என்றென்றும் ஏழுமலையான்! - 6: ஏழுமலையானின் இசை சேவகி எம்.எஸ்.சுப்புலட்சுமி

By என். மகேஷ்குமார்

திருப்பதி ஏழுமலையானுக்கு அரசர் காலம் முதல் இப்போதைய அம்பானி காலம் வரை பக்தர்கள் பலரும் தங்களால் முடிந்த அரிய சேவைகளைச் செய்து வருகின்றனர். சிலர் ஏழுமலையானுக்கு பொன்னும், பொருளும் காணிக்கையாக வழங்குகிறார்கள். இன்னும் சிலர் தங்களது வாழ்க்கையையே அந்தத் திருவேங்கடவனுக்கு அர்ப்பணித்துவிடுகிறார்கள். அப்படித் தன்னையே அந்த ஏழுமலையானுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்களில் ஒருவர் மறைந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி. 

எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் பாடி துயில் எழுப்பிய இந்த கான சரஸ்வதியின் புதல்வி, ஏழு ஸ்வரங்களை ஏழுமலையானுக்கு பா மாலைகளாக சூட்டி அழகு பார்த்தவர். தேவஸ்தானத்தின் சுமார் 50 ஆண்டுகால ஆஸ்தான வித்வானாக விளங்கிய எம்.எஸ், அந்த திருவேங்கடவனுக்கு தனது இசை ஞானத்தின் மூலம் தனது வாழ் நாள் முழுவதும் சேவை செய்தவர்.

 8 வயதில் பாடத் தொடங்கியவர்

தனது 8 வயதில் பாடத் தொடங்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி, இந்திய இசை உலகின் சிகரம் தொட்டவர் எனக் கூறலாம். 1916-ல் பிறந்த இவர், தனது 88 வயது வரை இசைத்துறையில் கொடி கட்டிப் பறந்தார். 1926-ல், இவரது பத்தாவது வயதில் இவரின் முதல் இசைத்தட்டு ‘மரகத வடிவும், செங்கதிர் வேலும்’ வெளியானது. 

அதன்பிறகுதான் இவரது பெயர் இசைத்துறையில் வெளி உலகிற்கு அறிமுகமானது. பிறகு, மைசூர் மகாராஜாவின் சமஸ்தானத்தில் பாடிய பிறகு, தென்னிந்தியா முழுவதும் இவர் பிரபலமானார் எம்.எஸ்!

இதனைத் தொடர்ந்து இவர் 1938-ல் ‘சேவாசதனம்’ எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து, திரையுலகில் கால் பதித்தார். பின்னர், 1940-ல் ‘சகுந்தலை’ எனும் படத்தில் நடித்தார். அப்போது இவர் ‘கோகில கானம் இசைவாணி’ என விளம்பரம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து 1940-ல், தனது 25-வது வயதில், சகுந்தலை படத்தைத் தயாரித்த சதாசிவத்தைத் திருமணம் செய்து கொண்டார். திருமணமான பின்னர் இவர் 1941-ல், ‘சாவித்திரி’ எனும் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து 1948-ல், தமிழில் இவர் நடித்த ‘ பக்த மீரா’ படம் வெளியானது. இப்படத்தில் வெளிவந்த ‘காற்றினிலே வரும் கீதம்’ உட்பட அனைத்துப் பாடல்களும் பிரபலம் ஆகின.

இசை ராணிக்கு முன்னால்...

மவுன்ட் பேட்டன் பிரபு தம்பதியினர், பிரதமர் நேரு, சரோஜினி நாயுடு உள்ளிட்டோர் எம்.எஸ்-ஸின் இசைக்கு மயங்கியவர்கள். “இந்த இசை ராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர்தானே” பிரதமர் நேருவே எம்.எஸ்ஸைப் புகழ்ந்துள்ளார். “இவரது குரல் இசை, கேட்பவர்களை மெய்மறக்கச் செய்து, அக்கணமே அவர்களை தெய்வத்தின் சன்னிதில் நிற்க வைத்து விடுகிறது” என காந்திஜியும் புகழாரம் சூட்டியுள்ளார். இசைத்துறையில் எம்.எஸ்-ஸின் சாதனைகள் சொல்லி மாளாது. இவர், பத்ம பூஷண் (1954), சங்கீத அகாடமி விருது (1956), சங்கீத கலாநிதி (1968), இசைப்பேரறிஞர் விருது (1970), மக்சேசே பரிசு (1974), பத்ம விபூஷண் (1975), சங்கீத கலாசிகாமணி விருது (1975), காளிதாஸ் சம்மன் விருது (1988), நாட்டின் ஒருமைப்பாட்டிற்கான ‘இந்திரா காந்தி’ விருது (1990) என விருதுகளைக் குவித்த எம்.எஸ்-ஸுக்கு நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதும் 1998-ல் வழங்கப்பட்டது. மேலும் திருப்பதி  வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம் உட்பட பல்வேறு பல்கலை கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இவரை அங்கீகரித்தன. இத்தனை விருதுகளுக்குச் சொந்தக்காரரான இசைராணி எம்.எஸ். சுப்புலட்சுமி, திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தராவார்.

திருமலையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை கச்சேரி

திருமலையின் ஆஸ்தான வித்வான் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது, ஏழுமலையானை தரிசிக்க அவர் திருமலை வந்தார். அப்போது, எம்.எஸ்-ஸின் கச்சேரியை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது. கோயிலுக்குள் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் எம்.எஸ்-ஸின் கச்சேரி நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் வரை நடந்த இந்தக் கச்சேரியை நேரடி ஒலிபரப்பு செய்தது தேவஸ்தானம். கச்சேரியைக் கேட்ட லால்பகதூர் சாஸ்திரியும் அவரது குடும்பத்தினரும் மெய் சிலிர்த்துப் போயினர். பக்தர்களும் அந்த காந்தர்வ இசையைக் கேட்டு பரவசமடைந்தனர். கச்சேரி முடிந்ததும் மறுநாள் காலையில் எம்.எஸ். சுப்புலட்சுமியை சந்தித்த தேவஸ்தான அதிகாரிகள், “நீங்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக இருக்க சம்மதிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தனர்.

 இதைக் கேட்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்த எம்.எஸ், திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக இருக்க சம்மதித்தார். ஆனால், தன்னை விட மூத்த இசைக்கலைஞர் களையும் ஆஸ்தான வித்வான்களாக அறிவித்தால், தான் மேலும் மகிழ்ச்சி அடைவேன் எனவும் வேண்டுகோள் வைத்தார். இதனால், அவரோடு 
மேலும் சிலரும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எஸ். திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக இருந்தார்.

எம்.எஸ்-ஸின் ஏழுமலையான் சுப்ரபாதம் பாரத ரத்னா டாக்டர் எம்.எஸ். சுப்புலட்சுமி, திருப்பதி ஏழுமலையானுக்கு அதிகாலை நடைபெறும் சுப்ரபாத சேவையில் அதிக அளவில் பங்கேற்றுள்ளார். சுவாமியை துயிலெழுப்ப இவர் பாடிய திருப்பள்ளி எழுச்சிப் பாடல் இசைத்தட்டு 1963-ல், வெளியிடப்பட்டது. ‘ வெங்கடேஸ்வரா சுப்ரபாதம்’ என்ற அந்த இசைத்தட்டு, ஏழுமலையான் பக்தர்களை இன்றளவும் பரவசப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த இசைத்தட்டு மூலம் வரும் ராயல்டி முழுவதையும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கே வழங்கினார் எம்.எஸ். இதுபோலவே தமிழில் இவர் பாடிப் பதிவான திருவேங்கடமுடையான் திருப்பள்ளி எழுச்சி ஒலிநாடாவும் மிகவும் பிரபலமானது. அதில், திருப்பள்ளி எழுச்சி மட்டுமின்றி, ஏழுமலை யானின் பக்தி பாடல்கள் பலவும் இடம்பெற்றன. திருப்பதி தேவஸ்தானத்தினர் கேட்டுக்கொண்டதற்குஇணங்க, கடந்த 1981-ல், அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள் வெளியிடப்பட்டன. இதேபோன்று தொடர்ந்து 2-வது முறையும் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள் எம்.எஸ்ஸின் குரலில் வெளியாகின. 

இவை இரண்டும் கேட்க கேட்க திகட்டாதவை களாக பக்தர்களின் மனதை இன்றளவும் ஆக்கிரமித்து வைத்துள்ளன. 15 கோடி ரூபாய் ராயல்டி
இதுதவிர, ‘பாலாஜி பஞ்ச ரத்ன மாலா’ எனும் இசைத்தட்டையும் எச்.எம்.வி நிறுவனம் வெளியிட்டது. நாடு முழுவதிலும் வெளியிடப்பட்ட இந்த இசைத்தட்டுக்களை காஞ்சி மகா பெரியவர், புட்டபர்த்தி சாய் பாபா, இந்திரா காந்தி, ராமகிருஷ்ணா மடாதிபதி போன்றோர் வெளியிட்டனர். இதில் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள், பல ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள், ராமாயணம், ஹனுமான் சாலீசா, கராவலம்ப ஸ்தோத்திரம்,கனகதரா ஸ்தோத்திரம் முதலானவைகளை எம்.எஸ் மனமுருகி பாடி இருப்பார். திருப்பதி ஏழுமலையான் மீது கொண்டுள்ள பக்தியால் தனது வெளியீடுகளுக்காகக் கிடைத்த ராயல்டி அனைத்தையும் திருப்பதி தேவஸ்தானத்திற்கே எழுதிக் கொடுத்துவிட்டார் எம்.எஸ். அதன்படி, கடந்த 2006 வரைக்கும் சுமார் 15 கோடி ரூபாய் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ராயல்டி காணிக்கையாகக் கிடைத்துள்ளது.

புகழின் உச்சியில் இருந்தபோது, எள்ளளவும் மறவாது திருப்பதி ஏழுமலையானுக்கு தனது இசை சேவையை ஆற்றி வந்துள்ளார் எம்.எஸ். திருமலையில் தான் நடத்திய இசைக் கச்சேரிகள் அனைத்துக்குமே எவ்வித கட்டணமும் பெறாமல் இலவசமாக நடத்திக் கொடுத்தவர். எம்.எஸ்.சுப்புலட்சுமி மறைந்தபோது, யாருக்கும் கொடுக்காத கவுரவத்தை திருப்பதி தேவஸ்தானம் அவருக்கு அளித்தது. தொடர்ந்து 3 நாட்களுக்கு எம்.எஸ். பாடிய பக்தி பாடல்கள், கீர்த்தனைகளை திருமலை, திருப்பதி, திருச்சானூர் உட்பட அனைத்து தேவஸ்தான கோயில்களிலும் ஒலிக்க வைத்து அவருக்கு சிறப்பு மரியாதை செய்தது தேவஸ்தானம்.

சபரி கிரீஷ்

எம்.எஸ் சுப்புலட்சுமி ஒரு கான சரஸ்வதி எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகியவர்  வெங்கடேஸ்வரா மியூசிக் கல்லூரி பேராசிரியர் சபரி கிரீஷ். “எம்.எஸ் அம்மா ஒரு கான சரஸ்வதி” எனப் புகழாரம் சூட்டும் இவர், “எனக்கு சிறு வயது முதலே எம்.எஸ் அம்மாவைத் தெரியும். ஆனால், அவ்வளவு பழக்கம் இல்லை. நான் சென்னையிலிருந்து திருப்பதி வந்த பிறகு அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகிட்டியது. எம்.எஸ். அம்மா அவர்கள் பல முறை திருப்பதி பிரம்மோற்சவ விழா கச்சேரிகளில் பங்கேற்று தனது சங்கீதத்தால் பக்தர்களை பக்தி மழையில் நனையவைத்துள்ளார். அவர் பாடிய  வெங்கடேஸ்வரா சுப்ரபாதம் உலக பிரசித்தி பெற்றது. பக்தி ததும்ப அவர் கீர்த்தனைகள் பாடுவதை வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு காந்த சக்தி அந்தக் குரலுக்கு உண்டு. அம்மாவின் கானத்தைப் போலவே அவர் வீட்டு சுக்குக் காபியும் மிகவும் பிரபலம். நான் அவரது வீட்டிற்கு போகும் போதெல்லாம் அவரே சுக்குக் காபி போட்டு வந்து கொடுப்பார். செப்டம்பர் 16-ம் தேதி அவருக்கு 103-வது பிறந்த நாள் வருகிறது. அதைத் திருமலையில் சிறப்பாகக் கொண்டாடத் தீர்மானித்திருக்கிறோம்” என்கிறார்.

திருப்பதியில் வெண்கல சிலை

ஏழுமலையானுக்கு எம்.எஸ் செய்த இசைத் தொண்டிற்கு நன்றி சொல்லும் விதமாக, கடந்த 2006-ம் ஆண்டு, மே மாதம், 29-ம் தேதி, திருப்பதி பேருந்து நிலையம் அருகே முக்கியக் கூட்டு ரோட்டில், எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு வெண்கல சிலை நிறுவப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானமும், திருப்பதி நகர வளர்ச்சி கழகமும் இணைந்து இந்தச் சிலையை நிறுவின. திருமலையின் அடிவாரத்தில் சிலையாய் நிற்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரல் திருப்பதியில் திரும்பிய பக்கமெல்லாம் என்றைக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும்!

(முகங்கள் வரும்...)

-என்.மகேஷ்குமார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE