தமிழக எல்லையில் கொட்டப்படும் கர்நாடக மாநில மருத்துவக் கழிவுகள் - ஓசூர் அருகே 5 கிராம மக்கள் அச்சம்

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூர் அருகே தமிழக எல்லையில் கர்நாடக மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு, எரிக்கப்படுவதால், அப்பகுதியில் உள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொற்று நோய் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசு அபாயத்தில் உள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் பயன்படுத்தும் மருத்துவக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலை களில் வெளியேற்றப்படும் குப்பை கழிவுகளைச் சிலர் சேகரித்து சரக்கு வாகனங்களில் இரவு நேரங்களில் தமிழக எல்லையான ஓசூர் அருகே ஆளூர் ஊராட்சிக்கு உட்பட்ட திப்பேப்பள்ளி பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வாரம் இருமுறை கொட்டி வருகின்றனர்.

தீ வைக்கப்படும் கழிவுகள்: மேலும், மருத்துவக் கழிவுகளில் மறு சுழற்சிக்குப் பயன்படும் பொருட்களைத் தரம் பிரித்து எடுத்துக் கொண்டு, மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத மருத்துவக் கழிவுகளை தீ வைத்து எரித்து வருகின்றனர்.

இதனால், ஏற்படும் புகையால், அப்பகுதியில் உள்ள திப்பேப்பள்ளி, தாசனபுரம், கல்லுகுருக்கி, தோரிப்பள்ளி உள்ளிட்ட 5 கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இப்புகையால் சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்குச் சுவாசப் பிரச்சினை, வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

விளை நிலங்கள் பாதிப்பு: இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சங்கரப்பா கூறியதாவது: எங்கள் கிராமத்தைச் சுற்றிலும் உள்ள 200 ஏக்கர் விளை நிலங்கள் அருகே அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீராதாரப் பகுதியில் சிலர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தும் கையுறை, ஊசி, ரத்தம் படிந்த பஞ்சுகள், நாப்கின், முகக்கவசம், செயற்கை சுவாசக் குழாய்கள், சிறுநீர் பை உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளைக் குவியல், குவியலாகக் கொட்டியும், தீ வைத்தும் வருகின்றனர். இதனால், விளை நிலங்களில் விவசாயப் பணிகள் செய்ய முடியவில்லை, மழைக் காலங்களில் கழிவுகள் நீரோடையில் கலந்து ஏரியில் கலக்கிறது. இதனால், 5 கிராம மக்கள் அச்சத்தில் உள்ளோம்.

அரசு நடவடிக்கை அவசியம்: இதுதொடர்பாக காவல் நிலையம் மற்றும் வருவாய்த் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இனியும் தாமதிக்காமல் மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுவதைத் தடுத்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவக் கழிவுகளால் அபாயம் உள்ளதா? - மருத்துவத் துறையைச் சேர்ந்த சிலர் கூறியதாவது: கடந்த 2016-ம் ஆண்டு மருத்துவக் கழிவுகளைக் கையாள பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைச் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், இதுபோல அண்டை மாநிலங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்படும்.

மருத்துவக் கழிவுகளைப் பொறுத்தவரையில் தொற்று ஏற்படுத்தும் கழிவுகள், தொற்று ஏற்படுத்தா கழிவுகள் என இரண்டு வகை உள்ளன. இதில், தொற்று ஏற்படுத்தும் கழிவுகளை, ‘இன்சனெரேட்டர்’ மூலம் எரிப்பதுதான் பாதுகாப்பானது.

இதுபோன்ற பாதுகாப்பற்ற முறையில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி எரிப்பதால் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக நோய் எதிர்ப்புச் சக்தியில்லாதவர்கள் பாதிக்க வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க இருமாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE