கல்யாண வயசுல காது குத்து!- இது அரவம்பட்டி அலப்பரை!

By காமதேனு

பொதுவா, புள்ள பொறந்து ஒருவருசம் ஆகிட்டாலே,  “சட்டுப்புட்டுன்னு காதைக் குத்தி கடுக்கனைப் போடுங்கப்பா” என்று கிராமத்துப் பெருசுகள் நச்சரிக்க ஆரம்பிச்சிருவாங்க.  போன வாரம், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டைக்குச் சமீபமா இருக்கிற அரவம்பட்டியில ஒரு சம்சாரி வீட்டுல காதுகுத்து. என்னையும் கூப்டுருந்தாங்க, நானும் (குடும்ப சகிதம்!) போயிருந்தேன்.

 அந்த வீட்டுல வாய்த்துடுக்கா பெருசுங்க இல்ல போலிருக்கு!  இருந்துருந்தா, கல்யாண வயசுக்கு வந்த பின்னாடியும் அண்ணன் - தம்பி ரெண்டு பேருக்கும் காலாகாலத்துல காதுகுத்தாம விட்டுருப்பாங்களா? அட, அப்டியே விட்டுருந்தாக்கூட டீஜண்டா போயிருக்கும். இப்ப, யாருக்கோ தீடீர்னு ஞானோதயம் வந்து, ரெண்டு பேருக்கும் காதுகுத்துக்கு தேதி குறிச்சிட்டாங்க (அட, காதுகுத்து கெடக்கு விடுங்க... கறிச்சோறு தின்றதுக்கும் நல்லியக் கடிக்கிறதுக்கும் கால நேரம் கூடிவரணும்ல..!). காதுகுத்து ஜோடியில அண்ணன்காரர் இளங்கோ சிங்கப்பூர்வாசி. (மேடையில இருந்த பேக் டிராப்ல, ‘கேம்ப் சிங்கை’ன்னு மறக்காம போட்டுருந்தாவ!).  எளையவரு இளையராஜா உள்ளூர் புள்ளி!

காதும் காதும் வெச்ச மாதிரி...

அண்ணே சிங்கப்பூருன்னா... உள்ளூருல இருக்க தம்பி சும்மா இருப்பாரா... கந்தர்வகோட்டை பஸ் ஸ்டாண்டுலருந்தே கொண்டாட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்க. அடுத்தவங்களுக்குத் தெரியாம காதும் காதும் வெச்ச மாதிரி குத்தி முடிக்க வேண்டிய விஷயத்தை இப்புடியா காப்றா பண்றது! முப்பது நாப்பது மகளிருங்க ஏதோ சின்னப் புள்ளைங்களுக்குக் காதுகுத்தப் போறாப்புல சீர்வரிசை தட்டுகள வெச்சிக்கிட்டு பஸ்ஸ்டாண்டுல காத்துருந்தாங்க. அத்தனையும் தாய் மாமன் வீட்டுச் சீராம்!
 ரெட்டை நாயனக்காரங்க, ‘சிங்கார வேலனே தேவா...’ன்னு ஊதி முழக்கிட்டு இருந்தாங்க. தவில்காரர் வரும்போது வீட்ல சண்டையப் போட்டுட்டு வந்திருப்பாரு போலிருக்கு... சும்மா சொத்து... சொத்துன்னு  தட்டிட்டு இருந்தாரு. அந்த நேரம் பார்த்து ஒரு இளந்தாரிப் பையன் ஆயிரம் வாலாவை கொளுத்திப்போட்டு அடுத்த ஆட்டத்தை ஆரம்பிச்சான். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE