தெறிக்கவிடும் ‘நக்கலைட்ஸ்’ பசங்க!

By காமதேனு

மெயில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என்று திரும்பிய திசையெல்லாம் லிங்க் போட்டு, "எங்களது சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க" என்று படுத்தியெடுக்கிறார்கள் யூ டியூப் சேனல்காரர்கள். வானத்து நட்சத்திரங்களாய் இறைந்துகிடக்கிற இத்தகைய சேனல்களுக்கு மத்தியில், உண்மையிலேயே ஜொலிக்கிற சேனல்களில் ஒன்று ‘நக்கலைட்ஸ்’. (நல்லா கவனிக்கணும், நக்சலைட் இல்லிங்கோ..!)

அரசியல், மக்கள் பிரச்சினை என்று எதைத் தொட்டாலும் அதில் கோயம்புத்தூர் குசும்பு கலந்திருப்பதுதான் இவர்களது வீடியோக்களின் தனித்தன்மை. ‘ஆண்டபரம்பரை’, ‘கோமியோகேர்’, ‘நோச்சியார்’ என்று நீள்கிற இவர்களின் படைப்பு வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது ‘67 வயதினிலே’. 16 வயதினிலே படத்தின் மாட்டு டாக்டர், மயிலைத் தேடி திரும்பவும் கிராமத்துக்கு வருகிறார். அப்போது, சப்பாணியும், பரட்டையும் என்னென்ன கூத்துகளை எல்லாம் செய்கிறார்கள் என்பதை இன்றைய ரஜினி, கமல் அரசிலைய வைத்து ஓட்டுஓட்டென்று ஓட்டியிருக்கிறார்கள் இந்த  இளைஞர்கள்.

“ `ஆண்ட பரம்பரை’ குறும்படம்தான் முதல் விதை. அதைப் பண்ணும்போதுதான் நான், பிரசன்னா, சசி, அருண் ஆகியோரும் நண்பர்களானோம். அந்தச் சமயத்தில் நிறைய கதைகள் எழுதினோம். இடையில், ‘மதுபானக்கடை’ இயக்குநர் கமலக்கண்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிஞ்சுட்டு இருந்தேன். பணமதிப்பு நீக்கம் வந்தப்ப நம்மளும் ஏதாவது வீடியோ பண்ணலாம் என்று நண்பர்களை மீண்டும் ஒருங்கிணைச்சேன். என்கிட்ட கேமராவும் இருந்ததால், நானே ஷுட் பண்ணி எடிட்டிங்கும் பண்ணினேன். அப்படி ஆரம்பிச்சு இன்று இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம் தலைவா” என்கிறார் ‘நக்கலைட்ஸ்’ குழுவின் தலைமை நிர்வாகி ராஜேஷ்வர்.  ‘67 வயதினிலே’ வீடியோவில் கமலாக வருகிறாரே அவர்தான் இவர்.

இவர்களது குறும்படத்தின் தொடக்கத்தில், ‘மேயுற மாட்டை நக்குற மாடு கெடுத்த மாதிரி, சும்மா இருந்த என்னை சொறிஞ்சு விட்டுட்டாங்கடா’ என்ற கவுண்டமணியின் பிரபல வசனப் பின்னணியோடு வரும் ‘நக்கலைட்ஸ்’ லோகோவே வித்தியாசமானது. செருப்புக்கு றெக்கை முளைத்துப் பறப்பது போல இருக்கிறது அந்த லோகோ. ``நக்கலைட்ஸ் என்றால் நக்கல் செய்றவங்கன்னு அர்த்தம். கோயம்புத்தூர் நக்கலைச் சுட்டிக்காட்டுவது போல இருந்ததால், எல்லோருக்கும் அந்தப் பெயர் பிடிச்சிருந்தது. சமானியனின் கைகளில் இருக்கும் கடைசி ஆயுதம் செருப்பு. ரொம்பக் கோபம் வந்துச்சுன்னா கடைசியா செருப்பைத்தான் தூக்கி வீசுவோம். அந்தச் செருப்புக்கு ஒரு றெக்கை இருந்தால் எப்படியிருக்கும் என்று ஐடியாதான் இந்த லோகோ” என்கிறார் இந்தக் குழுவின் அங்கமான பிரசன்னா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE