விஐபி-க்களின் விருந்து சாப்பாடு 5: நெல்லை கண்ணன்

By காமதேனு

சேது மெஸ் சொதிக் குழம்பு

நெல்லையின் பெருமைமிகு ஆளுமைகளில் ஒருவரான நெல்லை கண்ணன் இந்த வார விஐபி-க்களின் விருந்து சாப்பாடு பகுதிக்கான ‘விருந்’தினர். இலக்கியம், ஆன்மிகம், அரசியல் என்று கலந்துகட்டி அடிக்கும் கவர்ச்சிகரப் பேச்சாளர்.

‘திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலி’ங்கது முன்னோர்கள் வாக்கு. நான், ‘தின்னுகெட்ட திருநெல்வேலி’ன்னு தான் சொல்லுவேன். யாமுன்னா என்ன நேரத்துல, என்ன கடையில என்ன கிடைக்கும்ன்னு எங்க ஊரு ஆளுக அத்தனை நேர்த்தியா சொல்லுவோம். நானும் அதுக்கு விதிவிலக்கில்ல கேட்டியலா... பத்து வயசுல இருந்தே எனக்கு ஹோட்டலில் சாப்பிடுக பழக்கம் வந்துடுச்சு” எனத் தனக்கே உரிய சுவாரஸ்யத்தோடும் நெல்லைத் தமிழோடும் தொடங்குகிறார் நெல்லை கண்ணன்.

“கீழரத வீதியில் காந்திமதி லஞ்ச் ஹோம் இருந்துச்சு. அது ஒரு ஐயர் நடத்துன ஹோட்டல். திருநெல்வேலியிலேயே முதன்முதலில் அங்கதான் சப்பாத்தி போட்டான். அதனாலேயே ‘சப்பாத்தி ஹோட்டல்’ன்னு ஏரியால ஃபேமஸ். என்னோட சித்தப்பா பிரம்மநாயகம் பிள்ளை, நெல்லை மாவட்ட தி.க தலைவரா இருந்தார். அவரு ‘குமார விலாஸ்’ன்னு ஒரு ஹோட்டல் நடத்துனாரு. ஒருகாலத்துல அங்க சாப்பிடாம அன்னிக்கு பொழுது கழியாது.

நெல்லையப்பர் கோயில் மண்டபம் பக்கத்துல சிதம்பரம்பிள்ளை ஹோட்டல்ல வத்தல்குழம்பு ருசியா இருக்கும். தமிழ்நாட்டுல எங்க இருந்து வந்தாலும், இந்த ஹோட்டல்ல கை நனைச்சுட்டு போன காலம் இருந்துச்சு. பார்வதி டாக்கீஸ் பக்கத்துல இருக்க ‘விஞ்சை விலாஸ்’க்கு முன்னாடி ரசிகர்மன்றம் வைக்காததுதான் குறை. கைலாசம் பிள்ளைன்னு ஒருத்தரு நடத்துனாரு. மேல்சட்டை போடமாட்டாரு. தாடியே தொப்புள் வரை இருக்கும்! பொதுவா பாலும், நன்னாரியும் கலந்தால் கெட்டிடும். ஆனா, அவரு நன்னாரிப்பால் போட்டுத் தருவார். அந்த ஹோட்டல் இன்னிக்கும் இருக்கு. ஆனா, கைலாசம்பிள்ளை இல்லை.

கைலாசம்பிள்ளைகிட்ட காசு இல்லாம ஒருத்தனும் சாப்பிடப் போகமாட்டான். ஏன்னா, யாரு காசு கொடுக்கலின்னாலும், பேரை எழுதி, எவ்வளவு பாக்கின்னு சிலேட்ல தொங்க விட்டுருவாரு. அரவை மெஷின் வந்த பின்னாடியும், கைம்பெண்களுக்கு வருமானம் வரட்டுமேன்னு அவுங்களை வச்சே மாவும், சட்னியும் அரைப்பாரு. 

சந்திப்பிள்ளையார்கோயில் காந்தி சிலை பக்கத்துல ‘போத்தி ஹோட்டல்’ இருந்துச்சு. ஒருகாலத்துல திருநெல்வேலி சீமையில் இருக்குற அத்தனை பணக்காரங்களும் அங்க சாப்பிட காத்து நிப்பாங்க. பர்வதசிங்கராஜா தெருவுல ஒரு பாய் கடை. அங்க இடியாப்பம் ஃபேமஸ். காலையில் அஞ்சு மணிக்கெல்லாம் பாய் இடியாப்பத்தைப் போட்டு இறக்கிடுவாரு. அதுக்கு அலாரம் வச்சு எழுந்துரிச்சு போய் தின்னுட்டு வந்தவங்களும் உண்டு. ஜங்சன்ல இருந்த சுல்தானியம் ஹோட்டல்லதான் நம்ம பயல்க ரொம்ப பேரு திருட்டுத்தனமா அசைவம் திங்கப் படிச்சது.

மதுரம் ஹோட்டல் உரிமையாளர் ஒவ்வொரு உணவுக்கும், அந்தச் சமூகத்துல அதைத் தயாரிக்கிறதில் வல்லுனரா இருக்குறவங்களை வெச்சு செய்றாரு. அதனால் இப்போ நெல்லையின் ஆல்ரவுண்டர் ஹோட்டல்களில் ஒண்ணாகியிருக்கு மதுரம். ஜங்சனில் இருக்கும் ‘சந்திரவிலாஸ்’ ஹோட்டலில் லாட்ஜும் உண்டு. அங்க சிவாஜிகணேசன், தியாகராஜ பாகவதர்லாம்கூட தங்கிச் சாப்பிட்டுப் போயிருக்காங்க. இன்னும்கூட அந்தக் கடை இருக்கு. போத்தி, சிதம்பரம்பிள்ளை ஹோட்டல்கள் இன்னிக்கு இல்லை. சின்னத்தேர் பக்கத்துல இருக்குற கூனன்கடை இட்லிக்கு ஃபேமஸ்.

இத்தனையும் ருசிச்ச நாக்கு என்னவோ மறக்காதது பாளையங்கோட்டை ‘சேது மெஸ்’ஸைத்தான்! சேதுராமலிங்கம் தொடங்கி நடத்துனாரு. அவருக்கு வயசு ஆனதும், அவரோட இரண்டு பசங்க சேர்ந்து நடத்துறாங்க. என் வீட்டு விசேஷங்களுக்கும், திடீர்ன்னு சந்திக்க திடுதிப்புன்னு வீட்டுக்கு யாரும் வந்துட்டாலும் சேதுமெஸ்தான் எனக்கு ஆபத்பாந்தவன். காலையில் ஆவிபறக்க இட்லி, சட்னி, சாம்பார், எள்ளு மிளகாய்ப்பொடி தருவான். ‘குட்டி செட்டியார்’ன்னு ஒருத்தரு இருந்தாரு. இன்னிக்கு அவரோட நாலாவது தலைமுறைங்க வந்துட்டாங்க. குட்டி செட்டியார் செக்கு எண்ணைய் அப்போ இருந்து இப்பவும் ஃபேமஸ். எள்ளுப்பொடியும், அந்த எண்ணெயுமே தூக்கும். மதியம் சேது மெஸ்ஸோட சொதிக் குழம்புக்கு நான் சொக்கிப்போய் கிடக்கேன்.

எங்கூருல, சோத்துல, சொதிக் குழம்பை விட்டுட்டு ‘ஏலே, நிறைய குளம் மாதிரி விட்டு சாப்பிடுல’ன்னு சொல்லுவாங்க. சேது மெஸ் சொதியை ஆறு மாதிரி ஓடவிட்டுச் சாப்பிடலாம். ஆனா, இங்க வெள்ளிக்கிழமை மட்டும்தான் சொதி உண்டு. அதுக்கு உருளைக்கிழங்கு பொடிமாஸும், இஞ்சி பச்சடியும் கூட்டு தருவான் பாரு, அடஅட’’ என்று நெல்லையின் சாப்பாட்டு ரகசியங்களை நெல்லை கண்ணன் அடுக்கியதைக் கேட்டு அசந்துபோய் நின்றேன்.

அப்படியே எச்சில் விழுங்காமல், பாளையங்கோட்டை யில் மார்க்கெட் செல்லும் வழியில் இருக்கும் சேது மெஸ்சுக்கு நானும் அவரும் போய்விட்டோம். கடையே சிறு சந்துபோல்தான் இருக்கிறது. கடையை நடத்துகிற அண்ணாமலை, பாலசுப்பிரமணியம் சகோதரர்களிடம் அந்தச் சொதிக் குழம்பு ரகசியத்தைக் கேட்டேன்.

“தேங்காய்ப்பால், முந்திரிப்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய் எண்ணெய், கேரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு, முருங்கைக்காய், இஞ்சி, பூண்டு இதையெல்லாம் தேவையான அளவுக்கு எடுத்துக்கணும். முதலில் தேங்காய்ப்பாலை லேசாகக் கொதிக்கவச்சு அதோட காய்கறிகளையும், பருப்பு வகைகளையும் போட்டு சூடாக்கணும். 

அதேநேரத்தில் இஞ்சி, பூண்டை தாளித்து, அதையும், தேங்காய் எண்ணெயையும் ஊற்றி இறக்கினால் சொதி ரெடி” என்கிறார் அண்ணாமலை.

அப்போது குறுக்கிட்ட நெல்லை கண்ணன், “சொதியில் தேங்காய் எண்ணெய் சேருமுல்லா... அந்தக் கொழுப்பை அடக்கத்தான் தொட்டுக்கிட இஞ்சிப் பச்சடி. இப்படி அறுசுவையும், ஆரோக்கியமும்தான்ய்யா நெல்லை சமையலின் ரகசியம்” என்றார். சேது மெஸ்ஸில் வெள்ளிக்கிழமைகளில் சென்றால் பருப்பு, சாம்பார், சொதிக் குழம்பு, ரசம், மோர், இஞ்சிப் பச்சடி உள்ளிட்ட 4 வகை கூட்டுகளோடு வெறும் 60 ரூபாயில் ருசிக்கலாம் என்பது கூடுதல் தகவல். என்ன... சேது மெஸ்ஸுக்குப் போகணும் போல இருக்கா..?

-என்.சுவாமிநாதன்

படங்கள்: மு.லெட்சுமிஅருண்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE