என்றென்றும் ஏழுமலையான்! - 4: யாதவ குலத்தவர்களுக்கு முதல் தரிசனம் தரும் மலையப்பன்!!

By என். மகேஷ்குமார்

இன்றைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வருகிறார்கள். ஆனால், திருமலையில் அவதரித்த அரங்கனை முதன் முதலாக தரிசித்த பாக்கியம் பெற்றவர்கள் யாதவ குலத்து மக்களே. இன்றும் தினந்தோறும் அவர்களுக்கே தனது முதல் தரிசனத்தைத் தருகிறார் அந்த மலையப்பன்!

புராணக் கதையாதவ குலத்தார்க்கும் திருமலைக்கும் வந்த பந்தம் குறித்து புராணக் கதை ஒன்று உண்டு. ஒரு சமயம், லட்சுமி தேவியார் மகாவிஷ்ணுவிடம் கோபித்துக்கொண்டு வைகுண்டத்தை விட்டு பூலோகம் வந்துவிட்டார். அவரைத் தேடிக்கொண்டு மகாவிஷ்ணுவும் வருகிறார். பூலோகம் முழுக்க தேவியை தேடிய விஷ்ணு, களைத்துப்போய் ஓரிடத்தில் மயங்கி விழுந்துவிட்டார். அதுதான் சேஷாசல மலை. மயங்கிக் கிடந்த மாயவனைச் சுற்றி கரையான் புற்று கட்டுகிறது.

யாதவர் குலத்தைச் சேர்ந்த சுரய்யா என்பவர் தனது ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு தினமும் சேஷாசல மலைக்கு வந்து போவார். அப்படி வருகையில் அவரது பசு மாடுகளில் ஒன்று தினமும் தனியாகப் போய் அந்தக் கரையான் புற்றில் பாலைச் சுரந்துவிட்டு வந்தது. உள்ளே இருந்த மாயவன் அது தந்த பாலை ஆனந்தமாய் எடுத்துக் கொண்டான். குறிப்பிட்ட அந்தப் பசு மட்டும் தினமும் வீட்டுக்கு வரும்போது மடி வற்றிப் போய் வந்ததைக் கண்ட சுரய்யா, ஒரு நாள் அந்தப் பசுவை தீவிரமாகக் கண்காணித்தார்.

அன்றும் அது அந்தப் புற்றுக்குப் பாலைச் சுரந்தது. இதைக் கண்டு ஆத்திரமுற்ற சுரய்யா, பசுவை அடித்துத் துரத்திவிட்டு புற்றை கட்டையால் அடித்து உடைக்க... உள்ளே இருந்த பெருமாள் துயிலெழுந்தார். சேஷாசல மலையில் அன்றைக்கு பெருமாளை முதன் முதலாகக் கண்ட அந்த சுரய்யாவின் வம்சாவளிக்குத்தான் இன்றைக்கும் தினமும் தனது முதல் தரிசனத்தைத் தருகிறார் ஏழுமலையான். இதுதான் அந்தப் புராணக் கதை!

சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில், 5ம் நாள் இரவு நடந்த கருட சேவையின் போது, கோயிலில் இருந்து கொண்டு வரப்படும் 5 பேட்டை தங்க காசு மாலைக்கு துணையாக தீவட்டியுடன் வரும் சன்னிதி யாதவ குலத்தோர்.

சன்னிதி யாதவர்கள்

இப்போது போல அப்போதெல்லாம் திருமலைக்கு போக்குவரத்து வசதிகள் இல்லை. கோயில் முழுமையுமே வனத்துக்குள் இருந்ததால் மன்னர்களே மிகுந்த சிரமப்பட்டுத்தான் மலையேறி வந்து ஏழுமலையானைத் தரிசித்துச் சென்றனர். 1933 வரை, ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தின் பொறுப்பில் திருப்பதி கோயில் பராமரிக்கப்பட்டது. அதன் பிறகுதான், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தப்பட்டது. என்றாலும் திருமலையில் ஏழுமலையானுக்குக் கோயில் எழுப்பப்பட்ட காலம் தொட்டு எல்லா காலகட்டத்திலும் ஏழுமலையானுக்கு விளக்கேற்றி சேவை செய்து அவரை முதலில் தரிசிக்கும் பாக்கியத்தை யாதவ குலத்தோரே பெற்றுவருகிறார்கள்.

அர்ச்சகர்கள், ஜீயர் உள்ளிட்டோருடன் அதிகாலை 2 மணிக்கே திருமலை கோயிலுக்குப் புறப்படும் சுரய்யா வழிவந்த யாதவ வாரிசுகள் தீவட்டியுடன் கோயிலுக்குள் சென்று கருவறை கதவுகளைக் திறக்கிறார்கள். அதன்பிறகு, கருவறையில் உள்ள நெய் விளக்குகளுக்குத் தாங்கள் கொண்டு வந்திருக்கும் தீவட்டியால் ஒளி ஏற்றும் இவர்கள், ஏழுமலையானை முதல் ஆளாக தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்குகிறார்கள். இப்படி நாள் தவறாமல் ஏழுமலையான் சன்னிதியைத் திறந்து விளக்குப் போடும் பாக்கியம் பெற்றதால் இவர்கள் ‘சன்னிதி யாதவர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

பத்மநாபம் பேசுகிறார்

ஏழுமலையான் சன்னிதியில் காலங்காலமாகத் தங்களுக்குக் கிடைத்துவரும் இந்த உயரிய மரியாதை குறித்து நம்மிடம் நெகிழ்ந்து பேசினார் சுரய்யா யாதவின் வம்சாவளியான பத்மநாபம். “முன்பெல்லாம் திருப்பதியில் அதிகாலை 5 மணிக்குத்தான் நடை திறக்கப்படும். அப்போது, அர்ச்சகர், ஜீயர் சுவாமிகளோடு சேர்ந்து நாங்களும் தீவட்டி ஏந்தி கோயிலுக்குள் செல்வோம். கோயிலின் அனைத்துக் கதவுகளும் திறக்கப்பட்டாலும் பெருமாள் குடிகொண்டிருக்கும் வைகுண்ட வாசல் கதவைத் திறந்து, கருவறையில் தீபம் ஏற்றி முதல் தரிசனம் செய்வது நாங்கள்தான். ஒரு காலத்தில் இந்தக் கோயில் சோழ மன்னர்களின் ஆளுகைக்குள் இருந்தது. அப்போது அவர்கள் இட்ட கட்டளைப்படி பெருமாள் சன்னிதியில் எங்களுக்கு இந்த மரியாதை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அதிகாலை 2 மணிக்கே...

ஆண்கள்தான் கருவறைக்குள் செல்லமுடியும். தனக்கு யாதவ மக்கள் செய்யும் சேவையில் எந்தத் தடங்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக எங்கள் குடும்பங்களில் தப்பாமல் ஆண் வாரிசு தழைக்க வைக்கிறார் அந்தப் பெருமாள். இப்போது அதிகாலை 2.30 மணிக்கே சுப்ரபாத சேவை தொடங்குவதால் தினமும் நாங்கள் அதிகாலை அதிகாலை 2 மணிக்கு குளித்து முடித்து வீட்டில் பூஜைகள் செய்துவிட்டு தீவட்டி எடுத்துக்கொண்டு கோயில் முன் உள்ள கொல்ல மண்டபம் அருகே வந்து விடுவோம். அங்கிருந்து அர்ச்சகர்களையும் ஜீயர் அல்லது அவரது சிஷ்யர்களில் யாரேனும் ஒருவரையும் அழைத்துக்கொண்டு கோயிலுக்குள் செல்வோம். வைகுண்
டக் கதவைத் திறந்து நாங்கள் தீபம் ஏற்றி சுவாமியை தரிசனம் செய்த பிறகுதான் அர்ச்சகர்கள் சுப்ரபாத சேவையைத் தொடங்குவார்கள். அதில் நாங்களும் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்புவோம்.

இதன் பிறகு, காலை 9 மணிக்குத் தொடங்கும் இரண்டாவது நைவேத்திய சமயத்திலும் கோயிலுக்குச் சென்று சுவாமி கைங்கர்யங்களில் பங்கேற்போம். அதேபோல், மாலை 5.30 மணிக்கு தோமாலை அர்ச்சனை சேவையிலும் பங்கேற்போம். இரவு 10 மணிக்கு ஏகாந்த சேவை முடிந்து நடை சாத்திய பிறகுதான் அர்ச்சகர்கள், ஜீயர் சுவாமிகளுடன் சேர்ந்து கோயிலை விட்டு வெளியில் வருவோம்.

பல நூற்றாண்டுகளாக இந்தச் சேவையை இடைவிடாது செய்து வரும் எங்களை ‘சன்னிதி யாதவர்கள்’ என்று அழைக்கிறார்கள். தெலுங்கில் ‘சன்னிதி கொல்லோள்ளு’ என்பார்கள். இப்போது இந்தச் சேவையில் நானும் எனது தந்தையார் வெங்கடராமய்யா, தம்பி ரமேஷ் ஆகியோர் ஈடுபட்டு வருகிறோம்” என்கிறார் பத்மநாபம்

சூரிய, சந்திர கிரகணங்களின்போது, ஏழுமலையான் கோயிலைப் பூட்டிக்கொண்டு வெளியே வரும் சன்னிதி யாதவர் பத்மநாபம் (தோளில் இரும்புப் பெட்டியை வைத்திருப்பவர்.) உடன் ஜீயர், அர்ச்சகர், தேவஸ்தான ஊழியர் குழுவினர்.

ஏழுமலையானுக்கு யாதவர் வீட்டுச் சாப்பாடு!

தங்களுக்கும் திருமலைக்குமான தொடர்புகள் குறித்து புராண ரீதியிலான சில நம்பிக்கைகளையும் வெளிப்படுத்தும் பத்மநாபம், “துவாபர யுகத்தில் கிருஷ்ணர், எங்களது யாதவ குலத்தில் வளர்ந்தார். அதனால் இந்தக் கலியுகத்தில், தனக்கு அருகிலிருந்து சேவை செய்யும் பாக்கியத்தை ஏழுமலையான் எங்களுக்கு அருளியதாக நாங்கள் கருதுகிறோம். அதனால், ஒருநாள்கூட இடை விடாமல் இந்தச் சேவையில் எங்களை இணைத்துக் கொண்டு வருகிறோம். யாதவ குலத்தைச் சேர்ந்த வீரவசந்த யாதவ ராயர், ரங்கநாத யாதவ ராயர் உள்ளிட்ட மன்னர்கள் ஏழுமலையானுக்கு சேவையாற்றி கோயில் வளர்ச்சியிலும் பெரும்பங்கு வகித்துள்ளனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியபோது (1933-35) யாதவர் ஒருவர் ரிலீஜியஸ் அட்வைசரி கமிட்டி உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஆண்டுதோறும் திருமலையில் பாரி வேட்டை உற்சவம் நடக்கும். அந்த நாளில் ஏழுமலையானுக்குப் படைக்கப்படும் நைவேத்தியம் எங்கள் வீட்டிலிருந்து தான் எடுத்துச் செல்லப்படும். ஊருக்கே படியளக்கும் எம்பெருமானுக்கு நாங்களும் ஒருநாள் சாப்பாடு தருகிறோம் என்பது எத்தனை பெரிய பாக்கியம். இதுவரை எங்கள் வம்சாவளிக்கு எந்தக் குறையும் வைக்காத ஏழுமலையான், இந்தச் சேவைகளை எங்கள் சந்ததியினர் எக்காலத்துக்கும் செய்திட அருள்புரிய வேண்டும்!” என்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE