தஞ்சை பெரியகோயிலின் கல்வெட்டுகளில், கோயில் கட்ட உதவிய சிற்பிகள், அவர்களது உதவியாளர்கள், குதிரைச்சேவகர்கள், தாம்பூலம் மடித்துக் கொடுத்தவர்கள், முடி திருத்தியவர்கள் என்று அனைவரது பெயரையும் மறக்காமல் பொறிக்கச் செய்தான் ராஜராஜன் என்பது தஞ்சையின் வரலாறு. அதே தஞ்சையில், தனது வீட்டின் புதுமனை புகுவிழாவுக்காக வித்தியாசமான ஸ்டைலில் அழைப்பிதழ் அச்சடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் அனீஷ்.
தஞ்சாவூர் அருகே மாப்பிள்ளைநாயக்கன் பட்டியில் வீடு கட்டியிருக்கும் அனீஷ், அதன் புதுமனை புகுவிழாவிற்காக அச்சடித்த அழைப்பிதழ்தான் கடந்த வாரம் சமூக வலைதளங்களில், மறந்து போன மனிதத்தை மீட்டெடுத்து ட்ரெண்ட் ஆனது.
‘பால் காய்ச்சப்போறோம்’ என்று தலைப் பிடப்பட்ட அழைப்பிதழ், ‘கல்யாணத்தைப் பண்ணிப்பாரு, வீட்டைக் கட்டிப்பாருன்னு சொல்வாங்க. கல்யாணம் பண்ணிட்டோம், இப்ப வீட்டையும் கட்டிட்டோம்’ என்று துவங்கி, ஹோமத்தின் நேரம் அதிகாலை 4.30 மணி முதல்6 மணி வரை என்பதைச் சொல்லும் வகையில்,
‘விடியற்காலை வரமுடியாதவங்க விடிஞ்சதுக்கு அப்புறம் வந்து சந்தோசத்தைப் பகிர்ந்துக்கங்க. நானும், என் மனைவியும் பிள்ளைகளுடன் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறோம், வருவீங்கல்ல...’ என்று உரிமையோடு அழைத்தது.
உறவினர்கள் பெயர்கள் இருக்கும் இடத்தில் அவர்களுக்கு பதிலாக, வீட்டைக் கட்டுவதற்கு வியர்வை சிந்தி உதவிய உள்ளங்கள் என்ற தலைப்பில் இருந்த பெயர்கள்தான்
இதற்கெல்லாம் முத்தாய்ப்பு. கட்டிடம் கட்டியமேஸ்திரியில் ஆரம்பித்து... கம்பி கட்டியவர், எலக்ட்ரீசியன், பிளம்பர்,பெயின்டர், டைல்ஸ் பதித்தவர் என்று அனைவரது பெயர்களையும் அவர்களுடைய உதவியாளர்களின் பெயர்களுடன் அச்சிட்டு, உழைப்பாளர்களுக்கு மரியாதை செய்திருந்தது அந்த அழைப்பிதழ். நிதியுதவி அளித்த நிதி நிறுவனங்களின் பெயர்களையும் அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த அனீஷ், அவற்றுடன் ‘பலதரப்பட்ட நகைகள்’ என்றும் சேர்த்திருந்ததில் அவரது துயரக்குறும்பும் மிளிர்கிறது.