அரியநாச்சி 4- வேல ராமமூர்த்தி

By காமதேனு

வெள்ளாங்குளம் சக்கரை

முயல் சப்பையை முன் பல்லால் கடித்து இழுத்த சக்கரைத் தேவன், “இங்கெ பாரு அரியநாச்சி… ஓந்தங்கச்சி மாயழகியை… ஏந் தம்பி சோலைக்கு கட்டி வைக்க நீ ஆசைப்படுறது ஒண்ணும் தப்பில்லை…” கறியை மென்றான்.
“எங்கம்மான் வெள்ளையத்தேவன்… பாவம் செம்மக் கைதியா ஜெயில்லெ கெடக்கிறவரு…” கறியை விழுங்கி விட்டு, “இம்புட்டுத் தூரம் காரேறி வந்து ஒரு பிள்ளத்தாச்சி கேக்குதேன்னு… ‘சரி’ன்னு சொல்லி இருப்பாரு…” கை நிறைய சோற்றை அள்ளினான்.
“ஆனா… ஓந் தம்பிக்காரன் பாண்டி இருக்கானே… அவன் ஒரு கொணம் பத்தாத பய. எதுலயும் அவசரப்படுவான். சின்னாளு பெரியாளுங்கிற மரியாதை தெரியாது. என்ன இருந்தாலும் அவன்கிட்டே ஒரு வார்த்தை கலந்துக்கிட்டு… அப்புறமா தான்… நீ பாளையங்கோட்டை போயிருக்கணும்.”
“யாரு… ஏந் தம்பி பாண்டியா..? அதெல்லாம் நான் சொன்னா கேட்டுக்கிருவான்” கட்டில் காலில் முதுகு சாய்த்து, நிறை வயிற்றை வலது கையால் தடவினாள் அரியநாச்சி.
“நமக்கு கல்யாணமாகி ஏழெட்டு வருசத்துக்கு அப்புறம் இப்போதான் ஒரு பிள்ளை உண்டாகி இருக்கேன். மாயழகியை நம்ம சோலைக்கு கட்டிக்கிட்டு வந்தோம்னா… அக்காளும் தங்கச்சியும் ஒருத்தருக்கு ஒருத்தர் அம்பா… ஆதரவா… விட்டுக் குடுத்து நெறந்து போயிருவோம்லெ..?”
“அதெல்லாம் சரிதான். இந்த ரெண்டு கொணங்கெட்ட பயலுகளையும் ஒண்ணா இழுத்து வச்சு… கூத்துப் பாத்துறக் கூடாதேன்னுதான் யோசிக்கிறேன்” சாப்பாட்டுத் தட்டிலேயே கை கழுவினான். “ஆமா… பெருநாழி சம்பந்தத்துக்கு இந்த சோலைப்பய ஒத்துக்கிருவானா..?”
“கூறுகெட்டதனமா பேசாதீக. இப்போ ஏந் தங்கச்சி மாயழகி இருக்கிற அழகுக்கு… கண்ணாலே ஒரு தடவை ஒங்க தம்பி பார்த்தா போதும். பெருநாழிப் பொண்ணைத் தான் கட்டுவேன்னு ஒத்தக் கால்லெ நிக்கும். ஏந் தங்கச்சி அழகின்னாலும் அழகி… அப்பேர்ப்பட்ட அழகி..! ஆப்பநாட்டுக்குள்ளே அப்பிடி ஒரு அழகியை பார்க்க முடியுமாக்கும்..!” கையூன்றி நிமிர்ந்து அமர்ந்தாள்.
சாப்பிட்டு எழுந்த சக்கரைத் தேவன், தட்டு, சோத்துச் சட்டி, கொழம்புச் சட்டிகளை அடுப்படிக்கு எடுத்துப் போனான்.
“ஏ… நீங்க போயி சட்டி பொட்டியை தூக்கிக்கிட்டு..! இருங்க நான் வர்றேன்” கையூன்றி எழ முயன்றாள்.
பதறி ஓடி வந்த சக்கரைத் தேவன், “நீ ஒண்ணும் வர வேணாம்” அரியநாச்சியின் இரண்டு தோள் தொட்டுத் தூக்கினான். “இப்பிடி ஒக்காரு…” கட்டிலில் அமர்த்தினான். முதுகுப் பக்கமாய் அணைந்து, அரியநாச்சியின் வலது காது மடலை மெல்ல கவ்வினான்.
“ஏ..!” சிலிர்த்துத் திரும்பிய அரியநாச்சி, “முழுத்த எளவட்டத்தை வீட்டுலெ வச்சுக்கிட்டு… இதென்ன நட்டுனை..! போங்க அங்கிட்டு…” இடது கையால் புருசனை செல்லமாய் தள்ளி விட்டாள்.
போனவன், மாடக் குழியிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்து வந்தான்.
“என்னது..?” என்றாள்.
அரியநாச்சிக்கு பின்னால் கட்டிலில் அணைவாய் அமர்ந்தவன், “மொச ரத்தம்...” பாட்டிலை அரிய நாச்சியின் முகத்துக்கு நேராக காட்டினான். முயல் ரத்தம் கலந்த தேங்காய் எண்ணை, செக்கச் செவேர்னு இருந்தது.
அரியநாச்சி அள்ளி முடிந்திருந்த கோடாலிக் கொண்டை மயிரை அவிழ்த்து விட்டான். மலையில் வழியும் கருமேகமாய் சரிந்த கூந்தல், அரியநாச்சியின் பின் பக்கக் கட்டிலிலும் பரவிக் கிடந்தது. வலது உள்ளங்கை நிறைய எண்ணெயை ஊற்றியவன், “மொச ரத்தத்தை தேச்சா முடி கரு கருன்னு வளருமாம்..!” முடி குளிர தேய்த்தான்.
“இப்ப மட்டும் என்னவாம்… முடி கொஞ்சமாவா இருக்கு..?” ஓரக் கண்ணால் நமட்டுச் சிரிப்பு சிரித்தாள் அரியநாச்சி.
“மொச ரத்தத்துக்கு முடி கருக்குறது மட்டுமில்லெ. வயித்துக்குள்ளெ இருக்கிற பிள்ளையும் செக்கச் செவேர்னு பெறக்கும்..!” கை நிறைய முடியை அள்ளி அலைந்தான்.
“செக்கச் செவேர்னுலாம் வேணாம். ஒங்கள மாதிரி கன்னங்கரேர்னு பெறந்தா போதும்” தேய்க்க வாகாக, முகத்தை அண்ணாந்து தலை சாய்த்துக் கொடுத்தாள்.
முற்றத்து வாசலில் வேட்டை நாய் சிணுங்கல் சப்தம் கேட்டது.
அரியநாச்சி, வாசற் பக்கம் திரும்பாமலே, சக்கரைத் தேவனுக்கு மட்டும் கேட்கும்படி, “ஏ..! ஒங்க தம்பி வருது. நகண்டு ஒக்காருங்க…” என்றாள்.
அரியநாச்சியை நெருக்கி அமர்ந்திருந்த சக்கரைத் தேவன், கொஞ்சம் நகன்று அமர்ந்தான்.
தலைவாசல் நிலைப்படி உரச, ஆறடி உயரத்தில் நுழைந்து வந்த சோலை, கட்டிலில் அண்ணனும் மதினியும் அமர்ந்திருப்பதைக் கண்டதும் தரை வழியே கண்மூடி, வாசற்பக்கம் திரும்பினான்.
“ஏய்யா… வாங்க. சாப்பிட்டுட்டு போங்க” கொழுந்தனை அழைத்தவாறு கட்டிலை விட்டு அடிவயிறு  நோக எழுந்தாள்.
“ஏப்பா… சோலை. ஓம் மதினிக்காரி குனிய நிமிர செரமப்படுறாள். நீயே சோத்தைப் போட்டு சாப்பிடேன்…” தம்பியின் முகம் பார்க்காமலே சொன்னான் சக்கரைத் தேவன்.
“நான் என்ன மாட்டேண்டா சொல்றேன்..? நீங்க ஒக்காருங்க மதினி. நான் சாப்பிட்டுக்கிறேன்” நடுப்பத்திக்கு வந்தான் சோலை.
“ஆத்தாடீ..! நான் என்ன அப்பிடியா நோவு கண்டு போயி கெடக்கிறேன்? நீங்க ஒக்காருங்கையா. இந்தா… கொண்டாறேன்” என்றவள், புருசன் சாப்பிட்டு மூடி வைத்திருந்த கொழம்புச் சட்டி, சோத்துச் சட்டி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டுவந்து பத்தியில் பரப்பினாள். “உக்காருங்க… சாப்டுங்க…” அள்ளி அள்ளி பரிமாறினாள்.
ஒரு வாய்க்கு ஒரு முயல் சப்பையைக் கவ்வினான். இன்றைக்கு ஏழெட்டு முயல்கள் சிக்கி இருந்தன. எல்லாம் கொழம்புதான்.
தம்பிக்காரன் சாப்பிடுவதை ரசித்த சக்கரைத் தேவன், “இது எந்தக் காட்டு மொசலுக..?” என்றான்.
“இன்னைக்கு மல்லேஸ்வரம் காட்டுக்குள்ளே எறங்குனோம்.”
முன்னே கால் நீட்டி அமர்ந்து பரிமாறிக் கொண்டிருந்த அரியநாச்சி, புருசனைப் பார்த்து, ‘ஸ்ஸ்ஸு…’ எனக் கண் காட்டினாள்.
தொண்டையைச் செருமிய சக்கரைத் தேவன், “ஏப்பா… சோலை. ஒங்க மதினிக்காரி ஓங் கல்யாணப் பேச்சை எடுத்தாள்…” என இழுத்தான்.
“கல்யாணமா..!”
“ஏம்ப்பா..? உனக்கு வயசு காணாதா..? இன்னும் எம்புட்டு நாளைக்கு கரி மூட்டம் போடவும் மொச வேட்டைக்குப் போகவுமா காட்டுலெ அலையப் போறே..?”
சோலை பதில் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“என்னடா… சத்தத்தை காணோம்..?”
“பொண்ணு யாரு..?”
“ஏந் தங்கச்சியை தான்ய்யா..!” என்றாள்.
பதிலேதும் பேசாமல் கறியை மென்று கொண்டிருந்தான் சோலை.
“என்னடா… என்ன சொல்றே..?” கட்டிலில் உட்கார்ந்தவாக்கில் குனிந்து தம்பியை பார்த்தான் சக்கரைத் தேவன்.
மதினி அரியநாச்சி பக்கம் திரும்பிய சோலை, “ஒங்களைக் கையெடுத்துக் கும்பிடுறேன் மதினி. பெருநாழி சங்காத்தமே எனக்கு வேண்டாம்” என்றான்.
“ஏன்ய்யா..? நானும் பெருநாழிக்காரி தான். ஒங்கண்ணனுக்கு வாக்கப்பட்டு வந்ததிலே என்ன குத்தம் கண்டீங்க..?”
“மதினி… ஒங்களைக் குத்தம் சொல்லலே. நீங்கதான் என்னை கொழுந்தனா நெனைக்கிறீக. நான் ஒங்களை எங்க ஆத்தாவாதான் பாக்குறேன். ஆனால்… ஒங்க தம்பி பாண்டியும் நானும் மொசலும் நாயும் மாதிரி. அவனுக்கு மனுசத் தரம் தெரியாது. ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டுச் சாக வேண்டியது தான்” கண் தாழ்ந்தான்.
“அவன் கெடக்கான் சின்னப் பய. அவனை முன்னே வச்சா இந்தக் கல்யாணம் நடக்குது? நான் பாளையங்கோட்டை போயி எங்கய்யாகிட்டேயே சம்மதம் வாங்கிட்டு 
வந்துட்டேன்.”
“அட விடுறா… அவன் யாரு..? நம்ம அம்மான் மகன் தானே..?” அமிழ்ந்த குரலில் சொன்னான் சக்கரைத் தேவன்.
“நம்ம அய்த்த மக்க தானேன்னு அவன் நெனைக்கணும்லே..?” வாய்க்குள்ளேயே முனகினான்.
“என்னய்யா… என்ன சொல்றீக..?” என்றாள் அரியநாச்சி.
“என்னத்தை சொல்லச் சொல்றீக? போன வருசம் பெருநாழி எருதுகட்டிலே நம்ம மாடு இறங்கி விளை
யாடுது. எவனும் கிட்டே நெருங்க முடியலே. இதே பாண்டி தானே… நம்ம மாட்டுக் கால்லெ வடத்தை சுத்தி விழுத்தாட்டி… கொம்பை ஒடிச்சான்..? நம்ம மச்சான் வீட்டு மாடு தானேன்னு நெனச்சானா..?”
“அந்தச் சின்ன நாயிக்கு அம்புட்டுதான் புத்தி..!” சமாளித்தாள்.
சாப்பிட்டு எழுந்தான் சோலை. “இங்கே பாருங்க மதினி... நான் ஒங்க சொல்லையும் எங்கண்ணன் சொல்லையும் தட்டப் போறதில்லை. ஆனா... எங்க அண்ணன் முகங்கோண ஏதாவது நடந்துச்சுன்னா...நான் மனுசனா இருக்க மாட்டேன்...பாத்துக்கங்க...” எழுந்து கை உதறி விட்டு வெளியேறினான்.
சோலை வெளியேறும் வாசலில், “அரியநாச்சி…” எனக் கூவிக்கொண்டே நுழைந்த பூவாயி கிழவி, நடு வீட்டுக்குள் வந்து, “நான் சொன்ன மாதிரியே நடந்து போச்சுல்லெடீ..?” கட்டிலுக்குக் கீழே குத்த வைத்தாள்.
“என்ன சொல்றீக அய்த்தே..?”
“நம்ம ரெண்டு பேரும் பாளையங்கோட் டைக்கு போயிட்டு வந்த சேதி, ஓந் தம்பிக்காரன் பாண்டிக்குத் தெரிஞ்சு போச்சாம். அவன் பொண்டாட்டி ஒருத்தி இருக்காளே கொமராயீங் கிறவ... கீழேயும் மேலேயும் கெடந்து குதிக்கி றாளாம்..!”
“எதுக்காம்..?”
“வெள்ளாங்கொளத்துக்கு ஒருத்தி வாக்கப் பட்டுப் போனது போதாது..? தங்கச்சியையும் கட்டிக்கிட்டுப் போயி… மொத்தப் பொம்மழிச் சொத்தையும் அமுக்க பாக்குறாளாக்கும்ன்னு…”
சக்கரைத் தேவன் கட்டிலில் அமர்ந்த வாக்கில் தலை கவிழ்ந்தான்.
வாய் ஓயாத பூவாயி கிழவி, “ஏன்… ஏந் தம்பிக்காரன் இருக்கான்லே… கருப்பையா? மாயழகியை அவனுக்கு கட்டி வச்சா… எனக்கும் என் புருசனுக்கும் நாளப் பின்னே ஒத்தாசையா இருக்கும்லேங்கிறாளாம்..!”
அரியநாச்சி தலை முடியை அள்ளி முடிந்தாள். “அதுக்கு என் தம்பிக்காரன் என்ன சொன்னானாம்..?”
“அவன் ஒங்க அய்யாவை பாக்க ஜெயிலுக்கு கெளம்பீட்டானாம்..!”
அரியநாச்சியும் சக்கரைத் தேவனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.
குமராயி, பிறந்தது வடக்குத் தெரு. பாண்டிக்கு வாழ்க்கைப்பட்டு வந்தது மேலத் தெரு. கையில் ஒரு நார்ப் பெட்டியோடு, முளைக்கொட்டு திண்ணை தாண்டி, வடக்குத் தெருவுக்குள் நுழைந்தாள்.
தாழ்வாரத் திண்ணையில் அமர்ந்து, கம்பருசி புடைத்துக் கொண்டிருந்தாள் தாயார் செல்லம்மா. பக்கு பதரை நாவி, உள்ளங்கையில் அள்ளி, முற்றத்தில் திரியும் கோழிக் குஞ்சு களுக்கு முன் விட்டெறிந்தாள். கெத்… கெத்’ என அடித் தொண்டையில் கெக்கலித்து, மேயும் குஞ்சுகளுக்கு இரை காட்டியது தாய்க் கோழி.
செல்லம்மாவுக்கு கண்ணு ரெண்டும் சொளகு மேலேயே இருந்தது.
`வேகு… வேகு’ என நடந்து வந்த குமராயி, முற்றத்தில் நுழைந்ததும் தன் தாயாரைக் குறி பார்த்து கையிலிருந்த நார்ப்பெட்டியை ஓங்கி எறிந்தாள்.

(சாந்தி... சாந்தி...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE