அனைத்துத் துறையிலும் சாட்டையைச் சுழற்றுங்கள்!

By காமதேனு

சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளைக் கூண்டோடு இடம் மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம். மக்களின் குறைகளை நெருக்கமாகக் கண்டுணர்ந்து களைய வேண்டும் என்று காந்தி கண்ட கனவின் நீட்சியே உள்ளாட்சி அமைப்புகள். கிராம உள்ளாட்சிகளுடன் ஒப்பிடுகையில் மாநகராட்சிகளுக்கு மத்திய - மாநில அரசுகள் ஒதுக்கும் ஆதாரங்கள் அதிகம். இதனைக்கொண்டு மக்களின் குறைகளை மிகச் சிறப்பாகத் தீர்க்க இயலும்.

இதற்காகதான் மாநகராட்சிகளில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்வாகக் கட்டமைப்பு மண்டலம், வார்டுகள் வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தனித்தனி நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களின் சுகாதாரம், கல்வி, அடிப்படை வசதிகள் என சேவைகள் தொடங்கி நிர்வாகம் செய்வதுவரை நெறிமுறைப்படுத்த இந்தக் கட்டமைப்பு உதவுகிறது. ஒரு மாநகராட்சியின் ஆணையாளர் தொடங்கி கடைநிலை ஊழியர்வரை நேர்மையுடன் கடமையைச் செய்தாலே கடைக்கோடி மனிதனுக்கும் மாநகராட்சியின் சேவைகளைச் செலுத்த இயலும். 

பிறப்பு - இறப்பு பதிவுச் சான்றிதழ் பெறுவது தொடங்கி கட்டிடங்கள் கட்டுவது, தொழில் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் பெறுவது வரை வெளிப்படையான, லஞ்சம் இல்லாத நிர்வாகத்துக்கு வழிசொல்கிறது டிஜிட்டல் தொழில்நுட்பம். இதை எல்லாம் மீறி லஞ்சம் வாங்கி மக்களை வதைக்கிறார்கள் பெரும்பாலான அதிகாரிகள். லஞ்சம் வாங்குவதையும் அவர்கள் தங்களின் ஊதியத்தைப் போன்ற உரிமையாகக் கருதுவதை உள்ளாட்சிகளில் மட்டுமல்ல பல துறைகளிலும் பார்க்க முடிகின்றது. ஆளும் அதிகார வர்க்கமும் அதிகாரிகளை லஞ்சம் வாங்கத் தூண்டுவதை மறுப்பதற்கில்லை.

இதுபோன்ற  ஊழல் அதிகாரிகளை இடம் மாற்றினால் மட்டும் ஊழல் ஒழிந்துவிடும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இங்கு செய்த வேலையைத்தான் போகும் இடத்திலும் அவர்கள் செய்துகொண்டிருக்கப்போகிறார்கள். எனவே, இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் அனைத்துத் துறையிலும் அனைத்து நிலையிலும் தனது சாட்டையை சுழற்றினால் மட்டுமே மக்களுக்கு நிம்மதி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE