அரேபிய ரோஜா 20: ராஜேஷ் குமார்

By காமதேனு

நிசப்தமான அந்த வேளையில் இரண்டாவது மாடியிலிருந்து எழுந்த அந்தச் சத்தத்தைக் கேட்டதும் அப்துல் ஜாவித், ஹயாத், கெளசிக், நிஷா, சர்புதீன் ஐந்து பேரும் பரஸ்பரம் உறைந்துபோன பயப் பார்வை களைப் பரிமாறிக்கொண்டார் கள். குரல்கள் தாழ்ந்தன.
“மேலத்தான் எங்கேயோ ஒளிஞ்சிட்டுருக்கா.’’
“என்ன பண்ணலாம்?’’
“இதுல யோசிக்க என்ன இருக்கு? மேல போய்ப் பார்த்துட வேண்டியதுதான்’’ ஹயாத் சொல்லிக்கொண்டே, தான் அணிந்திருந்த நைட் கவுனின் பக்கவாட்டுக்குள் கையை நுழைத்து சில்வர் நிறத்தில் பளபளத்த அந்த ரிவால்வரை எடுத்துக்கொண்டான். மாடிப்படிகளை நோக்கி நடக்க முயன்றவனை சர்புதீன் தடுத்தான்.
“ஒரு நிமிஷம் ஹயாத்…’’
“என்ன?’’
“இந்த பங்களாவில் இருக்கிற எல்லாக் கதவுகளும் உட்பக்கமாய்ப் பூட்டப்பட்டு இருக்கு இல்லையா?’’
“ஆமா.’’
“மஹிமா தப்பிச்சு வெளியே போக வாய்ப்பே இல்லை?’’
“ஒரு சதவீதம்கூட இல்லை.’’
“எதுக்கும் பங்களாவின் வெளியே பிரதான கேட்டில் இருக்கும் செக்யூ ரிட்டிக்குத் தகவல் கொடுத்து அலர்ட்டாய் இருக்கும்படி சொல்லிடுறது உத்தமம். மஹிமா தப்பிச்சு வெளிய போயிட்டா பெரிய பிரச்சினையாயிடும்.’’
“அதுவும் சரிதான்’’ சொன்ன ஹயாத், செல்போனை எடுத்து செக்யூ ரிட்டியைத் தொடர்புகொண்டான். மறுமுனையில் ஒரே ஒருமுறை ரிங் போய் ‘ பீப்’ என்ற சத்தத்துடன் தொடர்பு அறுந்துபோயிற்று. ஹயாத்தின் முகம் லேசாய் இருண்டது.
“என்ன ஹயாத்?’’
“லைன் போகலை. கட் ஆகுது சர்புதீன்.’’
“மறுபடியும் ஒருதடவை ட்ரை பண்ணு.’’
ஹயாத் மீண்டும் செக்யூரிட்டியைத் தொடர்புகொள்ள, அந்த விநாடி முடிவ தற்குள் தொடர்பு அறுந்துபோயிற்று. அவனுடைய விழிகள் மிரட்சியோடு சர்புதீனை ஏறிட்டன.
 “சர்புதீன்?’’
“என்ன?’’
“சிசிடிவி கேமராக்களை முடக்கியிருக்கிற அதே ஜாமர்தான் செல்போனையும் முடக்கியிருக்கு.’’
“எப்படிச் சொல்றே?’’
“இதோ பார்... என்னோட செல்போனின் டிஸ்ப்ளேயில் ‘Something went wrong. Jammer may be fixed’ன்னு சிவப்பு எழுத்துகளுடன் ஒரு வரி ஸ்க்ரோல் ஆகிட்டுருக்கு!’’
பதற்றமடைந்த சர்புதீன் தன்னுடைய செல்போனை எடுத்து செக்யூரிட்டையைத் தொடர்புகொள்ள முயல, அது ஒரு பீப் சத்தத்தை வெளியிட்டுவிட்டு மெளனம் சாதித்தது. அப்சல் ஜாவித், கெளசிக், நிஷா மூவரும் செல்போன்களை எடுத்து ஒருத்தரையொருத்தர் தொடர்புகொள்ள முயன்று முடியாமல், முகங்களில் ரத்த ஓட்டத்தை இழந்தார்கள்.
சர்புதீன் வெகுண்டான்.
“மஹிமாவை அண்டர் எஸ்டிமேட் பண்ணிட்டோம். அவ கொண்டுவந்த லக்கேஜை நாம ப்ராப்பராய் சோதனை போட்டு இருக்கணும். தனியாய் வந்து மாட்டிக்கிட்ட ஒரு பெண்ணால என்ன பண்ண முடியும்னு நாம நெனச்சது இமாலயத் தவறு.’’
அப்துல் ஜாவித், சர்புதீனைக் கையமர்த்திவிட்டு சொன்னார்...
“இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. மஹிமா ஏதோ புத்திசாலித்தனமாய் காரியம் பண்றதாய் நினைச்சிட்டு, தான் கொண்டுவந்த ஒரு ஹைடெக் கருவியால் செல்போன் தொடர்புகளையும், சிசிடிவி கேமிரா இயக்கங்களையும் ‘ஜாம்’ பண்ணிட்டு இங்கேயிருந்து தப்பிச்சுப்போக முயற்சி பண்ணியிருக்கா. அவளுக்கு இந்த பிரம்மாண்ட மான பங்களா புதுசு. நமக்கெல்லாம் பழகிப்போன இடம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரெண்டாவது மாடியில் இருந்து சத்தம் கேட்டது. அந்த மாடியில் மொத்தம் ஏழு அறைகள். அதுல ஐந்து அறைகள் பூட்டப்பட்டு இருக்கு. மீதியிருக்கிற ரெண்டு அறைகளையும் சோதனை போட்டா அவளை மடக்கிடலாம். பி அலெர்ட் வித் யுவர் பிஸ்டல்ஸ்.’’
அடுத்த விநாடியே எல்லோருடைய வலது கைகளிலும் ஆறாவது விரலாய் பிஸ்டல் ஒன்று முளைத்து தன் உலோக உடம்பைக் காட்டி மின்னியது.
ஐந்து பேரும் மாடிப்படிகளில் ஏறினார்கள். முதல் நபராய் சர்புதீன். கோபம் கொப்பளிக்கும் முகம்.
அப்துல் ஜாவித் அவனுடைய தோளைத் தொட்டான்.
“சர்புதீன்... மஹிமா நமக்கு உயிரோடு வேணும். உணர்ச்சிவசப்பட்டு சுட்டுடாதே. ஹயாத், உனக்கும்தான் சொல்றேன்.’’
“அவளோட கையில் ஏதாவது ஒரு ஆயுதம் இருந்து அவ நம்மைத் தாக்க முயற்சி பண்ணினா?’’
“சாமர்த்தியமாய் ஹேண்டில் பண்ணு. மஹிமா ஒரு சாதாரணப் பொண்ணு கிடையாது. அவ ஒரு விஞ்ஞான தேவதை. யாரும் அவளைச் சேதப்படுத்த வேண்டாம். ஒரு துளி ரத்தம்கூட மஹிமாவோட உடம்பிலேர்ந்து வெளியே வரக் கூடாது.’’
பங்களாவின் எல்லா திசைகளிலும் வெளிச்சம் பரவியிருக்க, மாடிப்படிகளில் சத்தம் காட்டாமல் உயர்ந்து இரண்டாவது மாடியின் வராந்தாவுக்கு வந்தார்கள். பூட்டப்பட்டிருந்த அறைகளைச் சத்தம் இல்லாமல் கடந்து பூட்டாத முதல் அறைக்கு முன்பாய் நின்றார்கள்.
கதவு லேசாய்த் திறந்திருந்தது.
சர்புதீன் அந்தக் கதவைக் காலால் மெல்ல உதைக்க, அது சத்தம் இல்லாமல் பின்வாங்கியது.
உள்ளே இருட்டு சீராய்ப் பரவியிருந்தது.
சர்புதீன் அடிக்குரலில் கிசுகிசுத்தான், “ஹயாத்... நீயும் நானும் மட்டும்தான் உள்ளே போறோம். அப்சல், கெளசிக், நிஷா மூணு பேரும் பக்கத்தில் இருக்கிற அறைக்குப் போய்ப் பார்க்கட்டும். ஒரே நேரத்துல ரெண்டு ரூம்லையும் நுழைஞ்சாதான் மஹிமாவால தப்பிக்க முடியாது.’’
“சரிதான். நாங்க மூணு பேரும் அடுத்த அறைக்குப் போறோம். அவ எது மாதிரியான தாக்குதலை நடத்தினாலும் சரி, ஆவேசப்பட்டு சுட்டுட வேண்டாம். அப்படிச் சுட்டுட்டா, இத்தனை நாளும் நாம பட்ட கஷ்டத்துக்குப் பலன் இல்லாம போயிடும்.’’
அப்சல் சொல்லிக்கொண்டே கெளசிக், நிஷாவோடு பக்கத்தில் இருந்த அறையை நோக்கிப் போனார்.
சர்புதீனும் ஹயாத்தும் உச்ச பட்ச எச்சரிக்கை உணர்வோடும் கைகளில் உயர்த்திப் பிடித்த பிஸ்டல்களோடும் அந்த அரை இருட்டான அறைக்குள் அடி யெடுத்து வைத்தார்கள்.
சர்புதீன் இடதுபுறமாய் நகர்ந்து சுவரில் இருந்த சுவிட்சைத் தேய்த் தான். அறையில் வெளிச்சம் பற்றிக் கொண்டு அங்கே இருந்த எல்லாப் பொருட்களையும் துல்லியமாய்க் காட்டியது.
உயர்தர சோபா, கட்டில், சுவரில் அப்பியிருந்த ஃபிலிம் ஸ்ட்ரிப் டிவி, ஃப்ரிட்ஜ் என்று எல்லாப் பொருள் களும் இருவரின் பார்வையில் பட்டு விலகிக் கொண்டிருக்கும்போதே, சட்டென்று மின்சாரம் கண்ணை மூட எல்லாப் பக்கமும் கறுப்பு நிற வார்னிஷ் பேப்பராய் இருட்டு.
சர்புதீன் படபடத்தான். ஹயாத்தின் தோளைப் பற்றிக்
கொண்டான். “ஹயாத்... என்னாச்சு... பவர் போக வாய்ப்பே இல்லையே...’’
அவனும் அதிர்ந்துபோனவனாய் சர்புதீனின் கையைப் பிடித்துக் கொண்டான்.
“என்னான்னு தெரியலை. இப்ப பத்து செகண்ட்ல எமர்ஜென்சி சிஸ்டம் ஆன் ஆகிடும்.’’
இருட்டில் இருவரும் அப்படியே நின்றிருந்தார்கள். விநாடிதான் இருட்டில் கரைந்துகொண்டிருந்தது.
சர்புதீனின் குரல் நடுங்கியது.
“ஹயாத், பவர் போய் ஒரு நிமிஷ மாச்சு. எமர்ஜென்சி சிஸ்டம் பத்து செகண்ட்ல ஆன் ஆகியிருக்கணும். ஆகலை. ஏதோ தப்பு நடக்குது.’’
“ரூமுக்கு வெளியே போயிடலாமா?’’
“மொதல்ல செல்போனின் டார்ச்சை ஆன் பண்ணு.’’
இருவரின் செல்போன்களும் வெளிச்ச சதுரங்களாய் மாற, இருட்டு தற்காலிகமாய் விலகியது. வெளியே வந்தார்கள். பக்கத்து அறையிலிருந்து அப்சல் ஓட்டமும் நடையுமாய் வருவது தெரிந்தது.
“சர்புதீன்... மஹிமா ஈஸ் ப்ளே யிங் அப்நார்மலி. கடந்த அஞ்சு வருஷ காலத்துல பவர் ஃபெய்லியர் ஆனதில்ல. அப்படியே ஆனாலும் பத்து விநாடிக்குள்ள எமர்ஜென்சி சிஸ்டத்தில் இருந்து மெயின் ஸ்ட்ரீ முக்கு வந்திடும். ஆனா வரலை.’’
உடம்பில் சகலமும் வியர்த்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான் சர்புதீன். மூச்சிரைக்கப் பேசினான்.
“இப்போ மஹிமா இந்த ரெண்டாவது மாடியில் இல்லை. வேற ஒரு இடத்திலிருந்து வாட்ச் பண்ணிட்டுருக்கா.’’
“என்ன செய்யலாம்?’’
“மஹிமா எப்படியும் இந்த பங்களாவை விட்டு வெளியே போக முடியாது. அப்படியே போனாலும் நாய்கள் குரைக்கிற சத்தம் கேட்கும். அவிழ்த்துவிடப்பட்டு சுதந்திரமா சுத்திக்கிட்டு இருக்கிற நாய்களிடமிருந்து அவளால தப்பிக்க முடியாது. நாய்கள் குரைச்சாலே செக்யூரிட்டி எச்சரிக் கையாயிடுவான். அது தவிர...’’ என்று பேசிக்கொண்டிருந்த சர்புதீன் சட்டென்று பேச்சை நிறுத்தி அப்சலுக்குப் பின்புறமாய் நின்றி ருந்த கெளசிக்கிடம் கேட்டான்.
“ஸார்… நிஷா எங்கே?’’
கெளசிக் தனக்குப் பின்புறமாய்த் திரும்பிப் பார்த்துவிட்டு பதற்ற மானான்.
“எனக்குப் பின்னாடிதான் வந்துட்டுருந்தாங்க.’’
“என்னது! வந்துட்டிருந்தாளா?’’
“ஆமா... பவர் போனதும் நானும் அப்சலும் ஒரு நிமிஷம் உள்ளே இருந்துட்டு பவர் வராம போகவே வெளியே வந்தோம். எனக்குப் பின்னாடி அவ வந்தா.’’
“காணோமே...!’’ என்று தன்னை மறந்து கத்தின சர்புதீன் செல்போ னின் டார்ச் வெளிச்சத்தை உயர்த்திப் பிடித்துக்கொண்டு பக்கத்து அறை யை நோக்கிப் போனான்.
அப்சல், ஹயாத், கெளசிக் மூன்று பேரும் வியர்த்து வழியும் முகங்களோடு சர்புதீனைப் பின் தொடர்ந்தார்கள்.
இருட்டான அந்த அறைக்கு முன்பாய்ப் போய் நின்ற சர்புதீன் முதலில் செல்போனின் டார்ச் வெளிச்சத்தை உள்ளே அனுப்பி னான்.
இருட்டு துடைக்கப்பட-நிஷா பார் வைக்குக் கிடைத்தாள்.
நிலைத்துப்போயிருந்த விழிக ளோடு தரையில் மல்லாந்து விழுந்தி ருந்தாள்.
மார்பில் ரத்தக் குளம்.
(தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE