பதில்வர, கொடுத்துவிட்டு நகர்கிறார் பெரியவர். ஒரு நடுத்தர ஓட்டலில் ஆறு முதல் பத்து ரூபாய் கொடுத்து நாம் சாப்பிடும் இட்லி என்ன அளவில் இருக்குமோ அதே அளவில் இருக்கிறது. வடை மட்டும் சற்று சிறியது!

எண்ணெய் சட்டியில் போட்டிருந்த வடைகளை எடுத்துக்கொண்டே பேசத் தொடங்குகிறார் கோபாலகிருஷ்ணன். “இந்தக் கடை ஆரம்பிச்சு இருபது வருசம் ஆச்சு. ஆரம்பத்துல இட்லி 1 ரூபாய், வடை 1 ரூபாய்ன்னு தான் நடத்துனேன். கடைக்கு ரெகுலராக சாப்பிட வர்றவங்களே, ‘உனக்கும் கொஞ்சமாச்சும் கையில் காசு நிக்க வேணாமாப்பா’ன்னு சொல்லி இட்லிக்கு 2 ரூபாய் வச்சு கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஒருதடவை, நெல்லையில் இருந்து சாப்பிட வந்த ஒரு குடும்பம், இட்லி ஒரு ரூபாய்ன்னதும் அதிர்ச்சியாகிட்டாங்க. அவுங்களும் 2 ரூபாய் வச்சு கொடுத்தாங்க. அதுக்குப் பின்னாடிதான் நானே இட்லியை ரெண்டு ரூபாய் ஆக்கினேன். விலையைக் கூட்டி 6 வருசம் ஆச்சு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE