விஐபி-க்களின் விருந்து சாப்பாடு 2: திருச்சி வேலுச்சாமி

By காமதேனு

காங்கிரஸ் கட்சியின் பிரபலமான முகம் திருச்சி வேலுச்சாமி. பொதுக்கூட்டங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் என்று பரபரப்பாக இருக்கும் அவர் திருச்சியில் இருந்தால், விரும்பிச் செல்லும் உணவகம் தில்லைநகர் 11-வது கிராஸில் இருக்கும் ‘ஆப்பிள் மில்லட்’.

“தற்போது சிறுதானிய உணவுகளை மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கேற்ப சிறுதானிய உணவுகளை மட்டுமே முழுநேரமும் தரும் வகையிலான உணவகம் இது.  நான் மட்டுமல்ல கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் தங்கர்பச்சான், மருத்துவர் கு.சிவராமன் என்று நிறைய பிரமுகர்கள் வருகிறார்கள்” என்றார் வேலுச்சாமி.

கம்மங்கூழ், ராகிகூழ், திரிகடுகம் காபி, தினைப்பாயசம், தினை அல்வா, வரகரிசி சாதம், சாமை சாம்பார் சாதம், குதிரைவாலி தயிர்சாதம், குதிரைவாலி சைவ பிரியாணி, மணத்தக்காளி சூப், தூதுவளை சூப், சுழியம், தானிய சுண்டல், குழிப்பணியாரம், ஆப்பம் என்று ஏகப்பட்ட ஐட்டம் இருந்தாலும், வேலுச்சாமி விரும்பிச் சாப்பிடுவது சைவ மீன் வறுவலும், காரைக்குடி காளானும்தான்.

“நான் சைவ சாப்பாட்டுக்காரன். அதனால மீன், சிக்கன் பக்கமெல்லாம் திரும்பினதேயில்லை. என்னுடைய நண்பர்கள் சிலர் இங்க அழைச்சுகிட்டு வந்து இந்த இரண்டையும் அறிமுகப்படுத்தி வைச்சாங்க. காரைக்குடி காளான் அச்சு அசலா சிக்கன் 65 போல வும், சைவ மீன் வறுவல் ஒரிஜினல் மீன் போலவும் இருக்குன்னு சொன்னாங்க. அப்படிச் சொல்ல முடியாட்டியும், உரைப்பு தூக்கலான மசாலாவை எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அதனால் எப்ப ஊர்ல இருந்தாலும் ஆப்பிள் மில்லட்டுக்கு ஒருநடை வந்து இந்த இரண்டையும் சாப்பிட்ருவேன்” என்கிறார் வேலுச்சாமி.

தனது இருசக்கர வாகனத்தில் அவர் வந்து இறங்கியதுமே அவருக்கான ஆர்டரைக் கொடுத்துவிடுகிறார் கடையின் உரிமையாளர் வீரசக்தி. உள்ளே போய் அமர்ந்ததும் தினை அல்வாவைக் கொண்டு வந்து வைத்தார்கள். அதை ருசித்துச் சாப்பிட்டவர் அடுத்ததாக சைவ மீன் வறுவல் பக்கம் தாவினார். அதைச் சாப்பிட்டுக்கொண்டே, “ஐயா... காரைக்குடி காளான் இன்னும் வரல...” என்று வடிவேலு பாணியில் ஞாபகப்படுத்த, அடுத்தகணம் அதுவும் ஆஜர். இரண்டையும் அவர் சாப்பிடட்டும். நாம் அதன் செய்முறையை உரிமையாளர் வீரசக்தி மற்றும் தலைமைச் சமையலர் ரமேஷிடம் கேட்டுத் தெரிந்துகொள்வோம்.

காரைக்குடி காளான்:

கடைகளில் கிடைக்கிற ஊட்டி காளானை, (சொந்தமாக இடித்துப் பயன்படுத்தும்) காரைக்குடி மசாலா கொண்டு பொறித்து எடுப்பதே காரைக்குடி காளான். தேவையான அளவு காளானை சிறிதாக நறுக்கிக்கொள்ள வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டு விழுதையும், தனித்தனியாக அரைத்து வைத்திருக்கும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றையும் ஒன்றாகப் பிசைந்து அதில் உப்பு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து காளானைப் பிசறி வைத்துக்கொள்ளவும். தனியாக வறுத்து அரைத்து வைத்திருக்கும் வரமல்லித்தூளை அதன்மேல் தூவிவிட்டு, வானலியில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்து பரிமாறினால் ருசியான வருவல் தயார். சிக்கன் சாப்பிட ஆசையுள்ள சைவர்களுக்கு இது சரியான மாற்றாக இருக்கும்.

சைவ மீன் வறுவல்:

உருளைக்கிழங்குதான் மீன். தோல் நீக்கிய உருளைக்கிழங்கை மீன் துண்டு அளவுக்கு சைசாக சீவி எடுத்துக்கொள்க. அதில் உப்பும், மஞ்சள் தூளும் சேர்த்து அரைவேக்காடாக வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வறுவலுக்கு உள்ள மசாலாவைத் தனியாக செய்துகொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றிப் பிசைந்து எடுத்துக்கொண்டால் மசாலா ரெடி. அதில் உருளைக்கிழங்கை 15 நிமிடத்துக்கு ஊறவைக்கவும்.

பொட்டுக்கடலை, சீரகம், மிளகு, வரமிளகாய் ஆகியவற்றை வறுத்து பொடிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் உருளைக்கிழங்கை பஜ்ஜிக்கு தோய்ப்பதுபோல் தோய்த்து எடுத்து தாவா அல்லது தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி மீன் வறுப்பது போல இருபக்கமும் புரட்டிப்போட்டு வறுத்து எடுக்க வேண்டும். எடுக்கும்முன் அதில் லேசாக நெய் ஊற்றி இறக்க வேண்டும். இது ஒரிஜினலான மீனைப்போலவே சுவை தரும்.

“இவற்றை உணவோடு சேர்த்தும் சாப்பிடலாம், அல்லது மாலை நேரச் சிற்றுண்டியாகத் தனியாகவும் சாப்பிடலாம். இரண்டுமே இங்கே ஒரு பிளேட் 60 ரூபாய்தான். பெரும்பாலும் ஒரு சாதமும், சைவ மீன்வறுவலும்தான் பலரது விருப்பமுமாக இருக்கிறது. சிறுதானிய உணவுகள் 60 ரூபாய். மொத்தம் 120 ரூபாய்க்கு திருப்தியான மதிய உணவை முடித்துக்கொள்ளலாம்.

காளானில் பி வைட்டமின், புரோட்டின், கார்போஹைட்ரேட் ஆகியவை கிடைக்கும். உருளைக்கிழங்கில் புரோட்டின், கார்போ ஹைட்ரேட் மற்றும் நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. மிளகாய், மல்லி, மஞ்சள் எல்லாவற்றையும் பார்த்துப்பார்த்து வாங்கிக் காயவைத்து அரவைமில்லில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்வதால் நிரந்தரமான சுவை கிடைக்கிறது. அதேபோல மசாலாவை அவ்வப்போது அரைத்துத்தான் பயன்படுத்துகிறோம். எந்தவித செயற்கை சுவையூட்டிகளையும், நிறமூட்டிகளையும் பயன்படுத்துவதில்லை என்பதால் உடலுக்கு எந்தத் தீங்கும் நேரிடாது’’ என்கிறார்  வீரசக்தி.

-கரு.முத்து

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE