என்னை வாங்கு யோகம் வரும்: அந்தியூர் குதிரைச் சந்தையும் ‘அஸ்வ’ ரகசியமும்!

By காமதேனு

அந்தியூர் குதிரைச் சந்தை... நாம் அனைவரும் அறிந்ததுதான். அங்கே நளினமாக நடனம் ஆடும் குதிரைகளும்... கம்பீரமாகக் கனைத்து புயல் பாய்ச்சல் காட்டும் குதிரைகளும் வெகு பிரபலம். குதிரைகளுக்கான தேவைகளே குறைந்துபோன காலகட்டத்திலும் இங்கு ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கில் குதிரைகள் விற்பனையாகின்றன. யார் வாங்குகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்ற கேள்விகளுடன் குதிரை சந்தைக்குப் பயணித்தேன். கிடைத்த தகவல் அத்தனையும் சுவாரஸ்யம்!

அந்தியூர் (தமிழ்நாடு), புஷ்கர் (ராஜஸ்தான்), பட்டேஸ்கர், சாரங்கடா (மகராஷ்ட்ரா), முத்சா (பஞ்சாப்) இவை எல்லாம் இந்தியாவில் இருக்கும் பிரபல குதிரைச் சந்தைகள். இதில் அந்தியூர் சந்தைக்குத் தனி வரலாறு உண்டு. திப்பு சுல்தான் கொங்குமண்டலப் படையெடுப்பின்போது அந்தியூரில் படை பரிவாரங்களுடன் தங்கினார். அப்போது அந்தியூர் வனாந்திரம் தன்னைக் கவர்ந்ததால், இங்கேயே தன் குதிரைப் படைக்கான லாயம் அமைத்தார். அத்துடன், படைகளுக்குத் தேவையான குதிரைகளை வாங்கவும் தேவையற்ற குதிரைகளை விற்கவும் இங்கு குதிரைச் சந்தையையும் ஏற்படுத்தினார். உள்நாடு மட்டுமில்லாமல் அரபு நாட்டுக் குதிரைகளும் அப்போது இங்கே விற்கப்பட்டன. ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் ஒருவார காலத்துக்குக் கூடும் இந்தக் குதிரைச் சந்தை திப்புவின் மறைவுக்குப் பிறகும் தொடர்ந்தது; தொடர்கிறது.

முன்பு இந்தச் சந்தையில் சில நூறு குதிரைகளையே காண முடியும். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக இங்கு குதிரைகள் வரத்து அதிகரித்து இந்த வருடம் ஆயிரக்கணக்கான குதிரைகள் லாயங்களில் தென்பட்டன. யார் வாங்குகிறார்கள், அதனை என்ன செய்கிறார்கள் என்று கேட்டால், எல்லோம் ராசி, யோகம் சென்டிமென்ட் என்று கண்ணைச் சிமிட்டுகிறார்கள்.

கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்தச் சந்தைக்கு வந்து போகும் குதிரை வியாபாரி நடராஜனிடம் பேசினேன். “நான் முதன்முதலா இங்கே வரும்போது வடக்கேயிருந்து வரும் காட்டு வியாபாரி ஜாதிக்குதிரை நாலுதான் வந்துச்சு. அந்த ஜாதிக்குதிரைக ரொம்ப உயரமாவும் (55 முதல் 60 அங்குலம் வரை) அழகாவும் இருக்கும். அப்பவே அது விலை ரூபாய் எட்டாயிரம்... பத்தாயிரம் போகும். பெரிய மில்லுக்காரங்கதான் அதை வாங்குவாங்க. மற்றபடி நம்ம ஊர் நாட்டுக் குதிரைகளை வண்டியில பூட்டவும், சவாரி செய்யவும்தான் வாங்குவாங்க. இதெல்லாம் படிப்படியா குறைஞ்சு பத்து வருஷத்துக்கு முந்தி சில நூறு குதிரைகளே வியாபாரத்துக்கு வந்துச்சு. இப்ப பத்து வருஷமா பார்த்தீங்கன்னா, குதிரைகள் வரத்து அதிகரிச்சுட்டே இருக்கு. போன வருஷம் காட்டு வியாபாரி குதிரைக 700 வரைக்கும் வந்திருந்துச்சு. இப்ப அது ரெண்டாயிரத்துக்கு அதிகமாக வந்திருக்கு. காட்டு நாயக்கர் குதிரை ரெண்டு லட்சத்திலிருந்து இருபது லட்சம் ரூபா வரைக்கும் போகுது” என்றார் அவர்.
கணியூரைச் சேர்ந்த குதிரை வியாபாரி சந்திரசேகர் சொல்லும் தகவல்கள் இந்த வியாபாரத்தின் சென்டிமென்ட்களை விவரிக்கிறது. “அர்ச்சுனன் அம்புலயிருந்து தப்பிச்சாலும் தப்பிக்கலாம். அசுவத்தின் சுழியிலிருந்து தப்பிக்க முடியாதுங்கிறது பழமொழி. ஒரு குதிரைக்கு ஒன்பது சுழி இருந்தா வந்தனம். 10 சுழின்னா அபாரம். 11 சுழின்னா அற்புதம். 12 சுழி அபூர்வத்திலும் அபூர்வம். இதுல 12 சுழி குதிரை வச்சிருப்பவன் ராஜாவா இருப்பான். 11 சுழி ராஜாங்க தளபதிகிட்டத்தான் இருக்கும். 10 சுழி ராஜ தந்திரிகிட்ட (மந்திரியாக) இருக்கும்பாங்க. இந்த சுழி ராசி இப்ப எல்லாம் பயங்கர பாப்புலராகிப் போச்சு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE