இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட பேசும் சினிமாக்கள் பிரபல மடையத் தொடங்கி யிருந்த சமயம் அது. அப்போது பம்பாய், கல்கத்தா, மதராஸ் ஆகிய மூன்று நகரங்களில் மட்டும் படத் தயாரிப்புத் தொழில் வேர் பிடித்திருந்தது. ஆங்கிலேயர் களின் பிடி வலுவாக இருந்த பம்பாய், கல்கத்தா நகரங்களை விட்டுவிட்டு, மதராஸில் தங்கி, தமிழ்ப் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டினார் அந்த அமெரிக்க ஆங்கிலேயர்! அவர்தான் எல்லிஸ் ஆர்.டங்கன் என்று அழைக்கப்பட்ட எல்லிஸ் ரோட்ரிக் டங்கன்.
டங்கன் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், காட்சியமைப்பு ரீதியாகத் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றதில் இவரது துணிவுக்கும் படமாக்கல் உத்திகளுக்கும் பெரும்பங்கு உண்டு. ஹாலிவுட் உருவாக்கியிருந்த திரைப்பட இலக்கணங்களை, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒளிப்பதிவு மாணவராக இருந்து கற்றுத் தேர்ந்தவர். அதையெல்லாம் பரீட்சித்துப் பார்க்கும் களமாக தமிழ் சினிமாவைப் பயன்படுத்திக் கொண்டார். அதன் விளைவாக, உள் அரங்குகளில் எடுக்கப்பட்டபோதும் தமிழ் சினிமாவுக்கு காட்சிமொழி பிறந்தது. ஒரே இடத்தில் கேமராவை நிறுத்தி நாடகங்கள் போல் எடுக்கப்பட்டுவந்த திரைப்படங்களுக்கு மத்தியில், கேமரா நகர்வுகளுடன் கூடிய காட்சிகளை டங்கன் படமாக்கினார். இரு கதாபாத்திரங்கள் குளோஸ் - அப் காட்சியில் உரையாடும் ‘டபுள் ஷாட்’ உத்தியைத் தமிழில் அறிமுகப்படுத்தினார். மிக முக்கியமாக கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை அழுத்தமாய்க் கடத்தும் குளோஸ் – அப் ஷாட்களை அர்த்தபூர்வமாய் பயன்படுத்தினார். எந்த அளவுக்கு குளோஸ் - அப் ஷாட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரோ, அதே அளவுக்கு நிலவியல் காட்சிகளைச் சித்தரிக்க லாங் ஷாட்களையும் படம்பிடித்துக் காட்டினார்.
பின்னணிப் பாடல் உத்தி கண்டுபிடிக்கப்படாத 40-களின் தொடக்கத்தில் சங்கீத விற்பன்னர்களும் நன்கு பாடத் தெரிந்த நாடக நடிகர்களும் திரை நடிகர்களாக இடம்மாறிய நாட்களில் அவர்களின் நாடகத் தன்மை மிக்க மிகை நடிப்பை அளவோடு கட்டுப்படுத்திய இயக்குநர்களில் டங்கன் முக்கியமானவர்.
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள பார்ட்டன் நகரில் 1909-ம் ஆண்டு பிறந்த டங்கன், தன்னுடன் பல்கலைக்கழகத்தில் பயின்ற இந்திய மாணவரான மானிக்லால் டான்டனுடன் 1934-ல், இந்தியா வந்தார், 1936-ல், டங்கன் இயக்கத்தில் ‘சீமந்தினி’, ‘சதி லீலாவதி’, ‘இரு சகோதரர்கள்’ ஆகிய படங்கள் வெளிவந்தன. முதலாவது புராணப் படம். இரண்டாவதும் மூன்றாவதும் வெற்றிகரமான சமூகப்படங்கள். ‘சதி லீலாவதி’ படம் வழியே பின்னாளில் தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலிலும் ஆதிக்கம் செலுத்திய இரண்டு சூப்பர் ஸ்டார்கள் அறிமுகமானார்கள். ஒருவர் எஸ்.எஸ்.வாசன் மற்றவர் எம்.ஜி.ஆர்.