என்றென்றும் ஏழுமலையான்! - 3: அலங்காரப் பிரியனும் அனந்தாழ்வார் சேவையும்!

By என். மகேஷ்குமார்

ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருமலையைப் புஷ்ப மண்டபம் என்பார்கள். மலர் அலங்காரப் பிரியரான ஏழுமலையானுக்கு ஆண்டுக்கு சுமார் இரண்டரை லட்சம் கிலோ மலர்களால் அலங்காரம் செய்யப்படுவதே அதன் காரணம். இந்த மலர்களை நாடு முழுவதிலும் உள்ள பக்தர்களே காணிக்கையாகத் தருகின்றனர்.

ஏழுமலையானின் அலங்காரத்துக்கு வரும் பூக்களில் சுமார் 50 சதவீதம் தமிழகத் திலிருந்தே வருகிறது. இது இன்றைய நிலை. ஆனால், சுமார் தொள்ளாயிரம் ஆண்டு களுக்கு முன்பு, தனக்கு புஷ்ப கைங்கர்யம் செய்வதற்கு அனந்தாழ்வாரை ஏழுமலை யானே திருமலைக்கு வரவைத்ததாகச் சொல்லப்படுவதுண்டு. அனந்தாழ்வார்தான் முதன் முதலில் ஏழுமலையானுக்காகத் திருமலையில் பூந்தோட்டம் அமைத்து, அதில் பல விதமான மலர் செடி, கொடிகளையும் பயிரிட்டார். அந்த மலர்களுடன் துளசி, தவனம் போன்றவைகளைச் சேர்த்து மாலைகளாகத் தொடுத்து ஏழுமலையானுக்குச் சூட்டி அழகு பார்த்தவர் அனந்தாழ்வார். அவரது வழியில் அவரது வம்சாவளியினர் திருமலையில் இன்றும் புஷ்ப கைங்கர்யம் செய்கிறார்கள்.

திருமலைக்கு வந்த அனந்தாழ்வார்

கர்நாடக மாநிலத்தில், ரங்கப்பட்டணம் அருகே காவிரி நதிக்கரையில் உள்ளது சிறுபுத்தூர் (தற்போது சிங்கனூரு). இங்கே, 1053-ல், பிறந்த அனந்தாழ்வார் ராமானுஜரின் சீடர். ஒருநாள் ராமானுஜரின் கனவில் காட்சி தந்த ஏழுமலையான், தனக்கு மலர் அலங்காரம் செய்ய அவரது சிஷ்யர்களில் ஒருவரைத் திருமலைக்கு அனுப்புமாறு கூறியதாகவும், இதையடுத்து ஏழுமலையானுக்கு மலர் கைங்கர்யம் செய்வதற்கு அனந்தாழ்வாரை ராமானுஜர் திருமலைக்கு அனுப்பி வைத்ததாகவும் ஒரு தகவல் உண்டு. அதன்படி ஏழுமலையானுக்கு புஷ்ப சேவை செய்வதற்காகத் தனது கர்ப்பிணி மனைவியை அழைத்துக் கொண்டு காடு, மலை கடந்து திருமலைக்கு வந்தார் அனந்தாழ்வார்.

திருமலையில் செடிகொடிகளை வெட்டி கோயிலின் சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்திய அனந்தாழ்வார், கோயில் அருகிலேயே ஒரு பூந்தோட்டத்தை உருவாக்கினார். அத்துடன், அங்கிருந்த மலர்ச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காகக் கோயில் வளாகத்தில் திருக்குளத்தையும் வெட்டினார். ஆழ்வார் இப்படி ராமானுஜரின் கட்டளைக்குப் பணிந்து ஏழுமலையானுக்குச் சேவைசெய்து கொண்டிருந்தபோது அவரை யும் சோதித்தார் அந்த ஏழுமலையான். ஒருநாள், பாலகன் வடிவில் அனந்தாழ்வாரிடம் வந்த அரங்கன், “நீங்கள் இருவராகவே ரொம்பச் சிரமப்படுகிறீர்களே... நானும் உதவிக்கு வரலாமா?” என்று கேட்க, “இது எனது குருநாதர் எனக்கு இட்ட கட்டளை. இதை நான்தான் செய்ய வேண்டும்” என்று சொல்லி அந்தச் சிறுவனின் உதவியை மறுத்துவிடுகிறார் ஆழ்வார்.

அப்படியும் அங்கிருந்து செல்லாத அச்சிறுவன், அனந்தாழ்வாரின் மனைவியிடம் சென்று, “அம்மா நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்” எனக் கெஞ்சுகிறான். அதனால், அன் மீது இரக்கப்பட்டு தனக்கு உதவியாக வைத்துக் கொள்கிறார் ஆழ்வாரின் மனைவி. ஆனால், உதவிக்கு வந்த பாலகன், அவர்கள் இருவரும் ஏற்கெனவே செய்து வைத்திருந்த வேலைகளை எல்லாம் சிதைக்கிறான். இதில் சினம்கொண்ட ஆழ்வார், தனது கையில் வைத்திருந்த கடப்பாரையை அவனை நோக்கி வீசுகிறார். அது அச்சிறுவனின் மோவாய் கட்டில் பட்டு, ரத்தம் சொட்டுகிறது. அதோடு அச்சிறுவன் கோயிலுக்குள் ஓடி விடுகிறான். அவனைத் துரத்திச்சென்ற அனந்தாழ்வார், சன்னிதியின் கதவுகள் மூடப்பட்டதால் அங்கேயே திகைத்து நிற்கிறார்.

மோவாய்க்கட்டில் பச்சைக் கற்பூரம்!

இதன் பிறகு, மாலையில் கோயிலுக்கு வந்த அர்ச்சகர்கள் கருவறையில் ஏழுமலையான் இருந்த கோலத்தைப் பார்த்துவிட்டு அதிர்ந்தார்கள். சுவாமியின் மோவாய் கட்டிலிருந்து ரத்தம் கசித்துகொண்டிருந்தது. இதைப் பார்த்த அனந்தாழ்வாரும் அர்ச்சகர்களும் என்ன செய்வதென அறியாமல் திகைத்து நின்றனர். எதையெல்லாமோ பூசிப்பார்த்தும் ரத்தம் நிற்கவில்லை. கடைசியாக, அங்கிருந்த பச்சைக் கற்பூரத்தை எடுத்து அனந்தாழ்வார், சுவாமியின் மோவாய் கட்டில் வைத்ததும் ரத்தம் நின்றது. அனந்தாழ்வாரை சோதித்த ஏழுமலையானைப் பற்றி இப்படியும் ஒரு கதை திருமலையில் இன்றைக்கும் சொல்லப்படுவதுண்டு.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, அனந்தாழ்வாருக்குக் காட்சியளித்த ஏழுமலையான், தினமும் தனது மோவாய் கட்டில் பச்சைக் கற்பூரம் வைத்து பூஜை செய்யுமாறு கட்டளை இட்டதாகவும் அதையடுத்தே இன்றளவும் ஏழுமலையானின் மோவாய் கட்டில் பச்சைக் கற்பூரம் சாத்தப்படுவதாகவும் ஒரு தகவலுண்டு. (இந்த நிழ்வுகளுக்குச் சாட்சியாக, ஏழுமலையான் கோயிலுக்குள் செல்லும்போது, முகப்பு கோபுர வாசலின் வலதுபுறம், அனந்தாழ்வார் வீசியதாகச் சொல்லப்படும் கடப்பாரை, சுவற்றில் தொங்கவிடப்பட்டுள்ளதை நாம் பார்க்கலாம்!)

இதன் பிறகு, தன்னோடு ஒரு திருவிளையாடலை நடத்திய ஏழுமலையானுக்கு தினமும் ஆனந்தமாய் மலர் அலங்காரம் செய்து அழகுபார்த்தார் அனந்தாழ்வார். ஆழ்வார் முதுமை எய்தியபோது, திருமலையில் தானும் ஒரு மரமாக இருந்து நிழல் தர வரம் கொடுக்க வேண்டும் என ஏழுமலையானிடம் வேண்டியதாகவும் அதன்படியே அவர் கோயிலின் மேற்குப் பகுதியில் அவர் உருவாக்கிய பூந்தோட்டத்தில் மகிழ மரமாக நிலை கொண்டதாகவும் ஒரு தகவல் உண்டு. அனந்தாழ்வார் மகிழ மரமாக நிலைகொண்ட இடம் அனந்தாழ்வார் தோட்டம் எனவும், மாமனார் தோட்டம் எனவும் இப்போது அழைக்கப்படுகிறது.

26-வது தலைமுறை

ஏழுமலையானுக்கு மலர் சேவை செய்வதற்காக வந்த அனந்தாழ்வாரின் வம்சாவளியினரே தொடர்ந்து இங்கே புஷ்ப கைங்கர்யம் செய்து வருகிறார்கள். அனந்தாழ்வார் வழிவந்த 26-வது தலைமுறையான ரங்காச்சாரி இப்போது அந்தச் சேவையைச் செய்து வருகிறார்.

திருமலையில் உள்ள அனந்தாழ்வார் பிருந்தாவனத்தில் உள்ள மகிழ மரத்தைச் சுட்டிக்காட்டும் ரங்காச்சாரி.

அனந்தாழ்வார் தோட்டத்துக்குள்ளேயே இவரது வீடு இருக்கிறது. தங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த பாக்கியம் குறித்து நம்மிடம் நெகிழ்வுடன் பேசிய ரங்காச்சாரி, “திருமலையில் பூக்கும் பூக்கள் அனைத்துமே ஏழுமலையானுக்குச் சொந்தமானது. அதனால்தான், ஏழுமலையான் கோயிலுக்குள் பெண்கள் தலையில் பூ வைத்துக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இன்றைக்கு ஏழுமலையானுக்காக தினமும் எங்கிருந்தெல்லாமோ மலர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள். இதுவரை ஒரு ரூபாய்க்குக்கூட ஏழுமலையானுக்கான மலர்களைக் காசு கொடுத்து வாங்கியதில்லை; அத்தனையுமே பக்தர்கள் தருவதுதான். ஆனால், எத்தனை மலர்கள் வந்தாலும் எங்களது மூதாதையரான அனந்தாழ்வார் தோட்டத்திலிருந்து வரும் மலர்கள்தான் ஏழுமலையானுக்குப் பிரதானம்.

எங்கள் குடும்பத்தினர் தினமும் காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடித்து தோட்டத்துப் பூக்களைப் பறிப்போம். பிறகு, அவற்றை வீட்டில் கொண்டுவந்து கட்டி முடித்து காலை ஐந்தரை மணிக்கு முன்னதாகவே கோயிலில் கொண்டுபோய் கொடுத்து ஏழுமலையானுக்கு அணிவிக்கச் செய்து தீபாராதனை பார்த்துவிட்டுத்தான் வீடு திரும்புவோம். அதேபோல், மாலையில் தேவஸ்தானத்து பிருந்தாவனத்தில் பூத்த மலர்களைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். அதையும் நாங்கள் கட்டி எடுத்துக் கொண்டுபோய் சுவாமிக்குத் தருவோம். என்ன வேலை இருந்தாலும் தினமும் காலையும் மாலையும் இந்தச் சேவையை நாங்கள் செய்யத் தவறமாட்டோம்.

குறுப்பு செய்யும் மலையப்பர்!

ஏழுமலையானுக்கு சேவை செய்ய எத்தனையோ பேர் காத்துக்கிடக்க... தனக்குச் சேவைசெய்ய ஏழுமலையானே எங்களது வம்சாவளியை அழைத்துத் தந்திருக்கும் இந்தச் சேவையை எங்களுக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாக நினைக்கிறோம்” என்று சொன்ன ரங்காச்சாரி, “ஆண்டாள் அவதரித்ததும் அனந்தாழ்வார் முக்தியடைந்ததும் ஒரே நாளில்தான். அன்றைய தினம் மலையப்ப சுவாமி எங்களது பிருந்தாவனத்துக்கு வந்து அனந்தாழ்வார் நிறைந்திருக்கும் அந்த மகிழ மரத்தை மூன்று முறை சுற்றிச் செல்வார். இது ஆழ்வாருக்கு அவர் செய்யும் மரியாதை. இதேபோல், பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாள் திருவிழாவின் போதும் மலையப்ப சுவாமி இங்கு வருவார். அது அனந்தாழ்வாரிடம் ஏழுமலையான் சேட்டை செய்து அதற்காக அவரிடம் அடிவாங்கிய நாள். அதனால், அன்றைய தினம் மகிழமரத்தைப் பின்னோக்கியும் சுற்றி வந்து குறும்பு செய்வார் மலையப்பர்” என்று சொன்னார்.

அனந்தாழ்வாரின் 26வது வம்சாவளியான ரங்காச்சாரி.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அனந்தாழ்வார் தொடங்கிய மலர் சேவையை தங்கு தடையின்றி செய்வதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினரும் தனி துறையையே ஒதுக்கி, அதன் மூலமும் சுவாமிக்கு மலர்களை உற்பத்தி செய்து வருகின்றனர். தேவஸ்தானத்தின் தோட்டக்கலைத் துறை சார்பில் சுவாமிக்கு தினமும் 12 வகையான பூக்கள், 6 வகையாக துளசி, தவனம் போன்றவற்றால் மாலைகள் கட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சேவையில் ஏராளமான வாரி சேவை பக்தர்களும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்கள்.

இதுவே எங்களுக்குப் பெருமை

இதுகுறித்து நம்மோடு பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தோட்டக்கலைப் பிரிவின் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசுலு, “மூலவருக்கு தினமும் இரண்டு முறை ‘தோள் மாலை’ செட் அணிவிக்கப்படுகிறது. இதில்,கிரீடம் முதல் தோள் வரை உள்ள மாலைக்கு ‘சிகாமணி’ என்றும், தோள் முதல் பாதம் வரை உள்ள மாலைக்கு ‘சாலிகிராமம்’ என்றும் பெயர்.

ஸ்ரீநிவாசுலு

கழுத்தில் ‘கண்ட ஹாரம்’, மார்பில் தேவி, பூதேவிக்கு அணியும் மாலைக்கு ‘வக்‌ஷோஸ்தல’ மாலை என்றும், இடுப்பில் அணியும் மாலைக்கு ‘கட்க’ மாலை என்றும் பெயர். இவை அனைத்தும் சேர்ந்ததே ‘தோள் மாலை செட்’ ஆகும். ஒவ்வொரு வாரத்திலும் வியாழக்கிழமை மட்டும் சுவாமிக்கு வேறு ஆபரணங்கள் ஏதுமின்றி மலர்களால் மட்டுமே அலங்காரம் செய்யப்படும். இதற்கு மட்டுமே சுமார் 120 கிலோ அளவுக்குப் பூக்கள் தேவைப்படும்” என்றார்.

பிரம்மோற்சவம், சிறப்பு திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி, உகாதி போன்ற விசேஷ நாட்களில் திருப்பூரில் இருந்து பூ வேலை தெரிந்த நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உற்சவ மூர்த்திகளுக்கும், பலிபீடம், கொடிமரம் போன்றவைக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். “திருமலைக்கு காணிக்கையாக வரும் பூக்களில் பாதி தமிழகத்திலிருந்தும், 30 சதவீதம் கர்நாடகத்திலிருந்தும் வருகிறது. எஞ்சிய 20 சதவீதம் திருமலையில் உற்பத்தியாகும் பூக்கள்! ஆண்டுக்கு ஒருமுறை சுவாமிக்கு திருஷ்டி கழிக்க கும்பகோணத்தில் இருந்து ‘குரு வேர்’ எனும் ஒருவித வேர் வரவழைக்கப்பட்டு கட்டப்படுகிறது. கருவறையில் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர்களுக்கு அடுத்தபடியாக சுவாமியை ஸ்பரிசிப்பது அவர் சூடும் மலர் மாலைகள்தான். அந்த மலர் மாலைகளை நாங்கள் எங்கள் கையால் தொடுத்துக் கொடுக்கிறோம் என்பதே எங்களுக்குப் பெருமை” என்று நெகிழ்கிறார் னிவாசுலு.

திருமலையும் திருநாளும்!

அலங்காரப் பிரியரான திருப்பதி ஏழுமலையானுக்கு தினசரி, வாராந்தரி, மாதாந்திர, வருடாந்திர சேவைகள் என ஆண்டுக்கு 465 சேவைகளும் உற்சவங்களும் நடக்கின்றன. தினசரி சேவையாக, சுவாமிக்கு தினமும் அதிகாலை சுப்ரபாதம் தொடங்கி, தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், வசந்தோற்சவம், ஊஞ்சல் சேவை, டோலோற்சவம், ஏகாந்த சேவை போன்றவை நடைபெறுகின்றன. ஜனவரியில் பார்வேட்டி உற்சவம், பிப்ரவரியில் ரதசப்தமி, மார்ச்சில் தெப்போற்சவம், ஏப்ரலில் வசந்தோற்சவம், மே மாதத்தில் பத்மாவதி திருக்கல்யாணம், ஜூனில் ஜேஷ்டாபிஷேகம், ஜூலையில் பூபல்லக்கு திருவிழா, ஆகஸ்ட்டில் பவித்ர உற்சவம், செப்டம்பர் - நவம்பரில் பிரம்மோற்சவம், டிசம்பரில் வைகுண்ட ஏகாதசி என மாதாந்திர சேவைகள் நடத்தப்படுகின்றன. இதில்லாமல், மாதந்தோறும் பவுர்ணமி இரவில் கருட சேவையும் நடை பெறுகிறது. தீபாவளி ஆஸ்தானம், ராம நவமி ஆஸ்தானாம், உகாதி ஆஸ்தானம், ஆனிவார ஆஸ்தானம் ஆகிய நான்கு ஆஸ்தானங்களும் திருமலையின் முக முக்கியமான வருட சேவைகளாகும்.

(முகங்கள் வரும்...)

-என்.மகேஷ்குமார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE