‘மெட்டல் மண்டையா... பசிக்குது சீக்கிரம் வாடா!’-கோவைக்கும் வந்தாச்சு ரோபோட் உணவகம்

By காமதேனு

அன்பைச் சொல்லும் இதயச் சின்னம் மினுங்க, வெண்மையும் நீலமுமான ரோபோட் மெதுவாக நகர்ந்துவருகிறது. அதன் கையிலிருக்கும் தட்டில் ஆவி பறக்க சிக்கன் பிரியாணி, குருமா, பன்னீர் மசாலா. சிந்தாமல் சிதறாமல் அதைக் கொண்டு வந்து நம் அருகில் நிற்க... சின்னக் குழந்தையாக மாறிப்போகிறது மனம். இளம் பெண்கள் ‘வாவ்...’ என்று கொண்டாடுகிறார்கள். கோவை அவிநாசி சாலையிலிருக்கும் செந்தில் டவர்ஸ் கட்டிடத்தில்தான் ரோபோட் உபசரிப்புடன் இப்படி ஒரு உணவகம்!

காலை 11 மணிக்கு உள்ளே நுழைந்தபோது ஊழியர்கள் மேசைகளை சுத்தம் செய்து, அதில் தண்ணீர் பாட்டில், டம்ளர்கள், தட்டுகள், ஸ்பூன், மிளகு, உப்புப் பொடி தூவும் கிண்ணங்கள், கைத்துடைக்கும் காகிதம் ஆகிய வற்றை வைக்கின்றனர். கூடவே, சிறு லேப்டாப் சாதனம் போன்றதொரு மீட்டர். அதன் பட்டனை அழுத்தியவுடன் மானிட்டர் ஸ்கிரீனில், ‘ROBOT’ வாசகங்கள் விழுந்து, சிறிது நேரம் Loading காட்டி, நமக்கான மெனு கார்டு வருகிறது. இன்னொரு பக்கம்... அந்த டேபிள்களைச் சுற்றி ஸ்பெஷலாக போடப்பட்டிருக்கும் தரை விரிப்பை (அதன் கீழே தண்டவாளம் போல் மின் காந்த அலைகள் தொழில்நுட்பம் உள்ளது என்றார்கள்.) ஒரு முறைக்கு நான்கு முறை நவீன துடைப்பத்தின் மூலம் சுத்தம் செய்கின்றனர் பணியாளர்கள். சமையலறையை ஒட்டியிருக்கும் அறை திறக்கப்படுகிறது. அங்கு வரிசையாக நிற்கின்றன வெண்மையும் நீலமும் கலந்த வண்ணங்களிலான ரோபோட்கள்.

மதியம் 12 மணி. வாடிக்கையாளர்கள் வரத் தொடங்குகிறார்கள். ஒவ்வொருவரின் கண்களிலும் ஆர்வம். ‘சாப்பிடுவதற்கு என்ன இருக்கு?’ என்பதைக் கேட்பதற்கு முன்பாக, “ரோபோட் எங்கேங்க..?” என்று ஆர்வத்துடன் தேடுகிறார்கள். அதற்கு ஊழியர்கள், “வருவாங்க... மொதல்ல மீட்டரில் மெனு பார்த்து டிக் பண்ணுங்க...” என்று வழி முறையைச் சொல்லித் தருகிறார்கள். நாம் ஆர்டர் தந்த சில நிமிடங்களில் உணவு தயாராகி, ரோபோட்டின் கைகளில் வைக்கப்படுகிறது. 

அதன் தலையிலிருக்கும் இதயச் சின்னத்தில் சிகப்பு விளக்கு மினுங்க, கிச்சன் ஏரியாவிலிருந்து மெல்ல நகர்கிறது ரோபோட். குறிப்பிட்ட இருக்கைக்குச் செல்லும் ரோபோட் வாடிக்கையாளரை நோக்கி “டேக் யுவர் ஃபுட்” என்று மின்னணு மொழியில் சொல்கிறது. தன் கரத்தில் அது ஏந்தி நிற்கும் உணவை உதவியாளர் ஒருவர் எடுத்து வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுகிறார். பின்பு ரோபோட் தன் பாதையில் நகர்ந்து மற்ற ரோபோக்கள் வரிசையில் பின்னால் நின்றுகொள்கிறது. இப்படியே அடுத்தடுத்து ரோபோட்கள் நகர்கின்றன!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE