பதற வைக்கும் ஃபார்மலின் மீன்கள்!- மக்கள் அறிய வேண்டிய உண்மைகள் என்ன?

By காமதேனு

சமீபத்திய செய்திகளில் அடிபடும் ஃபார்மலின் ரசாயனம், மீன்களை மட்டும் உறைய வைக்கவில்லை. மக்களையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. பிணங்களைப் பதப்படுத்தும் ஃபார்மலினைப் பயன்படுத்தி மீன்களையும் பதப்படுத்துவதாக எழுந்துள்ள விவகாரம் தமிழகம் மற்றும் கேரளத்தின் பல ஆயிரம் கோடி ரூபாய் மீன் வர்த்தகத்தை மொத்தமாக பதம் பார்த்துள்ளது!

தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் மீன்களைப் பறிமுதல் செய்துவருகிறார்கள். கேரளாவிலும் டன் கணக்கில் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சர்ச்சை வெளியான ஒரு வாரத்தில் சென்னையில் மட்டுமே சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மீன் வர்த்தகம் அடிவாங்கியிருக்கிறது என்கிறார்கள். தவறு எங்கே நடக்கிறது, யார் செய்கிறார்கள், ஏன் செய்கிறார்கள்? பார்ப்போம்!

குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மேற்கு வங்கம், தமிழகம் இவையே இந்தியாவின் முக்கியமான மீன் கேந்திரங்கள். நாட்டின் ஒரு ஆண்டுக்கான மொத்த மீன் தேவை சுமார் 1.15 கோடி மெட்ரிக் டன். இதில் 60 சதவீதத்தை இந்த மாநிலங்கள் பூர்த்தி செய்கின்றன. இவை ஒன்றுக்கு ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை. மும்பையின் மாலாடா, போர்பந்தரின் லட்டி பஜார், காக்கிநாடாவின் ராமன்யாபேட்டா, மாட்லாபேலயம், விசாகப்பட்டினத்தின் கஜுவாகா, பெங்களூருவின் ரூசல், சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை என நாட்டின் முக்கியமான பெரிய மீன் சந்தைகள் இந்த மையங்களை வலைப்பின்னல்களாக இணைக்கின்றன. பங்குச் சந்தைப் போலத்தான் இதுவும். சந்தை விலையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, கடலில் நீந்தும் மீன்களின் வேகத்தைக் காட்டிலும் இந்த வலைப்பின்னல் வழியாக வரும் மீன்களின் வேகம் மிக அதிகம். நீர், நிலம், ஆகாயம் என அத்தனை மார்க்கத்திலும் பயணிக்கின்றன. உள்நாடு மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா என உலகம் முழுவதும் நீளுகின்றது இந்த வலைப்பின்னல்.

எங்கே நடக்கிறது தவறு?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE