மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் வேண்டும்!

By காமதேனு

பெருகும் வாகன நெரிசலை வெறுமனே சாலைகள் விரிவாக்கத்தால் மட்டுமே சமாளித்துவிட முடியாது என்பதையும் எல்லா விபத்துகளையும் ஒரே கண்ணோட்டத்தில் அணுக முடியாது என்பதையும் தலையில் தட்டிச் சொல்கிறது சமீபத்திய கோவை விபத்து. ஒரு குடிகாரரின் போதை, சாலையோரம் நின்ற ஆறு அப்பாவிகளின் உயிரைக் குடித்திருப்பது ஜீரணிக்கவே முடியாத ஒன்று!

போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் இயல்பான சாலை விபத்துகள் தனி. குடி போதையில் வாகனத்தை ஓட்டுதல், கட்டுப்பாடற்ற வேகம், வாகனத்தை ஓட்டும்போது உரிய கவனத்தை செலுத்தாமை, செல்பேசி பேசிக்கொண்டே வண்டி ஓட்டுதல் போன்ற அலட்சியம், வாகன ஓட்டத்தை சாகசமாக்க முற்படும் கிறுக்குத்தனம் இவற்றின் விளைவாக ஏற்படும் விபத்துகளை இயல்பான விபத்துகளுடன் ஒன்றாக்க முடியுமா? இன்னும் எவ்வளவு காலத்துக்கு அப்படி ஒன்றாக அணுகி அப்பாவிகளின் வாழ்க்கை குலைக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறோம்?

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமத்தில் படிப்படியாக எச்சரிக்கைப் புள்ளிகளை வைத்து இறுதியில் உரிமத்தை ரத்துசெய்யும் அரசு, கோவை சம்பவத்தில் எடுத்ததுமே சம்பந்தப்பட்டவரின் உரிமத்தை ரத்துசெய்திருக்கிறது. ஆறு உயிர்கள் பலியான சம்பவம் நம்முடைய அணுகுமுறையை எவ்வளவுக்கு மாற்றியிருக்கிறது என்றால் இவ்வளவுக்குத்தான். இது போதுமா? விபரீதத்தை உணர்ந்தே சாலைகளை அலட்சியமாகக் கையாள்பவர்களை இதெல்லாம் மாற்றிவிடுமா?

நம்முடைய மோட்டார் வாகனச் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். முக்கியமாக, இயல்பான விபத்துகளையும், விபத்துகளாக மாறிவிடும் விபரீதங்களையும் பிரித்துப் பார்க்கும் பார்வையை அது பெற வேண்டும். விபரீதர்களின் அத்துமீறல்களைக் குற்றங்களாக அது அணுக வேண்டும். வாகனத்தை இயக்குபவர் எவரானாலும், சாவியில் கை வைக்கும்போதே பயம் கலந்த எச்சரிக்கையுணர்வு வரும் வகையில் இந்தக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE