அக்கா சொன்னாங்க.. அண்ணன் கேட்டுக்கிட்டாரு..!- அடங்கிப் போன அழகிரியின் அமைதிப் பேரணி!

By காமதேனு

அமைதிப்படை திரட்டி சென்னையில் அதிரடி காட்ட நினைத்த அழகிரி, வந்த சுவடு தெரியாமல் மதுரையம்பதி திரும்பியிருக்கிறார். ஆளும் கட்சியாக இருக்கும் போது தனது பிறந்த நாளுக்குக் கூட்டிய கூட்டங்களைக்கூட அமைதிப் பேரணிக்கு அழகிரியால் கூட்டமுடியாமல் போனது பரிதாபம்தான்!

இப்போது மட்டுமல்ல, திமுக அதிகாரத்தில் இல்லாத நாட்களில் அழகிரியின் பிறந்த நாளுக்கு பெரியதாக மரியாதை இல்லை என்பதை மரியாதை நிமித்தமாக அவ்வப்போது உணர்த்தினார்கள் உடன்பிறப்புகள். ஆனால், அவரைச் சுற்றியிருந்தவர்கள் அழகிரிக்குத் தெரியாமல் அதை மறைத்தார்கள். அழகிரியும் அதை உணர மறந்தார். இதை எல்லாம் தாண்டி, சென்னையில் நடந்த அமைதிப் பேரணிக்கு சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டதும் ஆச்சரியம்தான். பேரணிக்கு வந்தவர்களில் பெரும்பகுதியினர் அழகிரிக்காக வந்தார்கள் என்று சொல்வதைவிட ஸ்டாலின் மீதிருக்கும் அதிருப்தியை எடுத்துரைக்க வந்தார்கள் என்பதுதான் நிஜம்.

அந்தர் பல்டி அடித்த அழகிரி

இந்தப் பேரணியைத் தவிர்க்கும்படி கருணாநிதி குடும்பத்து உறவு ஒருவர் முந்தைய நாள் வரை மெனக்கெட்டார். தலைமையிலிருந்தும் வேறு வழியில் அழகிரிக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. இதற்குப் பிறகுதான் அழகிரி, “ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொள்கிறேன். கட்சியில் சேர்த்துக்கொண்டால் போதும்” என்று அந்தர் பல்டி அடித்தார். இதற்கும் எதிர்த்தரப்பிலிருந்து எவ்வித ரியாக்‌ஷனும் வராத நிலையில்தான் , “நாங்க பிரச்சினை பண்றதுக்காக பேரணி நடத்தலை. இப்ப எங்களக் கேக்குறவங்க அவர் பொண்ணு அஞ்சலி பேரணி நடத்தினப்ப எதுவும் கேட்டீங்களா?” என்று கருணாநிதி குடும்பத்துப் பெண்மணியிடம் அழகிரி தரப்பினர் கேட்டிருக்கிறார்கள். அதற்கு, “அது கட்சியின் மகளிர் அணி சார்பா நடத்துன பேரணி” என்று பதிலளிக்கப்பட்டது. அப்போதும் விடாதவர்கள், “அப்படியானால் இது விசுவாச தொண்டரணி நடத்தும் பேரணி” என்று கறார் காட்டியிருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE