அழகும் துணிவும்!

By காமதேனு

திரை வானில் ஒளிவீசத் திறமையும் அழகும் இருந்தால் போதாது. என்னால் முடியும் என்ற துணிவும் சரிவைச் சந்திக்கும்போது உடைந்துவிடாத திடமும் தேவை. இவை அத்தனையும் ஜி.வரலட்சுமியிடம் இருந்தன. முடிவுகளை விரைவாகவும் உறுதியாகவும் எடுக்கும் துணிவு இவரது ஸ்பெஷல்!

ஆந்திர மாநிலம் ஓங்கோல் நகரில் கரிகாபட்டி சுப்பராமய்யா நாயுடுவின் மகளாக 1926-ல் பிறந்தார் வரலெட்சுமி. வீட்டுக்கு அருகிலேயே ஒரு நாடகக் கொட்டகை. சுப்பராமய்யா ஒரு கலா ரசிகர். நாடகக் கலைஞர்களை வீட்டுக்கு அழைத்து விருந்தோம்பியவர். வீட்டின் முற்றத்தில் விருந்தும் அதைத் தொடர்ந்து ராஜபார்ட், ஸ்திரி பார்ட் நடிகர்களின் நடிப்பும் சிறுமி வரலட்சுமியைப் பெரிதும் கவர்ந்தன. ஓங்கோல் பிரிட்டிஷ் அரசுப் பாடசாலையில் பயின்ற வரலட்சுமி, பாடுவதிலும் நடிப்பதிலும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டது இந்தப் பின்னணியில்தான்.

பின்னர், ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோதே வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிச் சென்று, தனது உறவினரான துங்க சலபதிராவ் நடத்தி வந்த நாடகக் கம்பெனியில் சேர்ந்துவிட்டார் வரலட்சுமி. மகளைக் காணாமல் அழுதுபுரண்டார் வரலட்சுமியின் தாயார். தந்தையோ சிரித்துக்கொண்டார். எந்தப் பதற்றமும் இல்லாமல் மகளைத் தேடிக்கொண்டு நாடகக் கம்பெனி இருந்த ராஜமகேந்திரவரத்துக்கு (இன்றைய ராஜமுந்திரி) வந்தார். அப்போது அங்கே சிறுமி சக்குபாயாக நடிக்க நாடக ஒத்திகையில் இருந்தார் வரலட்சுமி. மகளின் கண்களில் ஒளிர்ந்த கலையார்வத்தைக் கண்டு, அவரை வீட்டுக்கு அழைத்துவராமல் அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டார் சுப்பராமய்யா. நான்கே வருடத்தில் வளர்ந்து நின்ற வரலட்சுமி, ‘சக்குபாய்’ நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அதன்பின், தாசரி கொட்டிரத்னம் குழுவிலும் நடிக்கத் தொடங்கினார். அவர்கள் நடத்திவந்த ‘ரங்கூன் ரவுடி’ நாடகத்தைத் திரைப்படமாக்கும் எண்ணத்துடன் அதைப் பார்க்க வந்தார் இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ்ராவ். அப்போது, பதற்றம் துளியுமின்றி, அலட்சியமான மனோபாவத்தை முகத்தில் தாங்கி, கொடிபோன்ற உடலை நளினமாக அசைத்து நடித்த 14 வயது வரலட்சுமியின் வசீகரம் பிரகாஷ்ராவுக்குப் பிடித்துப்போனது. “சினிமாவில் நடிக்கிறாயா?” என்று ராவ் கேட்டபோது கொஞ்சமும் யோசிக்காமல், “அதற்காகத்தான் காத்திருந்தேன்” என்று கூறி அந்தக் கணமே ஒப்புக்கொண்டார். தனது ‘பாரிஸ்டர் பார்வதீசம்’ என்ற தெலுங்குப் படத்தில் வரலட்சுமியை அறிமுகப்படுத்தினார் பிரகாஷ்ராவ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE