அண்ணா மறைவுக்குப் பிறகு திமுக-வில் தலைவர் பதவிக்குக் கடும் போட்டி. களத்தில் கருணாநிதியே அதிகம் உழைத்திருந்தாலும் சீனியரான நாவலர் நெடுஞ்செழியன் குறுக்கே இருந்தார். ஆனால், அந்த நெருக்கடியையும் வென்று தலைவர் பதவிக்கு வந்தபோது கருணாநிதிக்கு வயது 45-தான் ஆகியிருந்தது. ஆனால், கட்சிக்குள் கருணாநிதி உருவாக்கி வைத்திருக்கும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்துகொண்டே 65 வயதுக்குப் பிறகும் தலைவர் பதவிக்காக ஸ்டாலின் போராட வேண்டியிருக்கிறது.
இம்முறை ஸ்டாலின் தலைவராவது எளிது என்றாலும், அதன் பிறகு அவருக்கு வரக்கூடிய நெருக்கடிகளும் பொறுப்புகளும் மிக அதிகம். குறிப்பாக, பிராந்தியக் கட்சிகள் அழிப்பு வேட்டை வேகமாக நடந்துகொண்டிருக்கும் சூழலில், அழகிரியையும், உள்கட்சி பிரச்சினைகளை மட்டுமல்ல; மாநிலக் கட்சிகளை சிதைக்கத் துடிக்கும் பாஜக-வையும் சேர்த்தே ஸ்டாலின் சமாளிக்க வேண்டும். இப்படியான நிலையில், கட்சிக்குள்ளும் குடும்பத்துக்குள்ளும் இப்போது என்ன நடக்கிறது, ஒவ்வொருவரின் மன ஓட்டங்களும் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்!
என்ன நினைக்கிறார் ஸ்டாலின்?
கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார். அந்த அழுத்தத்தை அழகாகச் சமாளிக்கவும் செய்கிறார். தந்தை - கட்சித் தலைவரின் பிரிவு, அதிமுக ஆட்சியாளர்களிடம் சந்தித்த அவமானம், பதவிக்காகக் குடும்ப உறவுகள், கட்சி சீனியர்களின் காய் நகர்த்தல்கள், அழகிரியின் அழுத்தங்கள், பாஜக-வின் மறைமுகக் குடைச்சல்கள் என இடைவிடாத நெருக்கடிகள் அவரை நெரிக்கின்றன. இப்போதைக்கு அவற்றையெல்லாம் அமைதியாகக் கடந்துபோக விரும்புகிறார். யாருக்கும் பதிலடி தர அவர் விரும்பவில்லை. அழகிரியின் பேச்சுகள் தொடர்பாக எந்தவொரு ரியாக்ஷனும் காட்ட வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். கட்சியின் சீனியர்களிடம் அவர், “பேசிப்பேசியே அவரைப் பெரிய ஆளாக்காதீங்க. அவங்க சொல்லுற எதுக்குமே பதில் சொல்ல வேண்டாம். அதேசமயம் அவர்கூட போகிறவங்களுக்கும் அவருக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்குறவங்களுக்கும் கட்சியில் இனி எப்போதுமே இடம் இல்லைன்னு சொல்லிடுங்க” என்று சொல்லியிருக்கிறார்.