இந்திப் படவுலகை ஆட்கொண்ட தமிழர்!

By காமதேனு

தொடக்ககால தமிழ் சினிமாவுக்கு பெரும்பங்களிப்பு செய்த முன்னோடிகள் பலர். அவர்களில் சிவகங்கையிலிருந்து வந்த ஏ.நாராயணன், ராமசேஷன், ஆர்.பத்மநாபன் ஆகிய மூவரும் முக்கியமானவர்கள். நாராயணனுடன் சில படத்தயாரிப்புகளில் ஈடுபட்ட பத்மநாபன் தனியே தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் ‘அசோசியேட் பிலிம்ஸ்’. மிகச்சிறந்த இயக்குநர்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்த நிறுவனம். பம்பாய் மவுனப்பட உலகிலும் பின்னர் அது பேசும்படமாக பிரபலமடைந்தபோதும் அங்கே கொடிகட்டிப்பறந்த தமிழரான ராஜா சாண்டோ படங்களில் நடித்தும் இயக்கியும் பணிபுரிந்தது இதே ‘அசோசியேட் பிலிம்ஸ்’ நிறுவனத்துக்காகத்தான்.

ராஜா சாண்டோவின் திரையுலக ஆளுமை தமிழ் சினிமாவை மட்டுமல்ல; இந்திப் படவுலகையும் புரட்டிப்போட்டது. இன்று தமிழ்க் கலைஞர்களையும், நடிகர்களையும் பறிமாறிக்கொள்ளும் இந்திப் படவுலகம், பாலிவுட்டாக பரிமாணம் பெறாத முப்பதுகளில் தமிழகத்திலிருந்து பெற்றுக்கொண்ட முதல் ஆகச்சிறந்த திறமைதான் ராஜா சாண்டோ.

1894-ல் புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்த ராஜா சாண்டோவின் இயற்பெயர் பி.கே.நாகலிங்கம். உடற்பயிற்சி மூலம் உடலை ‘பாடி பில்டிங்’ செய்து பயில்வானாகத் திகழ்ந்த இவர், தனது 20 வயதில் மதராஸ் வந்தார். வந்த உடனேயே தனது கட்டுடலின் தோற்றத்தை மூலதனமாக வைத்து, அதைக் காட்சியாக மாற்றி ஆச்சரியப்படுத்தினார். மதராஸின் ஒற்றைவாடை நாடகக் கொட்டகையில் அதுவரை நாடகங்களும் மவுனப்படங்களும் காட்டப்பட்டுவந்த நிலையில், தன்னைப்போன்ற பல பயில்வான்களையும் மல்யுத்த வீரர்களையும் சேர்த்துக்கொண்டு ‘தேகப் பயிற்சி’ காட்சிகளை நடத்திக் காட்டினார்.

பின்னர், சென்னையில் மல்யுத்தப் பயிற்சிபெற்று ‘சாண்டோ’ என்ற பட்டத்தையும் விரைவிலேயே பெற்றார். ஆனால், ஒரு கட்டத்துக்குமேல் தேகப்பயிற்சிக் காட்சிகளுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் தமிழ் மவுனப்படங்களில் நடிக்க முயற்சித்தார். இருபதுகளில் மிக மந்தமான தொடக்கத்துடன் மக்களின் ஆதரவு இல்லாத துறையாக மவுனப்படத்துறை இருந்தது. இந்த நிலையில் பம்பாய் மவுனப்படத்துறையில் மல்யுத்தம் தெரிந்த ஸ்டன்ட் நடிகர்கள் தேவைப்பட்டதை அறிந்து பம்பாய்க்குப் பயணமானார். அங்கே நேஷனல் ஃபிலிம் கம்பெனியில் ஒரு ஸ்டன்ட் நடிகராகச் சேர்ந்தார். பல படங்களில் ஸ்டன்ட் நடிகராகத் தோன்றிய ராஜா சாண்டோவை, 1923-ல் வெளிவந்த ‘வீர் பீம்சேன்’ என்ற மவுனப்படம் இந்திய அளவில் பிரபலமாக்கியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE