பதறும் பதினாறு 3: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!

By பிருந்தா எஸ்

சாப்பிட மறுத்து அடம்பிடித்தபடி படுத்திருக்கும் மகளைக் கனிவோடு எழுப்பினார் சுரேகாவின் அம்மா. தலையைத் தடவிக்கொடுத்த அம்மாவின் கைகளைத் தட்டிவிட்ட சுரேகா, “உங்க கண்ணுக்கு இப்பதான் நான் தெரியறேனா...” என ஆத்திரத்தில் வெடித்தாள். மகளின் கோபம் அம்மாவை எரிச்சல்படுத்தியது. ஆனால், இந்த நேரத்தில் கோபப்படுவது சிக்கலுக்குத் தீர்வாகாது. அது குமுறலையும் மன உளைச்சலையும் அதிகமாக்கும் என்று தாய் மனதுக்குப் புரிந்தது. அமைதியைத் துணைக்கு அழைத்துக்கொண்டார். சிரித்த முகத்துடன்,

“இது உனக்கே நியாயமா? ஏன் இப்படி இருக்கேன்னு நான் எத்தனை முறை கேட்டேன்! நீதானே எதுவுமே சொல்லாம இருந்தே. சரி, இப்பவாவது சொல்லு” என்று மகளைச் சமாதானப்படுத்தினார்.

அம்மா ஒரு படி இறங்கிவந்து பேசியதும் சுரேகாவின் மனதும் இறங்கியது. அதன் வெளிப்பாடாக மெல்ல சொல்ல ஆரம்பித்தாள்.

“ஸ்கூல்ல கொஞ்ச நாளாவே என் ஃப்ரெண்ட்ஸ் என்கிட்ட அவ்வளவா பேசறதில்லம்மா. அவங்க மட்டும் தனி குரூப்பா இருந்து பேசிக்கறாங்க. நான் ஏதாவது கேட்டா நீயெல்லாம் சின்னப் பொண்ணு, உனக்குப் புரியாதுன்னு சொல்றாங்கம்மா” என்றாள். “சரி, அவங்க ஏதாவது பேசிட்டுப் போறாங்க. அதை ஏன் நீ பெருசா எடுத்துக்கறே...” என்று அம்மா கேட்க, சுரேகா பட்டென மறுத்தாள். “அதெப்படிம்மா... அவங்க எல்லாரும் என் ஃப்ரெண்ட்ஸ். எல்லாத்தையும் என்கிட்டே பேசுவாங்க. 

இப்ப மட்டும் என்னை ஒதுக்கி வச்சிட்டுப் பேசினா என்ன அர்த்தம்? அதோட அடிக்கடி என்னைப் பார்த்து சிரிச்சிக்குவாங்க. என்னைப் பத்திதான் ஏதோ பேசிக்கறாங்கன்னு நினைக்கிறேன்” என்று விட்ட அழுகையைத் தொடர்ந்தாள்.

“சரி அழாதே... என்னன்னு உன் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட நானே பேசிப் பார்க்கிறேன்” என்று ஒருவழியாக மகளைச் சமாதானப்படுத்தி சாப்பிடவைத்தார்.

ஒதுக்கிவைக்கப்பட்ட மகள் மறுநாள் மாலை மகளின் பள்ளிக்குச் சென்றார் சுரேகாவின் அம்மா. பள்ளி முடிந்த பிறகு அவளுடைய தோழிகளைச் சந்தித்தார். அவர்
சொன்னதைக் கேட்டு அந்தச் சிறுமிகள் சிரித்தனர். “இது ஒரு விஷயமே இல்ல ஆன்ட்டி. நாங்க எல்லாருமே பியூபெர்ட்டி அட்டெய்ன் பண்ணிட்டோம். அதனால அது சம்பந்தமா அடிக்கடி எங்களுக்குள்ள பேசிக்குவோம். சுரேகா இன்னும் அந்த ஸ்டேஜுக்கு வரலல்ல. அதான் அவளை விட்டுட்டு நாங்க மட்டும் அதுபத்தி அப்பப்ப பேசிக்குவோம்” என்றார்கள்.

மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவர், பருவ வயதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மகளுக்குச் சொல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.
‘பெரியவங்க’ விஷயங்களைப் பற்றிக் குழந்தைகளிடம் பேசக் கூடாது என்றும் அதுமாதிரி விஷயங்களைப் பேசும்போது அவர்களைச் சற்று தள்ளியே நிறுத்த வேண்டும் என்றும் தான் நினைத்திருந்தது சரியல்ல என்பதை அவர் புரிந்துகொண்டார்.

பருவ மாற்றம் இயல்பு

மகளுக்குப் பிடித்த மாலைச் சிற்றுண்டியைச் சமைத்துக் கொடுத்தார். அதை அவள் சாப்பிடும் நேரத்தில் இயல்பாகப் பேச்சைத் தொடங்கினார். அதன் வழியாக மகளின் மனதை அரித்த புதிர்களை அறிந்துகொண்டார். முடிந்தவரை ஒவ்வொரு புதிராக விடுவிக்கவும் செய்தார்.

பொதுவாக ஆண்களைவிடப் பெண் குழந்தைகளுக்குப் பருவ வளர்ச்சி - உடல் மற்றும் மன அளவில் - சீக்கிரமாகவே தொடங்கிவிடும். சில குழந்தைகளுக்கு எட்டு வயதிலேயேகூட பருவ மாற்றம் வெளிப்படத் தொடங்கும். அதன் ஒரு அங்கமாக மறைவிடங்களில் ரோமம் வளரும், மார்பகம் வளர்ச்சி பெறும். இந்தக் காலகட்டம் குழந்தைகளின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. தன் உடம்புக்குள் திடீரென ஏற்படும் அப்படியான மாறுதல்கள் முதலில் அவர்களைத் திகைக்க வைக்கும்.

என்னதான் பெரியவர்களைப் பார்த்துத் தாங்களும் பெரியவர்கள் ஆனதும் இப்படித்தான் இருப்போம் என நினைத்திருந்தாலும், இந்த வளர்ச்சி அவர்களைக் குழப்பத்தில் தள்ளும். வருத்தமான விஷயம் என்னவென்றால், இன்றைக்கு பெற்றோர் இருவருமே வேலைக்குப் போகும் வீடுகளில், இந்த மாற்றத்தின்போது பெண் குழந்தைகளைக் கவனித்து அவர்களுக்குத் தேவையான தெளிவுகளைக் கொடுப்பது சரியாக நடப்பதில்லை. அப்பாவும் அம்மாவும் தங்கள் மகளுடன் செலவிடக் கிடைக்கும் சிறிது நேரத்தில், அவளை ஒரு சின்னக் குழந்தையாகவே பாவித்துச் செல்லமான வார்த்தைகள் பேசுவதும், விரும்பியதை வாங்கிக் கொடுப்பதுமாக மேம்போக்கான உறவையே கடைப்பிடிக்கிறார்கள்.

வேலைக்குப் போகிறவராக இல்லாதபோதும், சுரேகாவின் அம்மா அதைச் செய்யத் தவறியதுதான் அங்கே பரவிய இறுக்கத்துக்குக் காரணம்.

“எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான உடல் வளர்ச்சி இருக்கும் எனச் சொல்ல முடியாது. இந்தப் பெண் தன் வகுப்புத் தோழிகளைவிட சற்றுத் தாமதமாக வளர்ச்சியடைகிறாள். அதில் கவலைப்பட எதுவும் இல்லை. ஆனால், பருவவளர்ச்சியைக் குழந்தைகளே தெரிந்து கொள்வார்கள் எனப் பெற்றோர் கண்டு
கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல” எனச் சுட்டிக்காட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் வந்தனா.

பருவ வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சுரேகாவுக்குப் புரியும்படி சொன்னார் அவளுடைய அம்மா. அம்மா சொல்லச் சொல்ல சுரேகா
வின் மனதில் ஏற்பட்டிருந்த குழப்ப மேகங்கள் கலைந்தன. இடையிடையே அவளுக்கு நிறைய சந்தேகங்களும் தோன்றின. அம்மா அனுசரணையாகப் பேசியதால், தயக்கமின்றித் தன் சந்தேகங்களை அம்மாவிடம் கேட்டாள். தன் தோழிகள் பருவம் அடைந்துவிட்டதால் அதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதை அவளால் இப்போது ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது. நாளை பள்ளிக்குப் போனால் அவர்களிடம் தனக்குத் தெரிந்தவற்றைப் பேசலாம் என நினைத்துக்கொண்டாள்.

அழகு குறித்த ஆர்வம்

குழந்தைகளிடம் உடல் வளர்ச்சி குறித்துப் பேசுகிற பெற்றோர் பலரும் அவர்களது மன வளர்ச்சி குறித்து அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை. அந்த வயதில் இயல்பாக அவர்கள் மனதில் எழும் ஆர்வம், குறுகுறுப்பு, எதிர் பாலினம் குறித்த தேடல் இப்படிப் பலவும் அவர்களுக்குள் சூறாவளியாகச் சுற்றும். மனது ஒரு நிலையில் நில்லாமல் அலைபாயும். அதுவரை ஏனோதானோவென இருந்தவர்கள், தங்கள் புறத்தோற்றம் குறித்து அதிக ஆர்வம் காட்டுவார்கள். பெற்றோரிடமிருந்து விலகி, தங்களைத் தனித்த ஆளுமையாக அடையாளம் காட்ட விரும்புவார்கள். பல பெற்றோர் இதையெல்லாம் உணராமல் அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் அவர்களை விமர்சித்தபடியும் கண்டித்தபடியும் இருப்பார்கள்.

“ஏன் எப்ப பாரு கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு இருக்கற?”

“எதுக்கு தலைமுடிய இப்படி வெட்டி இருக்க..? இந்த வயசுல என்ன ஸ்டைல் வேண்டிக் கிடக்கு?”

“டிரெஸ்ஸை ஒழுங்கா போடுன்னு எத்தனை முறை சொல்றது?”

“ஆம்பள பசங்ககிட்ட அப்படி என்ன பொழுதன்னிக்கும் பேச்சு?”

இதுபோன்ற வசனங்களை உச்சரிக்காத பெற்றோர் இன்று குறைவு. இவையெல்லாமே நம் அறியாமையின் வெளிப்பாடுகள். குழந்தைகளின் மன ரீதியான மாறுதல்களை நாம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதால்தான் இப்படி நடந்துகொள்கிறோம்.

குழந்தைகள் பருவ வயதில் அடியெடுத்து வைக்கும்போதே அவர்கள் தங்களை வளர்ந்த ஆணாகவும் பெண்ணாகவும் உணரத் தொடங்குவார்கள். எதிர் பாலினம் சார்ந்த ஆர்வமும் தேடலும் இருக்கும்.

ஈர்ப்பு இயற்கையே

குழந்தைகளின் இந்த மாற்றங்களையும் அவை சார்ந்த செயல்பாடுகளையும் நாம் ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்த முடியும். காரணம், அது இயற்கையாக நிகழும் மாற்றம். தவிர, அது அவர்களின் அந்தரங்கமும்கூட. அதற்கு நாம் நிச்சயம் மதிப்புக் கொடுக்க வேண்டும்.

“ஆனால், பல பெற்றோர் அப்படி நடந்துகொள்வதில்லை. எதிர் பாலினம் சார்ந்த தங்கள் செயல்பாடுகளைப் பெற்றோர் எதிர்த்தாலோ கட்டுப்படுத்தினாலோ அதற்குக் குழந்தைகள் இரண்டுவிதமாக வினையாற்றலாம். ஒன்று பெற்றோர் கண்டிக்கிறார்களே என நினைத்து எதையும் வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள் ஒடுங்கிவிடலாம். 

இல்லையென்றால் பெற்றோரை எதிர்த்துச் செயல்படலாம். அவர்களுக்குத் தெரியாமல் அனைத்தையும் செய்யலாம். சில நேரம் எல்லை மீறவும் கூடும். அதனால் இந்த விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிப்பதைவிட அவர்களுடன் சேர்ந்தே நடப்பதுதான் நல்லது” என்கிறார் வந்தனா.

பெற்றோர் நடந்துகொள்வதைப் பொறுத்தே குழந்தைகளின் செயல்பாடும் இருக்கும்.அதுவரை பள்ளியில் நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் சொல்வதை வழக்கமாகக் கொண்ட குழந்தைகள், பருவ வயதை அடைந்த பிறகும் அதைத் தொடரவே செய்வார்கள். நாம் அதற்கு என்ன சொல்கிறோம் என்பதைப் பொறுத்து ஒன்றிரண்டு விஷயங்களை மறைக்கவும் கூடும்.

எந்த வகை பெற்றோர் நாம்?

அவர்கள் மறைக்கிற விஷயங்கள் எப்படிப்பட்டவை என்பதைப் பொறுத்தே அது நல்லதா, கெட்டதா என்பதை முடிவுசெய்ய முடியும். “அம்மா எனக்கு என்கூட படிக்கிற ஸ்நேகாவைப் பிடிச்சிருக்குமா” எனச் சொல்லும் மகனைப் பெற்றோர் பலவிதங்களில் கையாளலாம். ஆனால் அதில், “இதெல்லாம் இந்த வயசுல ரொம்ப சகஜம்தான் கண்ணா. உனக்கு அவளைப் பிடிச்சிருக்கு, அவ்ளோதானே. இதுல மறைக்கவும் தப்பா நினைக்கவும் என்ன இருக்கு? ரெண்டு பேரும் நல்ல ஃப்ரண்ட்ஸா இருங்க. இப்ப படிப்புதானே முக்கியம்? படிப்பைப் பாதிக்கிற எதுவுமே நல்லதில்லைன்னு உனக்கே தெரியும்தானே” எனத் தோழமையுடன் சொல்வதே மிகச் சிறந்த அணுகுமுறை. 

“என்னங்க அநியாயமா இருக்கு. வயசுப் பசங்க எப்படி நண்பர்களாக மட்டுமே இருக்க முடியும்? இதையெல்லாம் எப்படி அனுமதிக்கிறது?” என்று தோன்றினால் சிக்கல் பெற்றோரிடம்தான். குழந்தைகளின் இயல்பான பால் சார்ந்த விருப்பங்களை அனுமதிக்க வேண்டும். அவற்றை எதிர்க்க நினைக்கும்போதுதான் அது அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். நமக்குத்தான் அவர்கள் குழந்தைகள். ஆனால், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்கள் பெரியவர்களின் தகுதியை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தபடி இருக்கிறார்கள். பருவ வயது குழந்தைகளின் பாலியல் சார்ந்த விருப்பங்களை நாம் எந்த அளவுக்குத் தெரிந்துவைத்திருக்கிறோம்? அவர்கள் தங்கள் நண்பர்களிடம் என்னவெல்லாம் பேசுவார்கள் என்பதை அனுமானித்திருக்கிறோமா? இதையெல்லாம் உணராததால்தான் வகுப்புத் தோழனுக்குத் தன் மகள் அனுப்பிய வாட்ஸ் - அப் மெசேஜ் பிரேமாவை அதிரவைத்தது. தன் மகளா இப்படி என அதிர்ச்சியில் உறைந்துபோனாள். அது அப்படி என்ன மெசேஜ்..?

(நிஜம் அறிவோம்…)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE