பாதை அமைத்துத் தந்த மேதை!

By காமதேனு

தொடக்க காலத்துப் பேசும்படங்கள் தமிழ் தெரியாத பம்பாய் மற்றும் கல்கத்தாக்காரர்களால் படம் பிடிக்கப்பட்டன. இதற்காக மதராஸுக்கு வந்து நாடக நடிகர்களையும் நாடக ஆசிரியர்களையும் அவர்களுக்குச் சமைத்துப்போடச் சமையல்காரர்களையும் அழைத்துக்கொண்டு போனார்கள். நாளடைவில் தமிழர்களே நாடகக் கலைஞர்களை அழைத்துக்கொண்டு பம்பாய், கல்கத்தா, பூனா, கோலாப்பூர் என்று பயணப்பட்டுப்போய் படத்தை முடித்துக்கொண்டு திரும்பிவந்தார்கள். இந்த அலைச்சலுக்கும் அல்லலுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் ஒரு வித்தகத் தமிழர். அவர்தான் சிவகங்கை ஏ.நாராயணன்.

மவுனப்படக் காலத்திலேயே திரைப்படத் துறைக்கு வந்தவர். தமிழ் மவுனப்படங்களைக் கல்கத்தாவிலும் பின்னர் ரங்கூன், ஹாலிவுட் நகரங்களிலும் திரையிட்டு கவுரவம் சேர்த்த முன்னோடி இவர். பட விநியோகம், திரையிடல், தயாரிப்பு என சினிமாவின் முக்கியமான மூன்று பிரிவுகளில் 15 ஆண்டுகள் பெற்ற அனுபவத்துக்குப்பின், சென்னை சேத்துப்பட்டில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ‘சவுண்ட் சிட்டி’ என்று அழைக்கப்பட்ட தமிழ் சினிமாவின் முதல் சவுண்ட் ஸ்டுடியோவை 1.4.1934-ல் தொடங்கினார். அது ‘சீனிவாசா சினிடோன்’ ஸ்டுடியோ என்றும் அழைக்கப்பட்டது. அதில்தான் முழுவதும் சென்னையில் உருவாக்கப்பட்ட முதல் பேசும் படத்தை இயக்கித் தயாரித்தார் ஏ.நாராயணன். அந்தப் படம் அதே ஆண்டில் வெளிவந்த ‘நினிவாச கல்யாணம்’.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திரைப்படத்தின் வழியே இன்னொரு மைல் கல் சாதனையும் நிகழ்த்தப்பட்டது. பெண்கள் என்றால் நடிகைகள் மட்டுமே என்று இருந்ததை மாற்றிக் காட்டினார் நாராயணன். பம்பாயிலும் பின்னர் ஹாலிவுட்டிலும் தனது மனைவி மீனாவை தன்னுடன் ‘சவுண்ட் ரெக்கார்டிஸ்ட்’ பயிற்சி பெற ஊக்கப்படுத்தியிருந்தார். சவுண்ட் சிட்டி தொடங்கியபோது அதன் ஒலிப்பதிவாளராக மீனாவையே நியமித்தார். அவரும் 5 படங்களுக்கு ஒலிப்பதிவாளராக பணியாற்றி சினிமா வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்டார்.

சென்னையின் முதல் சவுண்ட் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புத் தளத்தின் மேற்கூரையில் தார்பாய் போடப்பட்டிருக்கும். முழுவதும் சூரிய ஒளியில் படமாக்கியதால், காலை 9 மணிக்கு படப்பிடிப்புத் தொடங்கும் போது கூரையின் தார் பாய் விலக்கப்படும். படப்பிடிப்புத் தளத்தின் கூரைமீது வந்து அமரும் காகங்களைத் துரத்தி அடிப்பதற்காகவே கூரையின் மீது ஐந்துக்கும் அதிகமான ஊழியர்களை நாராயணன் வேலைக்கு அமர்த்தியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE