பிளாஸ்டிக் இல்லா தமிழகம் படைப்போம்!

By காமதேனு

விரைவில் நாம் ‘பிளாஸ்டிக் கட்டுப்படுத்தப்பட்ட’ உலகத்துக்குள் பிரவேசிக்க இருக்கிறோம். அதற்கு முன்பாக நம்மை மனதளவில் தயார்படுத்திக் கொள்வது முக்கியம். எங்கெங்கு வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம். இதை நம் குடும்பத்தினரிடமும், அக்கம்பக்கத்தினரிடமும், அன்றாடம் புழங்கும் கடையினரிடமும் எடுத்துச் சொல்வோம்.

வீட்டிலிருந்து புறப்படும்போதே, இலகுவாக மடித்து வைத்துக்கொள்ளும் வகையிலான இரு துணிப்பைகளை எப்போதும் கைவசம் வைத்திருப்போம். சாலையோர சிறு வியாபாரிகள், கடைகள், இறைச்சிக் கடைகள், ஹோட்டல்கள், பெரிய நிறுவனங்கள் அனைத்துமே பிளாஸ்டிக் தவிர்ப்பு தொடர்பாக புதிய உத்திகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டிய நேரமிது. சமீபத்தில் ஹோட்டல்கள் சங்கத்தினர், உணவு வாங்க பாத்திரங்களுடன் வருவோருக்கு ஐந்து சதவீதம் தள்ளுபடி என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதுபோல, இதர நிறுவனங்களும் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க புதிய உத்திகளையும் சலுகைகளையும் அறிவிக்க வேண்டும்.

அரசும் இதுதொடர்பாக மிகப் பெரிய நகர்வை முன்னெடுப்பது அவசியம். பிளாஸ்டிக் ஒழிப்புத் திட்டத்தின் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட நடிகர்களைக் கொண்டு விழிப்புணர்வு நாடகங்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்தலாம். பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான குறும்படப் போட்டிகளையும் நடத்தி, சிறந்த படங்களுக்கு விருது வழங்கலாம். அதை மக்கள் மத்தியிலும் திரையிடலாம். முதல்வர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் துணிப்பைகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்து, அதையும் மக்களுக்குக் காட்சிப்படுத்தலாம். மக்கள் அதிகம் பயன்படுத்தும்  பொருட்களில் ‘பிளாஸ்டிக், மண்ணுக்கும் உயிருக்கும் கேடு’ என்பது போன்ற வாசகங்களை அச்சிடலாம்.

பிளாஸ்டிக் தவிர்ப்பை ஊக்குவிக்க அரசே துணிப்பைகளை இலவசமாக மக்களுக்குத் தரவேண்டும். இதனால், பருத்தி, சணல், பனை விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும். அரசு வழங்கும் துணிப்பைகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த வாசகங்களையும் சித்திரங்களையும் அச்சிட்டு வழங்கலாம். இவை அனைத்தையும் செய்தாலே வெகு விரைவில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை எளிதில் உருவாக்கிவிட முடியும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE