முதல்வர் வர்றார்... பணம் கொடுங்கோ..!

By காமதேனு

அப்ப விட்டுட்டாங்க... இப்ப அலப்பரை பண்றாங்க!

திருச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் மாவட்டச் செயலாளரும் எம்பி-யுமான குமார் ஆகியோர் அதிமுக முக்கியப் புள்ளிகள். ஆனால், இவர்களை எல்லாம் விட்டுவிட்டு, முக்கொம்பு அணையை சீரமைக்கும் பொறுப்பை போக்குவரத்துத்துறை அமைச்சர் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் ஒப்படைத்திருக்கிறார் முதல்வர். கொள்ளிடத்தில் 2 லட்சம் கன அடி நீர் வெளியேறியபோது, திருச்சி விஐபி-க்கள் மூவரும் அதிகாரிகள் புடைசூழ முக்கொம்பு அணையை பேருக்குப் பார்வையிட்டுத் திரும்பினார்களாம். அப்போதே ஒழுங்காகக் கவனித்திருந்தால் அணை உடைவதைத் தடுத்திருக்க முடியுமாம். அதேசமயம் தனது மாவட்டத்தில் உடையும் நிலையில் இருந்த மாயனூர் காவிரி ஆற்றின் கரையை உடையாமல் தடுக்க முன்கூட்டியே உரிய நடவடிக்கைகளை எடுத்தாராம் விஜயபாஸ்கர். இதையடுத்தே, முக்கொம்பு அணையை சீர்படுத்தும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தாராம் முதல்வர். அவரும் கரூர் பகுதியிலிருந்து பாறாங்கற்களைக் கொண்டு வந்து குவித்து, ஸ்டாலின் வருகைக்கு முன்பே அணையை ஓரளவுக்கு சரிசெய்து முடித்தார். இப்போது லோக்கல் விஐபி-க்கள் ஏதோ தாங்களே உடைந்த அணையைத் தூக்கி நிறுத்தியது போல் அடிக்கடி அணைப் பக்கம் வந்து அலப்பரையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் வர்றார்... பணம் கொடுங்கோ..!

இப்போதெல்லாம் அடிக்கடி சேலத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் முதல்வர். இதனால், கட்-அவுட், கொடி, பத்திரிகை விளம்பரங்கள் எனக் கட்சிக்காரர்களும் அடிக்கடி பந்தா காட்ட வேண்டியிருக்கிறதாம். ஆனால், இவர்கள் பந்தாகாட்ட ஃபைனான்ஸை வேறு இடத்திலிருந்து கறக்கிறார்களாம். தாலுகா ஆபீஸ், மாநகராட்சி, வணிகவரித் துறை என ஒவ்வொரு துறையும் இவ்வளவு தரவேண்டும் என்று டார்க்கெட் வைத்து வசூல் செய்து முதல்வர் வருகையைக் கொண்டாடுகிறதாம் சேலம் அதிமுக. இதனால், முதல்வர் விசிட் என்றாலே அலர்ஜியாகிக் கிடக்கிறார்கள் சேலத்தின் அரசுத் துறை அதிகாரிகள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE