தொண்டையில் சிக்கிய முள் அழகிரி! - கண்ணீர் வடிக்கும் கழகத் தொண்டன்!

By காமதேனு

பயணத்தின்போது மற்ற தலைவர்கள் சாலையோரம் தங்களுக்காக திரண்டு நிற்கும் கூட்டத்தை மட்டும் பார்த்து பெருமிதம் கொள்வார்கள். ஆனால், திமுக தலைவர் கருணாநிதி சற்றே வித்தியாசமானவர். தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு தொகுதி முடிந்து அடுத்த தொகுதி ஆரம்பிக்கும் போது காருக்குள் இருந்தபடியே தெருவோரத்தைக் குனிந்து குனிந்து பார்க்க ஆரம்பித்து விடுவார் கருணாநிதி. அவர் இப்படிப் பார்ப்பதுகூட கட்சிக்காரர்களுக்குத் தெரியாது. ஆனால், அப்பா எதற்காக அப்படிப் பார்க்கிறார் என்பது அழகிரிக்குத் தெரியும்!

தந்தைக்கும் மகனுக்கும் மட்டுமே தெரியும்!

2006-ல், நெல்லையிலிருந்து காரில் மதுரை திரும்புகிறார் கருணாநிதி. அவரது காருக்குள் அப்போது அழகிரியும் இருக்கிறார். கார் திருமங்கலத்தைத் தாண்டி கப்பலூரை தொடும்போது தலையைக் குனிந்து வெளியில் பார்க்கிறார் கருணாநிதி. அவரது மன ஓட்டத்தை நொடிப் பொழுதில் உணரும் அழகிரி, தனது போனை எடுத்து எண்களை அழுத்தி, “யோவ்... கப்பலூர் கிளைக் கழகச் செயலாளரா... இதுதானாக்கும் நீ கட்சி வளக்குற லட்சணம்... மூணு இடத்துல கட்சிக் கொடி இல்லாம மொட்டையா நிக்குது கொடி மரம். மொதல்ல கொடிய மாத்துய்யா...” என்று சிடுசிடுக்கிறார். இதைக்கேட்டதும் பெருமிதத்துடன் புன்னகைக்கிறார் கருணாநிதி. அவரது குறிப்பறிந்து செயல்படுவதில் அஞ்சுகத்தம்மை குடும்பத்தில் அழகிரியை மிஞ்ச ஆளே கிடையாது. இதற்கு இன்னொரு உதாரண நிகழ்வும் உண்டு.

வி.பி.சிங் பிரதமராக இருந்த சமயம் முதல்வராக மதுரைக்கு வந்த கருணாநிதி சர்க்யூட் ஹவுஸில் தங்குகிறார். காலையில் அமைச்சர்கள் உள்ளிட்ட விஐபி-க்கள் அவரைச் சந்திக்க வருகிறார்கள். அழகிரியும் அப்பாவுக்கு எதிரே வழக்கம் போல கைகட்டி நிற்கிறார். முரசொலியின் மூன்றாம் பக்கத்தில் மூழ்கி இருக்கிறார் கருணாநிதி. அப்போது பிரதமரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. பிரதமர் என்றதும் முரசொலியை படுக்கையில் போட்டுவிட்டு அவசரமாய் போனில் பேசப் போகிறார் கருணாநிதி. அப்போது, முரசொலி காற்றில் பறந்து சிதறுகிறது. அருகில் நின்ற ஆற்காட்டார் அதை எல்லாம் எடுத்து அடுக்கி நான்காய் மடிக்கிறார். போன் பேசிவிட்டு மீண்டும் முரசொலியைத் தேடுகிறார் கருணாநிதி. கையில் மடித்து வைத்திருந்த முரசொலியை அவரிடம் நீட்டுகிறார் ஆற்காட்டார். ஓடிப்போய் அதைப் பறிக்கும் அழகிரி, முரசொலியைப் பிரித்து மூன்றாம் பக்கத்தை மடித்து அதை தந்தையிடம் நீட்டுகிறார். அப்போதும், அழகிரியைத் தன்னருகே அழைத்து நேசமாய் அணைத்துக் கொள்கிறார் கருணாநிதி. இந்த நெகிழ்வின் பின்னணி தந்தைக்கும் மகனுக்கும் மட்டுமே தெரியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE