விஐபி-க்களின் விருந்து சாப்பாடு 8: தளவாய்சுந்தரம் 

By காமதேனு

நாகர்கோவில் மீன் பொரிப்பும்... ரோசாப்பூ மோரும்..!

இந்த வார ‘விருந்’தினர் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம். குமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த இவர், முன்னாள் அமைச்சர் மட்டுமல்ல, அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவரும் கூட. டெல்லி பிரதிநிதி ஆன பின்பு சென்னையிலும், டெல்லியிலுமே பெரும்பகுதி நாட்களைக் கழிக்கும் தளவாய்சுந்தரம் ஊருக்கு வந்தால், எட்டிப்பார்க்கும் இடங்களில் ஒன்று நாகர்கோவில் பிரபு ஹோட்டல்!

“இன்னிக்கு, நேத்து இல்ல... 25 வருசமா இந்த ஹோட்டலில் சாப்பிட்டுட்டு இருக்கேன். ஆரம்பத்தில் பழைய பயோனியர் தியேட்டர் பக்கம் சைவ உணவகமாத்தான் இருந்துச்சி. யதேச்சையா ஒருநாளு வந்து சாப்பிட்டேன். பிடிச்சிப்போச்சு. அந்த பந்தம் இப்பவரைக்கும் தொடருது. இன்னைக்கு தேதியில நாகர்கோவிலில் நல்ல அசைவ உணவு சாப்பிடணும்ன்னா என்னோட ஒரே சாய்ஸ் இந்த பிரபு ஹோட்டல்தான். சென்னையில் ஐந்து நட்சத்திர விடுதிகளில் சாப்பிடும்போது என்ன ருசி இருக்குமோ, அதுக்கு நிகரான ருசி இந்த உணவகத்துல இருக்கும். மீன்பொரிப்பு, ஆம்லேட், மோர் என்னோட விருப்ப உணவு. மோரில் வாசனைக்காக ரோஜா பூ இதழ்களைப் போட்டுருப்பாங்க. அதோட வாசனையே, மோர்விட்டு சாப்பிடத் தூண்டும்” என்று பேசிக்கொண்டிருக்கையிலேயே இலை போட்டு, சோற்றைப் பரிமாறுகிறார்கள் ஹோட்டல் ஊழியர்கள். பொரித்த மீன் ஒரு தட்டில் வந்து சேர்கிறது. 

“பாத்தீங்களா? நான் என்ன வேணும்ன்னு சொல்றதுக்கு முன்னாடியே மீன் வந்துடுச்சு. ஒவ்வொரு வாடிக்கையாளரும் வழக்கமா என்ன சாப்பிடுவாங்கன்னு தெரிஞ்சி உபசரிக்கிறதுல இவங்கள அடிச்சிக்க முடியாது. பொதுவா ஹோட்டல் மீனுன்னாலே அது ஐஸ்ல வெச்சதாத்தான் இருக்கும். ஆனா இவுங்க, நேரா சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்துக்குப் போயி, அன்னன்னைக்குப் பிடிக்கிற மீனை வாங்கிட்டு வாராங்க. அதனாலதான் இவ்வளவு ருசி. அதேமாதிரி சமையல் அறையை எட்டிப்பார்த்தா, நம்ம வீட்ல மாதிரி பெண்கள்தான் முக்காவாசி வேலையை கவனிப்பாங்க” என்று பெருமையாகச் சொன்னார் தளவாய். 

கடையின் உரிமையாளர் ஆனந்தன் தொடர்ந்தார். “எங்க அப்பா பாலையா நாடார் 1975-ல இந்த ஹோட்டலை ஆரம்பிச்சாங்க. அப்பாவுக்கு பின்னாடி நான் நடத்திட்டு இருக்கேன். தளவாய் அண்ணாச்சி சொன்ன மாதிரி, ருசிக்கு முக்கியக் காரணம் ஐஸ் வெக்காத மீன். அதே மாதிரி, மிளகாய், மல்லி, சீரகம், வெந்தயம், மஞ்சள்ன்னு எந்தப் பொடியும் ரெடிமேடா வாங்குறது கிடையாது. நாங்களே நேரடியாகக் கொள்முதல் செஞ்சு, நாங்களே பொடியாக்கி பயன்படுத்துறோம். நிறத்துக்காக கலர் பொடியோ, ருசிக்காக அஜினோமோட்டோவோ பயன்படுத்துறதுல்ல.

பொரித்த மீன் செய்முறை:

மதியத்துக்கு மட்டுமே 40 கிலோ மீன் ஓடும். 40 கிலோவில் 300 முதல் 350 பீஸ் வரை வரும். மீன்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, சுத்தமாக கழுவி, அதன் மேல் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கொஞ்சம் மிளகுத்தூள் கலவையைத் தடவி வைப்போம். அப்புறம் அதை சுத்தமான கடலை எண்ணெயில் பொன் நிறத்தில் பொரித்து எடுப்போம். அதை ஓட்டை தட்டில் இறக்கி, எண்ணெயை வடியவிட்டு எடுத்தால் அழகான, ருசியான மீன் பொரிப்பு தயாராகிவிடும். 

மீன் குழம்பைப் பொறுத்தவரை வாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டு, வெந்தயத்தை வெறும் இரும்பு சட்டியில் வறுக்க வேண்டும். அதோடு சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள், வத்தல், மல்லித்தூள், தேங்காய்ப்பால் சிறிதளவு சேர்க்கணும். அத்துடன் புளி கரைசலையும் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்து நல்லா கொதிக்கவிடணும். கொதி நிலையில் உச்சத்தில், சுத்தம் செய்த மீன் துண்டுகளை அதில் போட்டு கொஞ்ச நேரம் கொதிக்கவிட்டு மீன் வெந்ததும் இறக்கினால், சுவையான மீன் குழம்பு தயாராகிவிடும். மீன் குழம்பைப் பொறுத்தவரை ஆறிய பின்பு சாப்பிட்டால் நல்ல ருசியாக இருக்கும். 

எங்க கடையில் ஆம்லேட்டும் பிரசித்திதான். ஆனால், அதில் பெரிய சூத்திரம்ன்னு ஒண்ணும் இல்ல. முட்டையை உடைச்சதும், நாம கலக்குறதுல தான் விஷயமே இருக்கு. கூட கொஞ்ச நேரம் கலக்குனா, ஆம்லேட் ரொம்ப மிருதுவா வரும். இதேமாதிரி கோழின்னா நாட்டுக்கோழி, ஆடுன்னா வெள்ளாடுன்னு ஒவ்வொரு அய்ட்டத்தையும் பார்த்து, பார்த்து வாங்கிச் செய்றதாலதான் இன்னிக்கும் பழமையையும், பெருமையையும் தக்க வச்சு நிக்கிறோம்” என்கிறார் உரிமையாளர் ஆனந்தன்.
பிரபு ஹோட்டலில் மீன் பொரிப்பு 175 ரூபாய், மீன் குழம்பு பீஸ் 175 ரூபாய், ஆம்லேட் 20 ரூபாயில் ருசிக்கலாம். இங்கே ஏசி அறையில் உட்கார்ந்து சுடச்சுட பொரித்த மீனைச் சாப்பிடும் ருசியே அலாதியானது!

-என்.சுவாமிநாதன்

படங்கள்: ராஜேஷ்குமார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE