கத்திரிக்காய் ராஜாவுக்கு காரமான பொண்ணு..!- கதைசொல்லி வனிதாமணி

By காமதேனு

மழலைகளின் சங்கீதத்தால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது அந்த வீடு. பாட்டு பாடுகிறார்கள், தட்டாமாலை சுற்றுகிறார்கள். ஒரே துள்ளாட்டம். குழந்தைகளுடன் குழந்தையாய் விளையாடிக்கொண்டே ஏதேதோ கதைகளைச் சொல்கிறார் வனிதாமணி. கத்திரிக்காய் ராஜா, சுண்டக்காய் ராணி, சூரிய சிப்பாய், சந்திர தோசை, நட்சத்திரப் பொரியல் என விதவிதமான கதை மாந்தர்களின் உலகத்தில் சொக்கிப்போய் கதை கேட்கிறார்கள் குழந்தைகள். மழலைகளிடம் சந்தோஷமாக தஞ்சமடைந்த ஒரு கதைகள் நூறு கதைகளைப் படைக்கின்றன. அதை கேட்கும் நமக்கு வயது பத்தாகிறது!

ஈரோடு மாவட்டம், திண்டல் தெற்குப்பள்ளம் தெருவில் இருக்கிறது வனிதாமணியின் வீடு. சனி, ஞாயிறு கிழமைகளில் மாலை 5 மணியானால் அந்த வீட்டுக்கு அழகு கூடிவிடுகிறது. பூங்கொத்துகளைப்போல முகம் மலர குழந்தைகள் அங்கு வந்து சேர்கிறார்கள். உள்ளே இருக்கிறது ‘பட்டாம்பூச்சி’ நூலகம். அழகழகாய் அடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள். பெரும்பான்மையானவை குழந்தைகளுக்கானது. பிஞ்சுக்கரங்கள் பட்டவுடன் பட்டாம்பூச்சியாக தாள்களைப் படபடக்கின்றன புத்தகங்கள். அடுத்து, கதை சொல்லும் நிகழ்ச்சி...

“முருங்கைக்காய் பக்கத்துல கத்திரிக்கா ராஜா. அடேங்கப்பா உசரமான பொண்ணைப் பார்த்து பயந்துபோனான் ராஜா. சுண்டக்காய் பக்கத்துல கத்திரிக்கா ராஜா; சுட்டியான பொண்ணைப் பார்த்து சுத்திக்கிட்டே போனான் ராஜா. பாகற்காய் பக்கத்துல கத்திரிக்கா ராஜா; கசப்பான பொண்ணைப் பார்த்து கத்திகிட்டே போனான் ராஜா. தக்காளி பக்கத்துல கத்திரிக்கா ராஜா; செவப்பான பொண்ணைப் பார்த்து வெட்கப்பட்டே போனான் ராஜா. பச்சை மொளகாப் பக்கத்துல கத்திரிக்கா ராஜா; காரமான பொண்ணைப் பார்த்து கதறிக்கிட்டே போனான் ராஜா..!” வனிதா மணி உடல்மொழியுடன் பாடும் இந்தப் பாடலுக்கு ஏற்ப குழந்தைகளும் பாடுகிறார்கள். பிறகு, அவர்களே இதுபோன்ற கதைகளை உருவாக்குகிறார்கள். நேரம் போவதே தெரியவில்லை.

கட்டெறும்பு குட்டிப் பாப்பாவை கடித்த கதை. பட்டாம்பூச்சி பள்ளிக்கூடத்துக்குப் போன கதை, கிளியும் காக்காவும் பாடும் கதை என எண்ணற்ற கதைகள் அங்கு உலாவருகின்றன. கடலை மிட்டாய் உருவான கதையைக் கேட்க கடலை மிட்டாய்களே தட்டு நிறைய குவிந்துவிடுகின்றன. கதையோடு சேர்த்து கடலை மிட்டாயையும் வாயில் தேனொழுக உருட்டுகிறார்கள் குழந்தைகள். திரும்பவும் பட்டாம்பூச்சி நூலகம். புத்தகங்களில் இருக்கும் பொம்மைகளை ஆசையாய் குழந்தைகள் தடவ ஒவ்வொரு பொம்மையாக உயிர் பெறுகின்றன. “கரடி பொம்மையைத் தொட்டவுடன் கரடி மாமா கதை சொன்னுச்சாம். புலி பொம்மையைத் தொட்டவுடன் புலி அண்ணா புல்டோசர் கேட்டுச்சாம். குரங்கு பொம்மையைத் தொட்டவுடன் குரங்குத் தம்பி கிச்சனுக்கு தாவிப்போயிட்டானாம். மயிலு பொம்மையைத் தொட்டவுடன் மயிலு தங்கச்சி தோகை விரிச்சி டான்ஸ் ஆடிச்சாம்...” என்று புத்தகங்களிலிருந்தும் கதைகள் விரிகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE