"எப்படிச் சாப்பிட வேண்டும் என்பது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் அல்ல. ஆனால், எப்படிச் சாப்பிட வேண்டும் என்பது நிச்சயமாக அறிவி யல் சார்ந்ததே...’’ என்று கடந்த இதழில் முடித்திருந்தேன் அல்லவா. அதையே இந்த வாரம் விவரமாகப் பார்ப்போம்.
உண்ணும் உணவில் இதுதான் ஆகச்சிறந்தது என்றும் இந்த உணவு தீங்குவிளைவிக்கக் கூடியது என்றும் எந்த வரையறையையும் நாமே வகுத்துக்கொள்வது சரியல்ல. ஏனெனில் எல்லா உணவும் இயல்பில் அதனதன் தன்மையளவில் நல்ல உணவே. ஓர் உணவு வகை உங்களது உடல் சூழலுக்கு எப்படி ஒத்துப்போகிறது என்பதைப் பொருத்தே அது உங்களுக்கு உகந்த உணவு அல்லது ஒவ்வாத உணவு என்று ஆகிறது.
ஆனால், எடைக் குறைப்பு பிசினஸ் உலகில் ஒரு சில உணவுகளை ஓங்கிப் பிடிப்பதும் ஒருசில உணவுகளை ஓரங்கட்டுவதும் மார்க்கெட்டிங் உத்தி ஆகிவிட்டது. பழங்களை சாப்பிடச் சொல்வதும் அப்படியான ஒருவகை மார்க்கெட்டிங் உத்தி என்றே சொல்வேன்.
அதற்காக பழங்களைச் சாப்பிடுவதை நான் எதிர்ப்பதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. டயட் போர்வையில் ஓங்கிப்பிடிக்கப்படும் ஒரே வகையான பழத்தையே திரும்பத் திரும்ப தினமும் உண்ணும் போக்கையே நான் எதிர்க்கிறேன்.