நானொரு மேடைக் காதலன் - 2

By நாஞ்சில் சம்பத்

வாரியார் சுவாமிகள் தந்த விருதால் எனது வானத்தில் நம்பிக்கை மேகங்கள் கருக்கொண்டன. அடுத்த நாள் கல்லூரியில், கதாநாயகனைக் கொண்டாடுவது போல் நண்பர்கள் என்னைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். பேராசிரியப் பெருமக்களின் வாழ்த்துகுரியவன் ஆனேன். எனக்குள் ஒரு குற்றாலக் குதூகலம் குடிகொண்டது. அதே நேரத்தில் அலட்டிக்கொள்ளாமல், தற்பெருமைக்கு இடம் கொடுக்காமல் எப்போதும் போல் எனது அடிகளை அளந்தே எடுத்து வைத்தேன். தகுதியுள்ள சொற்பொழி வாளனாகத் தலை நிமிர்வதற்கு படிக்க வேண்டிய நூல்களைத் தேடினேன்.

மதுரைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் அ. கி. பரந்தாமனாரின் ‘பேச்சாளராக’ என்ற புத்தகத்தைத் தேடிப்பிடித்து வாங்கினேன். அந்தப் புத்தகத்தைப் படித்தபிறகு, ஏற வேண்டிய படிகள் இன்னும் நிறையவே என்பதை எண்ணி மலைத்தேன். படிக்காவிட்டாலும் கேட்க வேண்டும் என்றான் வள்ளுவன். ‘கற்றில ஆயினும் கேட்க’ என்பது குறள். கேட்கத் தொடங்கினேன்.

கரும்பலகையில் மட்டுமே எழுதிப்போட்டு, விளம்பரமில்லாமல் நடத்தப்படும் சித்ரா இந்து மத நூல் நிலைய கூட்ட அரங்கில் நடைபெறுகிற கூட்டங்களில் பார்வையாளர் வரிசையில் இடம் பிடித்தேன். வெள்ளிக்கிழமை தோறும் நாகர்கோவில் நகரில் நடைபெறுகிற திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டங்களில் தவறாமல் சிறப்புரை ஆற்றுகிற சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவை உள் வாங்கினேன். 

பறப்பதற்காகச் சிறகுகளைச் சேகரிக்கத் தொடங்கிய காலத்தில் என்னால் வேறெதிலும் கவனம் செலுத்தமுடியவில்லை.
ஒரு வாலிபனுக்குரிய குறும்போ ஒரு இளைஞனுக்குரிய ஆரவாரமோ என்னிடத்தில் இல்லாமல் இருந்ததற்காக நான் கவலைப்படவில்லை. தனஞ்சயனுக்கு பறவையின் கழுத்து மட்டுமே கண்ணுக்குத் தெரிந்ததைப்போல... மேடை மட்டுமே என் கண்ணுக்குத் தெரிந்தது. கனவு காணுகிற வயதில் காதலை மறந்து சுகங்களுக்கு ஆட்படாத சூரியப்பருந்தாக இருந்ததில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்தது. நாடும் ஏடும் கவனிக்கிற சொற்பொழிவாளனாய்ச் சுடர்விட, அடியேன் கொடுத்த விலை மிகமிக அதிகம். எந்தப் பின்புலமும் இல்லாமல் சொல்லிக்கொள்கிற மாதிரி வாய்ப்பும் இல்லாமல், மலையாளமும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடை பேசுகிற ஊரில் பிறந்து தமிழ் பேசுகிற மேடையில் உலா வருகிறேன் என்றால் தாய் செய்த தவமா, தமிழ் தந்த வரமா தெரியவில்லை.

எழிலும் அழகும் கொட்டிக்கிடக்கும் என் ஊரில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் இணக்கமாகவே இருந்து வருகிறார்கள். சமூக நல்லிணத்துக்கும் சமய சகிப்புத்தன்மைக்கும் ஊனம் வராமல் காப்பாற்றுவதில் எனது பங்கை எப்போதும் நான் செலுத்தி வருகிறேன். செய்தித்தாள்களில் புத்தக மதிப்புரையைப் பார்த்து ‘இந்தப் புத்தகத்தை வாங்கித் தருவீர்களா...’ என்று கேட்டால் தட்டாது வாங்கித் தந்தவர், அப்பாவுக்குச் சொந்தமான கடையில் ஸ்டேஷனரி வியாபாரம் செய்து வந்த சுலைமான் காக்கா. வானம் அளவு வாஞ்சையைப் பொழிகிற அவரின் முயற்சியால் எங்கள் ஊர் இஸ்லாமிய இளைஞர் இயக்க ஆண்டு விழாவில் உரையாற்றுகிற உன்னதமான வாய்ப்புக் கிடைத்தது.

ஆண்டுவிழா சிறப்பு விருந்தினர் குமரி மாவட்டம் சூரங்குடியில் பிறந்து சோமாலியா நாட்டின் நீதி அரசராகப் பணியாற்றிய பெருமகன் நூர் முகம்மது அவர்கள். புகழ்பெற்ற மாமனிதர் முன்னால் நாவாடப் போகிறேன் என்ற எச்சரிக்கையோடு பேசுவதற்கு ஆயத்தமானேன். கல்லூரி நூலகமே கதியெனக் கிடந்தேன். இஸ்லாமிய மேடை எனக்கு அன்னியமாகத் தெரியவில்லை. வணக்கத்துக்குப் பதில் சலாம் சொன்னேன். உரையாற்றி முடிக்கிற தருவாயில் ‘இன்ஷா அல்லா சந்திப்போம்’ என்றேன். ‘அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ என்று மெளலவியின் மொழியிலேயே பேசினேன்.

``ஒரு தேசத்தின் காலைப்பொழுதை இளைஞர்களே தீர்மானிக்கிறார்கள் என்பதை இஸ்லாமிய இளைஞர் இயக்க மேடையில் ஒரு இளைஞனாக நின்று பேசுவதில் பெருமை அடைகின்றேன். ‘சில இளைஞர்களை என்னிடத்தில் தாருங்கள். இந்த மண்ணில் ஒரு புதிய பூலோக சுவர்க்கத்தை உருவாக்கித் தருகிறேன்’ எனச் சூளுரைத்து பாகிஸ்தான் என்ற புதிய பூமியை உருவாக்கித் தந்த காய்தே ஆதம் முகமதலி ஜின்னா இளைஞர்தான். சைமன் கமிஷனை எதிர்த்தார் என்பதற்காக ராவி நதிக்கரையில் லாலா லஜபதிராயின் உடல் மீது நெருப்பு வைத்தபோது பற்றிப் படர்ந்த அந்த நெருப்பின் மீது சத்தியம் செய்த பகத்சிங் இளைஞன்தான்.

‘என் இன்பத் திருநாட்டுக்காக மரணத்தை முத்தமிடுகிறேன். ஏற்றுக்கொண்ட லட்சியத்துக்காக சாவை மகிழ்ச்சியோடு சந்திக்கிறேன்’ என உருக்குலைந்த நிலையில் உயிர் போகும் தருணத்தில் செக்கோஸ்லோவியாவுக்காக கண் மூடும் நேரத்தில் கவிதை பாடிய ஜூலியஸ் பூசின் இளைஞன்தான். ஆஸ்திரியாவின் வல்லாதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க இத்தாலியை மீட்டெடுக்க புனிதப்போர் நடத்திய மாஜினிக்கும் கரிபால்டிக்கும் இறுதி மூச்சு உள்ளவரைத் தோள் கொடுத்தவர்கள் இளைஞர்கள்தான்.

கான்ஸ்டாண்டி நோபிளில் இருந்துகொண்டு துருக்கியை வேட்டையாடிய சுல்தானுக்கு எதிராக, முடிவிலாத போருக்கு முகம் தந்த முஸ்தபா கபாலுக்கு வாளும் கேடயமுமாக இருந்தது இளைஞர்கள்தான். அபினி மயக்கத்தில் தன்னை மறந்து சீனத்து நெடுஞ்சுவர்களுக்குள் சிதைந்த சித்திரமாய் இருந்த இளைஞர்களுக்கு ஒளி வழங்க தன்னையே தந்தவர்கள் இளைஞர்கள்தான். சோவியத் சொர்க்கத்தில் வால்கா நதிக்கரையில் சோசலிசம் மலர புரட்சி சூல் கொண்டபோது, களப் பலியானவர்கள் இளைஞர்கள்தான். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் பிடிசாம்பல் ஆக்க வங்கம் தந்த சுபாஷ் சந்திரபோஸ் சூளுரைத்தபோது, தோள் கொடுத்தவர்களும் வாள் கொடுத்தவர்களும் இளைஞர்கள்தான்.

மன்னர் மன்னர்களின் மணி மகுடங்களைச் சூறையாட, முடை நாற்றம் வீசுகிற மூட நம்பிக்கையின் முதுகெலும்பை நொறுக்க, தேசிய உணர்வுகள் தேய்பிறை ஆகிவிடாமல் பாதுகாக்க, பீட பூமிகளும் பள்ளத்தாக்குகளும் இல்லாத சமதர்ம சமுதாயத்தை உருவாக்கத் தன்னையே தந்தவர்கள் இளைஞர்கள்தான். ஏன், அந்தகாரத்தில் அமிழ்ந்திருந்த தன் மக்களை விடுவிக்கம், ஏகத்துவப் பிரச்சாரத்தை அண்ணலெம் பெருமானார் தொடங்கியபோது கதிஜா பிராட்டிக்குப் பிறகு அங்கீகரித்தது அலியும் உமரும்தான். அவர்களும் இளைஞர்கள்தான். இங்கேயும் இளைஞர்கள்தான்...” என்று நான் பேசி முடித்தபோது கைத்தட்டல் அடங்க வெகு நேரமாயிற்று.

சொன்னால் விரோதம். ஆனாலும் சொல்கிறேன். நீதியரசர் நூர் முகம்மது தன் பேச்சை நான் பேசியதற்குப் பிறகு சமவெளிக்குக் கொண்டு வரவே சிரமப்பட்டதை அவையில் இருந்தவர்கள் உணர்ந்தார்கள். ‘எனக்கு முன் பேசிய இளைஞர் எதிர்காலத்தில் யாரும் ஜெயிக்க முடியாத பேச்சாளராக நிச்சயம் வருவார்’ என்று அவர் சொன்னபோது சொக்கிப்போனேன்; புகழின் பிடியில் சிக்கிப்போனேன்!

(இன்னும் பேசுவேன்...)

-நாஞ்சில் சம்பத்

ஓவியம்: எஸ்.இளஞ்செழியன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE