அரியநாச்சி 7- வேல ராமமூர்த்தி

By காமதேனு

‘ஆத்தாடீ... சமஞ்சிட்டேனே!'

‘லோட்டா’ கடை, பகல்லெ டீக்கடை. சாயங்காலம்  சாராயக்கடை.
பெருநாழி முளைக்கொட்டுத் திண்ணையில் இருந்து போகிற தெரு, மேற்கே போய் முடிகிற இடம் லோட்டா கடை.
லோட்டாவுக்கு அப்பன் ஆத்தா வச்ச பேரு  ‘பெரியசாமி’. பட்டப் பேரு  ‘லோட்டா’.  அவன் தம்பி  ‘சண்முகவேலு’. அவனுக்குப் பட்டப் பேரு  ‘டம்மு’. 
பெருநாழிக்குள்ளே பட்டப் பேரு இல்லாத பய இருக்கமாட்டான். நரிவேலு, நாறி,  கீரைச்சட்டி, விஷக்குட்டை, புளிமூட்டை, குசுவினி, குளவித் தட்டு, கொடுக்கடி,  சின்னப் பிள்ளையிலெ மோண்டவரு, சிறகி மகன், வட்டி மஸா, வண்டிக்காளை இப்படிப் பல தோதுகளில் பட்டப் பேரு.

வெள்ளையத் தேவன் மகன் பாண்டிக்கு பட்டப் பேரு ‘கொடுக்கடி’. யார் கிட்டேயும் அணைஞ்சு பேசமாட்டான். தேள் கொடுக்கு மாதிரி  ‘பட்டு… பட்டு…’ன்னு கொட்டுறவன்  ‘கொடுக்கடி’. 

அவன் பொண்டாட்டி குமராயிக்கு பட்டப் பேரு… ‘குளவித் தட்டு’. அவகிட்டே பேச்சுக் கொடுத்தால் குளவித் தட்டிலே கை வச்ச மாதிரி தான்! ‘வீய்… வீய்ய்…’ன்னு ஆஞ்சுருவா ஆஞ்சு! 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE