ஹாட் லீக்ஸ்: காரு இருக்கு டயரைக் காணோம்!

By காமதேனு

இப்டித்தான் கணக்கு வழக்குத் தாரியளா..?

சுதந்திர தினத்தன்று, சிங்கம்புணரி அருகே காளாப்பூரில் காங்கிரஸ் கட்சியின், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டார் ப.சிதம்பரம். மக்களோடு மக்களாகத் தரை விரிப்பில் சுமார் ஒன்றரை மணி நேரம் கிராம சபாவில் அமர்ந்திருந்த சிதம்பரம், அந்த ஊராட்சியின் செயல்திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் பல கேள்விகளை எழுப்பினார். காளாப்பூர் முழு சுகாதார கிராமம் என்று பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், கிராம சபாவுக்கு வந்திருந்த பெண்களிடம், “உங்க எல்லார் வீட்டுலயும் கழிப்பறை இருக்குல்ல..?” என்று கேட்டார் சிதம்பரம். அதற்கு சில பெண்கள், “இல்லை” என்று கைதூக்க... அந்தக் கைகளை எண்ணிப் பார்த்து மொத்தம் ``96 வீட்டுல கழிப்பறை இல்லையா..?’’ என்று கேட்ட சிதம்பரம், "96 வீட்டுல கழிப்பறையே இல்ல... பின்ன எப்படி இது முழு சுகாதார கிராமம் ஆகும்? அப்ப... இப்டித்தான் பார்லிமென்ட்ல கொண்டாந்து கணக்கு வழக்குத் தாரியளா..?” என்று பஞ்சாயத்து கிளர்க்கைப் பார்த்து கேட்க, என்ன பதில் சொல் வது என்று தெரியாமல் வெடவெடத்துப் போனார் கிளர்க்!

அழகிரி பேரணிக்கு ஸ்டாலின் கோஷ்டி நிதி!

மு.க.அழகிரி சென்னையில் நடத்தும் அமைதிப் பேரணிக்கு, ‘நீதி கேட்கும் பேரணி!’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். போலீஸ் அனுமதி கேட்டபோது, “பேரணிக்கு லட்சம் பேர்கூட வருவாங்க” என்று போலீஸில் சொன்னதாம் அழகிரி கோஷ்டி. இதற்கேற்ப மன்னன், கோபிநாதன், முன்னாள் எம்எல்ஏ கவுஸ் பாட்சா, எம்.எல்.ராஜ், உதயகுமார் உள்ளிட்ட ஒரு டஜன் பேர், தனித்தனியாக 10 சொகுசுப் பேருந்துகளை புக் செய்து வைத்திருக்கிறார்கள். தென் மாவட்டங்களிலும் தமிழகத்தின் இன்னும் சில மாவட்டங்களிலும் உள்ள ஸ்டாலின் அதிருப்தியாளர்களிடமும் அழகிரியே போன் போட்டு பேசிவருகிறாராம். ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரிலிருந்தும் இரண்டு பேர் அழகிரிக்கு தூதுவிட்டிருக்கிறார்களாம். இதையெல்லாம் விட, தற்போது ஸ்டாலின் பக்கம் உள்ள தனது முன்னாள் ஆதரவாளர்கள் சிலரிடம், “அமைதிப் பேரணிக்குப் போகணும் காசு கொடு” என்று அழகிரியே போன் போட்டுப் பேசியிருக்கிறாராம். எதற்கு வம்பு என்று அவர்களிலும் சிலர் அழகிரித் தரப்பிடம் பணத்தை எண்ணிக் கொடுத்திருக்கிறார்களாம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE