கருணாநிதிக்கு பாரத ரத்னா அன்றே கேட்ட கார்வேந்தன்... அழுத்தம் தராத திமுக..!

By காமதேனு

சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தியமைக்காக முன்னாள்முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார் திமுக  எம்.பி-யான திருச்சி சிவா. இதையடுத்து, ‘ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும்’ என்ற தங்களது முந்தைய கோரிக்கைக்கு அதிமுக-வும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. 

‘கருணாநிதிக்கு பாரத ரத்னா கொடுங்கள்’ என்று இப்போதுதான் திமுக கேட்கிறது. ஆனால், ஒன்பது வருடங்களுக்கு முன்பே, கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.கார்வேந்தன் கோரிக்கை  எழுப்பியிருக்கிறார். அப்போது மத்திய அரசின் அதிகாரம் கொண்ட பங்காளியாக இருந்த திமுக, கார்வேந்தனின் கோரிக்கையைக் காதுகொடுத்துக் கேட்கக்கூட நேரமில்லாமல் இருந்துவிட்டு, இப்போது கருணாநிதிக்கு பாரத ரத்னா கேட்டு கெஞ்சிக் கொண்டிருக்கிறது.

சிவாவின் கோரிக்கையை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜயைத் தட்டி ஆதரித்தாலும் அவைக்கு வெளியே  வந்ததும்,  “கலைஞர் உயிருடன் இருக்கும்போதே இதை எழுப்பியிருக்கலாமே...” என்றும் அவர்களில் சிலர் முணுமுணுத்தனர். அப்போதுதான், இந்தக் கோரிக்கையை கார்வேந்தன் ஏற்கெனவே எழுப்பிய விவகாரமும் திமுக-வும் அதன் மத்திய அமைச்சர்களும் அதைக் கண்டும் காணாமல் இருந்த விவகாரமும் நமது காதுக்கு வந்தது.

2004-09 காலகட்டத்தில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி. அப்போது, பழநி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி-யாக இருந்த கார்வேந்தன், டிசம்பர் 22, 2008-ல் கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்கும் கோரிக்கையை மக்களவையில் எழுப்பியுள்ளார். “ஐந்து முறை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று பல்வேறு சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கும் கலைஞரின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்” என்று பேசிய கார்வேந்தன் கருணாநிதியின் சமூக நலத் திட்டங்களையும் பட்டியலிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE