சீதா (மண்டப) கல்யாண வைபோகமே!- 58 ஆண்டுகள்... 20 ஆயிரம் திருமணங்கள்!

By காமதேனு

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் சீதா கல்யாண மண்டபத்துக்கு வழியைக் கேட்டால் யாரும் சொல்லி விடுகிறார்கள். ஒரு திருமண மண்டபத்துக்கு மக்கள் வழி சொல்வது பெரிய விஷயமில்லைதான். ஆனால், இங்கு இதன் காரணம் வேறு. அது அந்த நிர்வாகத்தினரின் தன்னலமற்ற சேவை. ஒரே நேரத்தில் மூவாயிரம் பேர் பயன்படுத்தக்கூடிய நான்கு திருமண மண்டபங்களைக் கட்டி 58 ஆண்டுகளாகப் பொது மக்களுக்கு இலவசமாகப் பயன்பாட்டுக்குத் தந்துகொண்டிருக்கிறார்கள். 

அங்கெல்லாம் ஆண்டுக்குச் சராசரியாக 400 திருமணங்கள் நடக்கின்றன. இதுவரை இங்கு நடந்த திருமணங்கள் 20 ஆயிரத்துக்கும் அதிகம். இதுவும் போதாதென்று இன்னும் இவர்கள் மண்டபங்களைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்!

கோபி - ஈரோடு பிரதான சாலையில் ஆறரை ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த மண்டபங்களைத் தங்கமணி முத்து வேலப்ப கவுண்டர் 1961-ல் உருவாக்கினார். நிலக்கிழாரான அவர், ஏழைகள் திருமணம் செய்துகொள்வதற்குப் படும் சிரமத்தைப் பார்த்துவிட்டு அவர்களுக்காகவே இந்த இலவசத் திருமண மண்டபங்களைக் கட்டினார். கடந்த காலங்களில் பாய், ஜமுக்காளம், பாத்திரங்கள் எல்லாமும் இலவசமாக வழங்கப்பட்டன. தற்போது டைனிங் டேபிள், சேர் உட்பட சமையல் காஸ் அடுப்பு நடைமுறைகள் நிறைய மாறிவிட்டதால், இவை எல்லாம் குறைந்த வாடகைக்கு அளிக்கிறார்கள்.

மண்டபத்தின் மேலாளர் சுப்பிரமணியனிடம் பேசினேன். “அந்தக் காலத்தில் பெண் வீட்டில்தான் திருமணம் நடக்கும். மாப்பிள்ளை வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும். இரட்டைச் செலவு. அலைச்சலும் அதிகம். இதைத் தடுக்க பொதுவான இடத்தில் கல்யாணம் நடத்த வேண்டும்; அதுவும் இலவச மண்டபமாக இருக்க வேண்டும் என்கிற சிந்தனையுடன் இந்த மண்டபத்தைக் கட்டினார் தங்கமணி முத்துவேலப்ப கவுண்டர். தனக்குப் பிறகும் இந்த மண்டபம் இலவசமாகவே செயல்பட வேண்டும் என்பதற்காக அவர் கோபி பெரியார் மைதானத்தில் ஒரு கட்டிடத்தையும், நிலத்தையும் எழுதி வைச்சார். தன் வாரிசுகளைக் கொண்டு இதுக்காக ஒரு அறக்கட்டளையும் உருவாக்கினார். அந்தக் கட்டிட வாடகையிலும் நிலத்தை விற்றுக் கிடைத்த பணத்தின் வட்டியிலும்தான் இந்த மண்டபத்தின் செலவினங்கள் நடக்குது” என்று சொன்னார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE