நானொரு மேடைக் காதலன் - 4

By நாஞ்சில் சம்பத்

உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை, பருகும் நீர் எல்லாவற்றிலும் கண்ணனையே பார்த்த ஆழ்வார்களைப் போல எளியவன் நான் எல்லாவற்றிலும் மேடையையே பார்த்தேன். ‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்’ என்று வான்புகழ் வள்ளுவன் சொன்னதற்கேற்ப கேட்ப வரை ஈர்க்கிற வகையில் உரையாற்றுவது எப்படி என்பது குறித்தே எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருந்தேன். இன்னும் இருக்கிறேன்!

தாகம் கொண்ட மேகம் போல் அலைந்த எனக்கு எதிர்பாராத முத்தம் போல் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, 1986 ஜூன் 2- ம் தேதி இலக்கிய அணியின் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் - கவியரங்கம் - பட்டிமன்றம், கலைவாணர் அரங்கில் நடப்பதாக முரசொலி மூலம் அறிந்தேன். உடனே, திமுக இலக்கிய அணி செயலாளர் வில்லிபுத்தூர் அமுதன் அவர்களை அவர் தங்கியிருந்த விடுதிக்கே சென்று சந்தித்து, “கலைஞர் பிறந்தநாள் விழாவில் எனக்கும் உரையாற்ற ஒரு வாய்ப்புத் தாருங்கள்...” என்று பணிந்து கேட்டேன். ”நாளை நடைக்கும் நிகழ்ச்சிக்கு இன்று வந்து வாய்ப்புக் கேட்டால் எப்படி... நிகழ்ச்சி நிரல்படிதான் நடத்த முடியும்; அடுத்த ஆண்டு பார்க்கலாம்” என்றார். “நிகழ்ச்சி நிரலில் என் பெயர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தொடக்க உரையோ, அறிமுக உரையோ... நீங்கள் மனம் வைத்தால் நடக்கும்” என்று உரிமை எடுத்துக்கொண்டு வினயமாய் வேண்டினேன்.

“கருத்தரங்கிற்குத் தலைமை தாங்குகிறவர் கழகத்தின் அமைப்புச் செயலாளர் சிறுகதை மன்னன் எஸ்.எஸ். தென்னரசு. அவரிடம் உனது விருப்பத்தைச் சொல்லிப் பார்க்கிறேன். எதற்கும் மாலையில் வந்து என்னைப்பார்” என்றார் அண்ணன் அமுதன். நம்பிக்கையைச் சுமந்தவனாக மாலையில் மீண்டும் போய் அவரைச் சந்தித்தேன். “முதலில் நீதான் பேச வேண்டும். சங்கத் தமிழும் கலைஞரும் என்ற தலைப்பில் பேசச் சொன்னார்கள். தயாராக வா நாளை மாலை” என்று அண்ணன் அமுதன் சொன்னபோது கான மயிலானேன். களிப்பேருவகையுற்றேன். மலரை எதிர்பார்த்த எனக்கு மாலையே கிடைத்துவிட்டது. தேனை எதிர்பார்த்த எனக்கு தித்திப்பே கிடைத்து விட்டது. என் திசையில் யாரோ தேன் சொரிவது மாதிரி உணர்ந்தேன். அப்போதே சென்னைப் பல்கலைக்கழகம் சென்று புறநானூறு நூலை வாங்கிக்கொண்டு குறிப்பெடுத்துக் கொண்டேன். இரவெல்லாம் நித்திரைக்கு விடை கொடுத்து சித்திரை நிலவாய் விழித்திருந்து பேச்சைத் தயார் செய்தேன். குங்குமம் இதழில் கலைஞர் எழுதிய சங்கத் தமிழை, முரசொலி எடுத்து வெளியிட்டு இருந்தது. அடுத்த நாள் காலை அறிவாலயம் சென்று, அந்த முரசொலிகளை எல்லாம் தேடி எடுத்து கனிச்சாறு நிகர்த்த கலைஞரின் சங்கத் தமிழ்க் கவிதைகளையும் குறிப்பெடுத்துக்கொண்டேன். மதிய உணவுகூட எடுத்துக்கொள்ளாமல் பசித்திருந்து படித்து என்னைத் தயார்படுத்திக்கொண்டேன்.

அந்தி மாலையில் கலைவாணர் அரங்கில் தமிழ் வாழ்த்தோடு நிகழ்ச்சி தொடங்கியது. பார்வையாளர்கள் மாடத்தில் முதல் வரிசையில் கலைஞர், பேராசிரியர், சாதிக் பாட்சா, மா.நன்னன், நாஞ்சிலார், துரை முருகன், ரகுமான்கான், க.சுப்பு, அண்ணன் ஸ்டாலின், டி.ஆர்.பாலு என நான் அண்ணாந்து பார்க்கிற, நானதிகம் மதிக்கிற தலைவர்கள் வரிசையாய் உட்கார்ந்திருந்தது கண்டு என் இதயத் துடிப்பு எகிறியது. இலக்கிய அணியின் செயலாளர் என்ற நிலையில் அண்ணன் அமுதன் வரவேற்புரையைத் தோரணமாக்க, புள்ளி பிசகாத கோலம் போல் தலைமையுரையை எழிலுரையாய் எஸ்.எஸ்.தென்னரசு வழங்க, முதல் பேச்சாளனாக நான் அழைக்கப்பட்டேன். விளித்துப் பேசத்தொடங்கியபோதே அனைவரது விழிகளுக்குள்ளும் நான் விழுந்துவிட்டேன். “சங்கத் தமிழில் சொல்லை வில்லாக்கும் கலைஞரின் கைவண்ணம் எப்படி இருக்கிறது பாருங்கள்...” எனப் படிப்படியாய் பட்டியலிட்டேன். “சோழமன்னன் செங்கணானுக்கும் சேர மன்னன் கணைக்கால் இரும்பொறைக்கும் திருப்போர் புரமெனும் சமர்க்களத்தில் சண்டை நடைபெறுகிறது. சங்கத் தமிழை சந்தத் தமிழில் சண்டையை வர்ணிக்கிறார். இந்த நடை தமிழுக்கே புதிய உடை. எடை போட எனக்கென்ன தகுதி இருக்கிறது. நீங்களே கேளுங்கள்.

`ஆளுக்கொரு மின்னலை எடுத்து
வாளுக்குப் பதிலாக வீசினரோ- எனச்
சோழன் சுழற்றும் வாள்பட்டுச்
சூரர் தலைகள் ஆயிரம் உருளும்
சேரன் வீசும் வாளின் பயனாய்
செக்கர் வான்போல் சிவந்தது நிலமும்
ஈட்டியின் பாய்ச்சல் கண்டு
இமை கொட்டியவன் கோழை எனும்
இலக்கணத்தை இருவருமே
இதயத்தில் பதித்தவர்கள் என்றாலும்
சேற்றில் சிக்கிய களிறெனவே - இறுதியில்
சேரமான் இரும்பொறை சிக்கி விட்டான்’

களிறு சேற்றில் சிக்கியதுபோல் இங்கே கலைஞரின் தமிழில் நாம் சிக்கிவிட்டோம். என்னருந் தமிழ்நாடு எப்படிப்பட்டது தெரியுமா? காலைக் கதிரவன் போல் கை சிவக்கக் கொடை வழங்கும் காவலர்கள் வாழ்ந்திருந்த தமிழ்நாடு. ஓலைகொண்டு ஒருவன் போர் என்று வந்துவிட்டால் மாலை சூடுகின்ற வேளையென்றும் பாராமல் தோளைக் கொத்துகின்ற பெண்கிளியைப் புறம் விடுத்து வாளைக் கூரேற்றி வான் நோக்கி நிமிர்கின்ற வீர மறவர்களின் தாய்வீடு என்று தலைவர் கலைஞர் தாய்நாடாம் தமிழ்நாட்டைக் கொண்டாடும்போது நமது தோளில் பெருமிதம் அல்லவா ஏறி வந்து உட்கார்ந்து விடுகிறது.

சங்க காலம் என்ற தங்க காலத்தில் பன்றிக்குக்கூட போர்க்குணம் இருந்தது. காதல் தலைவனைப் பன்றிக்கு ஒப்பிட்ட தோழியிடம் கண்கள் சிவக்க உன் வாயைக் கிழித்துப் போட வேண்டும் என்று தலைவி ஆத்திரப்பட்டபோது, ஆறாச்சினம் கொண்டபோது தோழி பன்றியின் மாண்பைச் சொல்லுகிறார். கலைஞர் மொழியில் கேட்போமா...

காடுசூழ் மலை மீது கடும் வேட்டையாடுவதற்கு நாய்களை முன் ஓடவிட்டு நமது வேட்டுவர்கள் விரைந்தபோது பாய்ந்து பறந்து பன்றிக்கூட்டம் பல்வேறு திசைகளிலே சிதறியோட, தாய்ப்பன்றியொன்று தன் குட்டிகளுடன் தவியாய்த் தவித்து தலைதெறிக்கத் தடுமாறியது. தன் துணைவிக்கும் குட்டிகட்கும் நேர்ந்த கதி தாங்காமல் ஆண் பன்றி அவ்வேடர்களைத் தடுத்தெதிர்த்து தலை நிமிர்ந்து உறுமியது. தாவித்தாண்டி சீறியது. சற்றுத் தயங்கினார்கள் வேடர்கள் என உணர்ந்து, தளர்ந்து தொங்கும் மார்புடைய தாய்ப்பன்றியையும் குட்டிகளையும் ஆங்கு தழைத்திருந்த புதரோரம் ஒளித்துவிட்டு தான் மட்டும் ஆண்மையுடன் வழியில் ஒரு முடுக்கில் நின்று அடுத்து வரும் வேட்டுவரை அடித்து வீழ்த்த ஆயத்தமாய் அந்த ஆண் பன்றி...” என்று நான் கடகடவெனக் கவிதையைப் படபடவெனப் பாடி கைத்தட்டலை அள்ளிக்கொண்டேன். “கபிலரின் அகநானூற்றுக் கவிதையைத் தேடி எடுத்துப் பன்றியின் போர் குணத்தை தலைவர் ஏன் எழுதினார் தெரியுமா? தமிழர்களுக்கு அந்தப் போர் குணம் இல்லையே என்ற ஆதங்கத்தால்தான்” என்றபோது மீண்டும் கைத்தட்டல்.

“தேனாகச் சொட்டுகிறது கலைஞரின் தமிழ். தேன்கூட தெவிட்டி விடும். ஆனால், கலைஞரின் சங்கத்தமிழ் தெவிட்டாத தேனமுதம். எடுத்துக்காட்டுக்கு ஒன்று.
என்னடி நேற்று விடியுமட்டும் வளையல் சத்தம்?
எத்தனை கொடுத்தான்? நூறா, ஆயிரமா, நீ பெற்ற முத்தம்?
இமை மூட முடியாமல் நான் பட்ட பாடு கொஞ்சமா?
இடி முழக்கம் எழுப்பியதே அதுவும் ஒரு மஞ்சமா?
சத்தம் போடாத கட்டில் வாங்க உன் வீட்டில் என்ன பஞ்சமா?
சத்தியமாய்ச் சொல்லடி தலைவி; என் மீது உனக்கேதும் வஞ்சமா?”
என்று நான் பாடியதைக் கேட்டு தலைமை தாங்கியிருந்த சிறுகதை மன்னரே, ”ஆகா... ஆகா...” என்று எதிரொலித்தது என் காதிலும் விழுந்தது. ‘முடிக்கவும்’ என்ற துண்டுச் சீட்டு என் கவனத்துக்கு வந்தது.
“ ‘காற்றடிக்கும் போதும்- அதில்
தமிழ் வீரம் வந்து மோதும்! கடலின்
அலை உயர்ந்து கிளம்பும்- அதில் தமிழன்
நிலை உயர்ந்து விளங்கும்
அகிலின் புகை மணக்கும்- அதிலும்
தமிழின் புகழ் மணக்கும்
முகிலிடை எழில் மதி தோன்றும்- அதில்
முத்தமிழ்க் காவிய நிதி தோன்றும்’
பரணர் பாட்டு ஒன்றுக்கு முன்னுரையாக இப்படிச் சொன்னார் கலைஞர். 

என்னுரையாக ஒன்றைச் சொல்லுகிறேன். காற்றும் கடலும் இருக்கும் வரை, அகிலும் முகிலும் இருக்கும் வரை, மதியும் நிதியும் இருக்கும் வரை கலைஞரின் சங்கத்தமிழ் இருக்கும் என்று சொல்லி காலம் முடிகிறது - என் கோலமும் முடிகிறது. நன்றி. வணக்கம்” என்றேன். தொடர்ந்து உரையாற்றிய எஸ். எஸ். தென்னரசு “வசீகரமான சம்பத்தின் குரலும் தமிழும் கலைஞரின் சைனியத்துக்கு வலு சேர்க்கும். கழகத் தோழர்கள் சம்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார். மகிழ்ச்சியும் பெருமிதமும் என்னை வந்து சேர்ந்த நாள் அந்த நாள். நிகழ்ச்சி முடிந்த பிறகு வேகமாகக் கீழே இறங்கி கலைஞரின் அருகில் சென்றேன். புன்னகைத்தவாறு என் தோளில் கை வைத்தார். நான் அவர் தாளில் கை வைத்தேன்.
(இன்னும் பேசுவேன்...)

-நாஞ்சில் சம்பத்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE