பதறும் பதினாறு 2: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!

By பிருந்தா எஸ்

அன்றும் வழக்கம்போல அப்பா செல்போனிலும் அம்மா சமையலிலும் மூழ்கியிருக்க, செல்வா தனித்து விடப்பட்டான். தனித்திருக்கும் வேளையில் செய்வதைத்தான் அன்றும் செய்தான். கம்ப்யூட்டரில் ஒளிர்ந்த காட்சிகளுக்கு ஏற்பத் தன் மகனின் முகத்தில் ஏற்படும் மாறுதலை செல்வாவின் அம்மா யதேச்சையாகப் பார்த்தார். “அப்படி என்னடா வச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருக்க...” என்ற அம்மாவின் குரலுக்கு அதிர்ந்து திரும்பினான் செல்வா. அம்மா சமையலறையில் இருந்து வருவதற்குள், வீடியோவை கண்ணிமைக்கும் நேரத்தில் டெலிட் செய்துவிட்டுப் பாடம் தொடர்பான இணையதளத்துக்கு மாறினான்.

பெற்றவள் அல்லவா... மகனின் பதற்றம் அம்மாவுக்கு எதையோ சொன்னது. யோசனையோடு திரும்பிச் சென்றார். இரவு செல்வா தூங்கிய பிறகு அவனது கம்ப்யூட்டரை ஆன் செய்தார். அதுவரை அவன் எதையெல்லாம் தேடியிருக்கிறான், பார்த்திருக்கிறான் என்பதை அறிந்துகொள்ள ‘சர்ச் ஹிஸ்டரி’யைத் தேடினார். அனைத்துமே கவனமாக அழிக்கப்பட்டிருந்தன!

இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு ‘கிளியர் சர்ச் ஹிஸ்டரி’ குறித்து நாம் சொல்லித்தரத் தேவையில்லை என்பது செல்வாவின் அம்மாவுக்குப் புரியாமலில்லை. மகன் போக்கு சரியில்லை... எதையோ மறைக்கிறான்... என உள்ளுக்குள் ‘கவுளி’ கத்தியது. அவனிடமே கேட்டுவிடலாம் என விடியும்வரை காத்திருந்தார். அவன் அம்மாவின் அந்தச் செயல்பாடுதான் செல்வாவுக்கு நல்லதொரு விடியலாக அமைந்தது.

மனதை மாற்றிய அன்பு

காலையில் செல்வா எழுந்ததுமே எதையும் அம்மா கேட்டுவிடவில்லை. வழக்கமான வேலைகளை சற்று சீக்கிரமாகவே முடித்தார். மகனை அரை மணி நேரம் முன்பாகவே பள்ளிக்குத் தயாராகச் சொன்னார். “உங்கிட்ட ஒண்ணு கேட்கணும் செல்வா” என்று சொன்ன அம்மாவைக் கேள்விக்குறியோடு பார்த்தான். “நீ தினமும் கம்ப்யூட்டர்ல என்ன பார்க்கிற?” என்ற அம்மாவின் கேள்வியால் அதிர்ந்தான். ஆனால், அதைச் சட்டென மறைத்து, “ஸ்கூல்ல நிறைய புராஜெக்ட்ஸ் தர்றாங்கம்மா. அது சம்பந்தமாதான் தேடிக்கிட்டு இருந்தேன்” என்றான். “அப்புறம் எதுக்கு சர்ச் ஹிஸ்டரிய கிளியர் பண்ண...?” என்ற கேள்விக்கு செல்வா மவுனத்தை மட்டுமே பதிலாக வைத்திருந்தான்.

தரையைப் பார்த்தபடி குனிந்திருந்த மகனின் தலையை ஆதரவுடன் தடவிக்கொடுத்த அவன் அம்மா, “எங்கிட்ட எதையும் மறைக்காதே. என்ன நடந்ததுன்னு சொன்னாதான், உனக்கு எது நல்லதுனு நான் சொல்லித் தர முடியும்” என்றார். அம்மாவின் அன்பு செல்வாவைக் கலங்க வைத்தது. குற்றவுணர்வோடு பார்த்துவிட்டுப் பள்ளிக்குக் கிளம்பிப் போனான்.

வேண்டாமே இளமையில் தனிமை

மாலை பள்ளி விட்டு வந்ததும் தங்களுக்குத் தெரிந்த மன நல ஆலோசகரிடம் செல்வாவை அழைத்துச் சென்றனர் அவனது பெற்றோர். அங்கே செல்வாவிடம் பேசியதைவிட அவனுடைய பெற்றோரிடம்தான் மன நல ஆலோசகர் நிறைய நேரம் பேசினார். அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகிற பதின் பருவத்தில் குழந்தைகளை வெகுநேரம் தனித்து விடுவது தவறு. பேச்சுக்குக் குழந்தையாகவே இருந்தாலும், உள்ளுக்குள் தங்களைப் பெரியவர்களாகக் கருதிக்கொள்ள ஆரம்பித்திருப்பார்கள். அது ஒரு குழப்பமான மனநிலை. தோன்றியதை எல்லாம் பெற்றோரிடம் அப்படியே சொல்லும் போக்கு குறைந்து, ‘நானாகவே பார்த்துக்கொள்ள முடியும்’ என்ற ஒரு எண்ணம் ஏற்படும் வயது அது. அதேசமயம், மனம்விட்டுப் பேசலாமா பேசக் கூடாதா என்ற ஒரு தவிப்பும் குழப்பிக்கொண்டிருக்கும்.

அந்தக் குழப்பத் தருணங்களில் அவர்கள் தனித்திருக்கும்போதுதான், கூடாத விஷயங்களை வெளியிலிருந்து உள்வாங்கி, விவேகமற்ற முடிவுகளை நோக்கி நகர ஆரம்பிக்கிறார்கள். பெற்றோருக்கு நேரமில்லை என நினைத்து சில குழந்தைகள் தங்கள் வேலையைத் தாங்களே செய்துகொள்ளலாம். ஆனால், பெரும்பாலான குழந்தைகள் பெற்றோரின் அரவணைப்புக்காகவும் அன்பான சொற்களுக்காகவும் காத்திருப்பார்கள். தங்கள் மனக் குழப்பங்களை எல்லாம் அவர்களிடம் கொட்டிவிடத் துடித்தபடியே இருப்பார்கள். அவர்களின் தேவையெல்லாம், ‘நீ எதுக்கும் கவலைப்படாதே. நாங்க பார்த்துக்கறோம்’ என்ற பரிவான புரிதல் வார்த்தைகள்தான்.
செல்வாவின் பெற்றோர் தாங்கள் அனுமதித்த தனிமை வலைக்குள் தங்கள் மகன் சிறைபட்டுப் போயிருப்பதை உணர்ந்தனர். தான் மூழ்கவிருந்த புதைகுழியிலிருந்து சில மாத மன நல ஆலோசனைக்குப் பிறகு வெற்றிகரமாக மீண்டுவிட்டான் செல்வா.

இப்போதெல்லாம் அலுவலக வேலையை வீட்டினுள் அவனுடைய அப்பா கொண்டு வருவதில்லை. மனைவிக்கு வேண்டிய உதவிகள் செய்வதும், சீக்கிரமே மனைவியை விடுவித்து ‘ஃப்ரீ’ ஆக்குவதும் அவரால் முடிகிறது. கணவன், மனைவி இருவருமே தங்கள் மகனுடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். நிறைவாக உணரத் தொடங்கினான் செல்வா. அதன்பிறகு அவர்கள் வீட்டில் கம்ப்யூட்டருக்கு பாஸ்வேர்ட் தேவைப்படவே இல்லை.

கண்காணிப்பு நல்லது

வழிமாறிப் போகும் குழந்தைகளைப் பற்றி செய்தி கேள்விப்படும்போதெல்லாம், நம் வீட்டுக் குழந்தைக்கும் அப்படி ஒரு மறுபக்கம் இருக்குமோ என்று அவசரப்பட்டு அச்சப்படத் தேவையில்லை. அவர்கள் எதைச் செய்தாலும் சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தால், தேவையற்ற கடுமை காட்டும் சூழலை அது உருவாக்கும். குழந்தைகளின் மனதைப் புண்ணாக்கும். பெற்றோர் குறித்த பயத்தையும், கோபத்தையும் கிளப்பி விடும். மொத்தத்தில் அது வேறுவிதமான விபரீதத்தில் கொண்டுபோய் விடும்.

நேர்மையான, மென்மையான, உரிமையான கண்காணிப்பு மட்டும் போதும். பொருளாதாரத்திலும் தொழில் நுட்பத்திலும் உயரத்துக்கு வந்துவிட்டு கலாச்சாரத்தில் மட்டும் குழந்தைகளை முப்பது ஆண்டுகள் பிந்தியிருக்கச் சொல்வது தவறு. பருவ வயதுக் குழந்தைகளின் உளவியல் மாற்றத்தை நாம் புரிந்துகொள்ள முயல வேண்டும். குடும்பத்தில் ஜனநாயகத்தன்மை நிலவினாலே பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்துவிடும்.

பெண் குழந்தைகளை விழுங்கும் ஆபத்து

பதின் பருவ ஆண் குழந்தைகள் மட்டும்தான் சிக்கலுக்கு ஆளாகிறார்களா என்ற கேள்வி எழலாம். சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆய்வறிக்கைகளும் சில புள்ளிவிவரங்களும் நமது கணிப்பைப் பொய்யாக்குகின்றன. பாலியல் படங்களைப் பார்ப்பதில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகப் பாலியல் சம்பந்தப்பட்ட படங்களை ஒருங்கிணைக்கும் ஒரு இணையதளம் கடந்த ஆண்டு தெரிவித்தது. இந்தியாவில் பெண்களில் 30 சதவீதத்தினர் பாலியல் சம்பந்தப்பட்ட படங்களைப் பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கும் அந்த ஆய்வு, அவர்களில் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களே அதிகம் என அதிரவைக்கிறது. ஆனால், தனக்கு 18 வயது என்று குறிப்பிட்டுவிட்டுப் படங்களைப் பார்த்தவர்கள் 18 வயதுக்குக் குறைவானவர்களாகவும் இருக்கலாம். காரணம், பெரியவர்களுக்கான வீடியோ படங்களைப் பார்க்கும் முன்னரும் சில குறிப்பிட்ட இணையதளங்களுக்குள் நுழையும் முன்னரும் வயது குறித்த நோட்டிஃபிகேஷன் வரும். அதில் தனக்கு 18 வயதுதான் என்பதை உறுதிப்படுத்த ஒன்றிரண்டு தகவல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வளவுக்குப் பிறகுதான் குழந்தைகள் அவற்றைப் பார்க்க முடியும்.

ஆனால், பருவ வயதில் இயல்பாகவே தூண்டப்படும் ஆர்வத்தின் காரணமாக இது போன்ற எச்சரிக்கைகளை இந்தக் காலத்து குழந்தைகள் மிக எளிதாக மீறி, பெரியவர்களின் உலகுக்குள் நுழைந்துவிடத் துடிக்கிறார்கள். வயதின் வேகத்துக்கு மனமும் ஈடுகொடுக்க வேண்டுமல்லவா?

ஊசலாடும் பருவம்

உடலுக்குள் ஏற்படும் மாற்றம் பெண் குழந்தைகளை விரைவாகப்பருவ மாற்றத்துக்கு அழைத்துச் செல்லும். ஆனால், பெரும்பாலான நேரம் அவர்களின்மனம் அதற்கேற்ப பக்குவப்படுவதில்லை. அது குழந்தை நிலைக்கும் வளர்ந்த பெண்ணின் மனநிலைக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருக்கும்.

அப்படியொரு ஊசலாட்டமான நிலையில்தான் சுரேகா இருந்தாள். எட்டாம் வகுப்பு படிக்கிறாள். அன்று பள்ளியில் இருந்து திரும்பியது முதலே கோபமும் அழுகையுமாக வெடித்தாள். என்னவெனக் கேட்டபோதும் சரியாகப் பதில் சொல்லவில்லை. சரி, வகுப்பில் தோழிகளிடம் சண்டை போட்டிருக்கலாம் என நினைத்து சுரேகாவின் அம்மாவும் அமைதியாகிவிட்டார். ஆனால், இரவு சாப்பாட்டை மகள் தவிர்த்தபோதுதான் ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என அவளுடைய அம்மா நினைத்தார். 

சுரேகாவின் அம்மாவைப் பொறுத்தவரை பெண் குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்த பிறகு அப்பாவை விட்டுத் தள்ளி இருக்க வேண்டும். அப்படித்தான் சுரேகாவையும் வளர்த்தார். சிறு வயதில் சுரேகாவுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் இரண்டையும் சொல்லித் தந்ததோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக அவளுடைய பெற்றோர் நினைத்தனர். அவள் வளர வளர பெற்றோர் இருவரும் அவளிடமிருந்து கொஞ்சம் விலகியே இருந்தனர். பருவ வயதை அடைந்ததும் அவளாகவே அனைத்தையும் அறிந்துகொள்வாள் எனப் பட்டும் படாமலும் சிலவற்றை மட்டும் சுரேகாவின் அம்மா சொல்லித்தந்தார். ஆனால், தடுமாற்றம் நிறைந்த வயதில் அவளுக்குத் தேவைப்பட்ட மன ரீதியான ஆதரவைப் பெற்றோர் தரவில்லை. அதுதான் சுரேகாவின் அன்றைய அழுகைக்குக் காரணம். எவ்வளவோ தேற்றியும் அடக்க முடியாமல் அழுகிற அளவுக்கு சுரேகாவுக்கு என்ன நடந்தது?

(நிஜம் அறிவோம்...)

-பிருந்தா சீனிவாசன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE