இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால்..!

By காமதேனு

ஆத்திரத்தின் அழிவுத்தன்மை பற்றியும் கடுமையான வாத்தைகளின் கொடூர விளைவுகள் பற்றியும் வள்ளுவர் தொடங்கி சொல்லாதோர் யாரும் இல்லை. சாமானியனுக்கே பொருந்தக்கூடிய இந்த அறிவுரைகள் பொதுவாழ்க்கையில் மரியாதையான பொறுப்பில் உள்ளவர்களுக்கு இன்னும் கூடுதலாகவே பொருந்தும்.

வார்த்தைகளால் நெருப்பை அள்ளிக் கொட்டுவதும் அதன் மூலம் பரவும் சூட்டில் குளிர்காய்வதுமான வெறுப்பு அரசியல் சிந்தாந்தம் இந்தியாவில் அண்மைக் காலமாகவே அதிகரிக்கத் தொடங்கியிருப்பது பெரும் வேதனை. அதன் சமீபத்திய உதாரணமாக, அடிக்கடி தலைப்புச் செய்திகளில் அடிபட்டுக்கொண்டே இருக்கிறார் பாஜக-வின் தேசியச் செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா.

மதரீதியிலான விஷயங்களில் நிதானமிழந்து பேசுவது ஒருபுறமிருக்க, சமத்துவம் சொன்ன பெரியாரில் தொடங்கி நீதிமன்றம், காவல்துறை என அனைவரையும் தன் விருப்பத்துக்கு வார்த்தைகளால் விளாசித் தள்ளுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் இவர்.

ஏற்கெனவே இதுபோல ஒரு ட்விட்டர் பதிவு சர்ச்சையில் சிக்கியபோது  ‘அதை பதிவிட்டது எனது அட்மின்’ என்று வழுக்கிக்கொண்டு போனார். இப்போதும்,  ‘தான் அப்படிப் பேசவில்லை; அது திரிக்கப்பட்ட குரல்பதிவு’ என்கிறார். ஆனால், சர்ச்சைகள் நாளுக்கு நாள் அவரைச் சுற்றியே பலமாக வட்டமிடுகின்றன. பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் விதமான இதுபோன்ற சர்ச்சைப் பேச்சுகள் தமிழகத்தின் அரசியல் கண்ணியத்தை இந்திய அரங்கில் களங்கப்படுத்தும் விதமாக இருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE