பதறும் பதினாறு 5: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!

By பிருந்தா எஸ்

அனுஷாவைப் போலத்தான் இன்று பெரும்பாலான பதின்பருவக் குழந்தைகள் சமூக ஊடகங்களே கதியாகக் கிடக்கிறார்கள். பல்வேறு திசைகளில் இருந்தும் தடம் மாறுவதற்கான வாய்ப்பு, வாசலைத் தட்டும்போதெல்லாம் அதற்கு வழிவிட அவர்கள் தயங்குவதே இல்லை. பெற்றோருக்குப் பயந்தோ அல்லது தங்களுக்குள் இயல்பாக இருக்கும் எச்சரிக்கை உணர்வாலோ பல குழந்தைகள் எல்லை தாண்டுவதில்லை. ஆனால், வயதுக்கே உரிய ஆர்வமும் துறுதுறுப்பும் எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தேடலும் இருக்கிற குழந்தைகள், அந்தப் பொறிக்குள் சட்டெனச் சிக்கிக்கொள்கிறார்கள்.

எட்டு வயதில் தொடங்கும் ஈர்ப்பு!

உடலுக்குள் சுரக்கும் ஹார்மோன்களைப் பொறுத்து, குழந்தைகளுக்கு எட்டு வயதிலிருந்தே எதிர் பாலின ஈர்ப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு அந்த ஈர்ப்பின் அளவு அதிகமாகக்கூட இருக்கலாம். அது அவர்களது இயல்பான செயல்பாடுகளைப் பாதிக்காதவரை தவறில்லை. ஆனால், அதற்குள்ளேயே அவர்கள் மீள முடியாமல் மூழ்கிக் கிடப்பதுதான் ஆபத்து. ஆர்த்தி அப்படியொரு பாதையில்தான் பயணித்துக்கொண்டி ருந்தாள். வீட்டில் சிறு சந்தேகத்தைக்கூட ஏற்படுத்தாத வகையில் அவளது செயல்பாடுகள் இருந்ததுதான் ஆச்சரியம். ஒரு நாள் பள்ளியில் இருந்து அழைப்பு வந்தபோதுதான் ஆர்த்தியின் அம்மாவுக்கு ஓரளவுக்கு விஷயம் புரிந்தது. ஏழாம் வகுப்புப் படிக்கும் ஆர்த்தி, தன்னுடன் படிக்கும் மாணவன் ஒருவனிடம் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதாக வகுப்பு ஆசிரியர் புகார் சொன்னார். அதில் கண்டிக்கவோ பயப்படவோ ஏதுமில்லை என்று ஆர்த்தியின் அம்மா சொன்னார். வகுப்பைத் தாண்டி பள்ளிக்கு வெளியேயும் அவர்கள் பேசிக்கொள்வதாகவும் அடிக்கடி பரிசுப் பொருட்களைப் பரிமாறிக்கொள்வதாகவும் ஆசிரியர் சொன்னார். படிப்பிலும் ஆர்வம் காட்டுவதில்லை என அவர் சொன்னபோது ஆர்த்தியின் அம்மாவுக்கு மகளின் நிலை புரிந்தது. தன்னால் முடிந்த அளவு மகளைப் பார்த்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு வந்தவர், அந்த நொடி முதல் மகளைக் கண்காணிக்கத் தொடங்கினார்.

பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் ஆர்த்தி வழக்கம்போல மொபைலை எடுத்துப் பேசினாள். அவள் தோழிகளிடம் பேசுவாள் எனக் கண்டுகொள்ளாமல் விட்ட அம்மா, இப்போது காதைத் தீட்டிக்கொண்டு கவனித்தார். “இதுவொரு விஷயமே இல்லடி. உனக்குப் பிடிச்ச கிரீட்டிங் கார்டை எடுத்துக்கோ. 

வீட்ல யாருக்கும் தெரியாம பெட்ரூமுக்குள்ள போய் கதவைச் சாத்திக்கோ. உனக்கு என்னல்லாம் தோணுதோ அதுல எழுது. அப்புறம் யாருக்கும் தெரியாம அவன்கிட்ட குடுத்துடு...” என்று யாருக்கோ அவள் போனில் ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டு ஆர்த்தியின் அம்மா அதிர்ந்துபோனார்.

அவர்கள் குழந்தைகள் அல்ல!

ஆறாம் வகுப்பிலேயே மகள் பூப்படைந்துவிட்டாலும் அவளை இன்னும் குழந்தை என்று நம்பி அவளுடைய செயல்பாடுகளைக் கவனிக்காமல் விட்டதை நினைத்து வருந்தினார் ஆர்த்தியின் அம்மா. “போன்ல யார்கிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்க..?” என்று கேட்ட அம்மாவிடம், “என் ஃப்ரெண்ட்கிட்டதான். அதெல்லாம் சொன்னா உங்களுக்குப் புரியாது” என்று அலட்சியமாகச் சொன்னாள் ஆர்த்தி. “நீ பேசினதை எல்லாம் நானும் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். இதையெல்லாம் பேசுற வயசா உனக்கு? உன்கிட்ட போனைக் கொடுத்ததுதான் எங்க தப்பு” என்று சொல்லி மகளிடம் இருந்து போனை வாங்கினார். “நீங்க எப்ப பார்த்தாலும் டிவி சீரியல் பார்க்கறீங்க. இல்லைன்னா போன்ல பேசிக்கிட்டு இருக்கீங்க. ஃபேஸ்புக், வாட்ஸ் - அப்னு அப்பாவும் போன்ல பிஸியா இருக்கார். நான் மட்டும் போன்ல பேசக் கூடாதா?” என்று எதிர் கேள்வி கேட்கும் மகளை என்ன செய்வதெனத் தெரியாமல் பார்த்தார் அவளுடைய அம்மா.

இதுதான் நாம் மிகக் கவனமாகக் கையாள வேண்டிய இடம். இந்த இடத்தில் ஏட்டிக்குப் போட்டியாக ஏதாவது செய்யப்போக அது முதலுக்கே மோசமாகிவிடக்கூடும். குழந்தைகளுக்கு நாம் எதையும் கற்றுத்தரத் தேவையில்லை. நம் செயல்பாடுகளே அதைச் செய்துவிடும். வீட்டில் பெற்றோர் இருவரும் எப்போதும் மொபைலைப் பார்த்துக்கொண்டிருந்தால் அந்தச் சூழலில் வளரும் குழந்தை அதை அப்படியே பிரதிபலிக்கத்தானே செய்யும்?

கவனக்குறைவால் மாறிய பாதை!

ஆர்வத்துடன் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்துப் பெருமிதம் கொள்ளும் நாம் அதில் அவர்கள் எதையெல்லாம் பார்க்கிறார்கள், எதற்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். அந்தப் புள்ளியையே தங்கள் புதிய பாதைக்கான தொடக்கமாக அவர்கள் மாற்றிக்கொள்கிறார்கள். ஆர்த்தியும் அதைத்தான் செய்திருந்தாள். அவளிடமிருந்த போனை வாங்கி ஆராய்ந்ததில் அவளுக்கெனத் தனி ஃபேஸ்புக், வாட்ஸ்- அப், இன்ஸ்டாகிராம் கணக்குகள் இருந்தன. அதில் அவளிடம் உரையாடிய பலரும் ஆண்கள். அவள் வகுப்பு மட்டுமல்லாமல் சீனியர் மாணவர்களிடமும் பலவற்றைப் பேசியிருக்கிறாள். படங்களை அனுப்பியிருக்கிறாள். பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் தன்னைப் பற்றி, தன் குடும்பம் பற்றியெல்லாம் பலரிடமும் சொல்லிவைத்திருக்கிறாள். ஒரே நாளில் மகளை இதிலிருந்து மீட்க முடியாது என்பது ஆர்த்தியின் அம்மாவுக்குப் புரிந்துவிட்டது. அவளுடன் செலவிடும் நேரத்தை அதிகரித்து, அவளது செயல்பாடுகளைக் கண்காணித்து முறைப் படுத்துவது மட்டுமே சரியான தீர்வு என்பது அவருக்குப் புரிந்தது.

மீண்டுவந்த மகள்

வகுப்பு ஆசிரியரின் துணையோடு ஆர்த்தியின் அன்றாட பள்ளிச் செயல்பாடுகளைத் தெரிந்துகொண்டார். மகள் வீடு திரும்பியதும் அவளுடனேயே இருந்தார். மகளுக்கு போன் வந்தால் முதலில் தான் பேசிவிட்டுப் பிறகு மகளிடம் தந்தார். போன் அம்மாவின் கையில் இருக்கிறது என்று தெரிந்ததுமே நாளைடைவில் அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் குறைந்தன. அம்மாவை மீறி கிடைக்கிற சொச்ச நேரத்தில் ஆர்த்தியால் யாருடனும் அவ்வளவாகப் பேச முடியவில்லை. குறிப்பாகத் தன் வகுப்புத் தோழனிடம். காதலுக்கும் ஈர்ப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் ஏதோவொரு ஆர்வத்தில் தொடங்கிவிட்ட உறவைக் கைவிடுவது ஆர்த்திக்கு எளிதாக இல்லை. அதைக் காதல் என்றே அவள் நம்பினாள். அதனால் அவ்வப்போது சாப்பிட மறுத்து அடம்பிடிப்பது, எதிர்த்துப் பேசுவது, தன்னைத் தானே வதைத்துக்கொள்வது எனப் பல வழிகளிலும் பெற்றோரை எதிர்த்துச் செயல்பட்டாள். ஆனால், அவளுடைய செயல்பாடுகள் ஒவ்வொன்றும் தவறானவை என்பதைப் பொறுமையின் துணையோடு அவளுக்கு உணர்த்தினர் அவளுடைய பெற்றோர். ஊரிலிருந்து தாத்தா, பாட்டியை வரவழைத்தனர். அவர்களை ஆர்த்தியிடம் பேசவைத்தனர். அனுபவம் நிறைந்த அந்தப் பெரியவர்கள் தங்கள் பேத்தியின் நிலையைப் புரிந்துகொண்டு சின்னச் சின்ன கதைகள் மூலமே அவளை மீட்டெடுக்க முயன்றனர். அது ஓரளவு வெற்றியும் பெற்றது.

நாம் நண்பர்கள் இல்லையா?

குழந்தைகளை நண்பர்களைப் போல நடத்துவதாகப் பெரும்பாலான பெற்றோர் நம்புகின்றனர். ஆனால், நிதர்சனம் அப்படி இருப்பதில்லை என்கிறார் சென்னையைச் சேர்ந்த பள்ளி ஆற்றுப்படுத்துநர் சிபி. “இருபது வருஷத்துக்கு முன்னால பெற்றோர் எப்படி இருந்தாங்களோ அதே அளவுக்குத்தான் இப்பவும் பெரும்பாலான பெற்றோர் இருக்காங்க. இதுல விதிவிலக்கு உண்டு. குழந்தைகளை அடக்கி வைக்கிற பெற்றோர்கள்தான் இங்கே அதிகம். அவங்ககிட்ட மனம்விட்டுப் பேசும் பெற்றோர் குறைவு” என்று சொல்லும் சிபி, குழந்தைகள் மனதில் கொட்டிக் கிடக்கிற கேள்விகளுக்கு நாம் சரியான விதத்தில் பதில் சொல்வதே இல்லை என்கிறார். பள்ளிப் பருவத்தில் ஏற்படுகிற எதிர் பாலின ஈர்ப்பு குறித்து நாம் அதிர்ச்சியடைவதில் அர்த்தமே இல்லை என்று சொல்லும் அவர், ஆறாம் வகுப்பிலிருந்தே இதெல்லாம் தொடங்கிவிடுகிறது என்கிறார். 

“நிறைய மாணவர்கள் என்னிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறார்கள். இவர்களிடம் இவ்வளவு சந்தேகங்களா என்ற அளவுக்குக் கேள்விகளாகக் கேட்பார்கள். பெரியவர்களுக்கான பாலியல் வீடியோவைப் பார்த்ததாகப் பல மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இன்று தெரிந்தோ தெரியாமலோ நம் வீட்டுக்குள் உலகம் வந்துவிட்டது. விளம்பரங்களில் தொடங்கி திரைப்படங்கள்வரை எல்லாமே ஏதோவொரு வகையில் பாலியலோடு தொடர்புடையதாகவோ அல்லது அந்த வேட்கையைத் தூண்டுவதாகவோ இருக்கின்றன. குழந்தைப் பருவம் முதல் அதைப் பார்த்து வளர்கிறவர்கள், பருவ வயதை நெருங்கும்போது அதற்கான தேடலில் இறங்குவது இயல்புதானே” என்கிறார் சிபி. இவரிடம் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளில் தொண்ணூறு சதவீத கேள்விகளுக்குப் பெற்றோரே பதில் சொல்லியிருக்க முடியும். ஏழு, எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள், ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் ஒளிபரப்பாகும் அந்தரங்கக் காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பற்றி ஆர்வமாகப் பேசியிருக்கிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிகளைத் தவிர விளையாட்டுகள் குறிப்பாக ஆன் லைன் விளையாட்டுகள் குறித்தும் சந்தேகங்களை எழுப்பி
யிருக்கிறார்கள்.இன்னும் சில மாணவர்கள் யுடியூப் வீடியோக்கள் குறித்துக் கேட்டிருக்கிறார்கள். குழந்தைகளின் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நாம் சொல்லப்போகும் பதில் என்ன? நாம் நம் குழந்தைகளை நண்பர்களாகத்தான் நடத்துகிறோம் என்றால், ஏன் நம்மிடம் அவர்கள் அனைத்தையும் பேசுவதில்லை?

(நிஜம் அறிவோம்…)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE