தாவோ: பாதை புதிது - 20

By ஆசை

முல்லா நஸ்ருதீன் ஒரு நாள் குகையொன்றைக் கடந்துசெல்லும்போது தியானத்தில் ஆழ்ந்திருக்கும் ஞானி ஒருவரைக் கண்டார். அவர் யார், எதற்காக அங்கு தியானம் செய்கிறார் என்று அவரிடம் முல்லா நஸ்ருதீன் கேட்டார்.

“நான் ஒரு ஞானி. இயற்கையையும் விலங்குகளையும் ஆழ்ந்து கவனிக்கிறேன். அப்படிக் கவனிப்பதன் மூலம் கிடைக்கும் அறிவு ஒரு மனிதனின் வாழ்க்கையையே மாற்றிவிடக் கூடியது” என்கிறார் ஞானி.

“எப்படி என்று எனக்குச் சொல்லுங்களேன். நானும் உயிரினங்களிடமிருந்து சில பாடங்களைக் கற்றுள்ளேன். நீங்கள் எனக்குச் சொன்னால் நானும் என் அனுபவங்களை உங்களுக்குச் சொல்கிறேன். முக்கியமாக, ஒரு மீன் எப்படி என்னைக் காப்பாற்றியது என்பதைப் பற்றிச் சொல்கிறேன்” என்கிறார் முல்லா நஸ்ருதீன்.

ஞானிக்கு ஒரே ஆச்சரியம். தன்னைப் போல ஞானிகளும் முனிவர்களும்தான் மீனாலோ மற்ற உயிரினங்களாலோ காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பாமரனை எப்படி ஒரு மீன் காப்பாற்றியிருக்கக்கூடும்? அப்படியென்றால் தனது ஞானம், தியானத்துக்கெல்லாம் என்ன மதிப்பு? இப்படியெல்லாம் அந்த ஞானியின் மனதில் சிந்தனைகளும் கேள்விகளும் ஓடின. இருந்தாலும் முல்லாவை மீன் எப்படிக் காப்பாற்றியது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் முதலில் தனது ஞானத்தையெல்லாம் முல்லா முன்பு கொட்டினார். கொட்டி முடித்துவிட்டு முல்லாவின் அனுபவத்தைத் தன்னிடம் பகிர்ந்துகொள்ளச் சொன்னார் அந்த ஞானி.

“ரொம்பவும் சாதாரண விஷயம் ஞானியாரே! பல நாள் பட்டினி. உணவு கிடைக்காமல் கிட்டத்தட்ட சாகும் நிலையில் இருந்தேன். அப்போதுதான் ஒரு மீன் எனக்குக் கிடைத்தது. அதைச் சமைத்துச் சாப்பிட்டேன். இப்படித்தான் எனது உயிரை மீன் காப்பாற்றியது” என்று சொல்லிவிட்டு முல்லா நஸ்ருதீன் தனது பயணத்தைத் தொடர்ந்தார். மேற்கொண்டு தியானம் செய்யலாமா வேண்டாமா என்ற சிந்தனையில் ஆழ்ந்தார் அந்த ஞானி!

இந்தக் கதையில் முல்லா நஸ்ருதீனுக்குப் பதில் லாவோ ட்சுவைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். ‘தாவோ தே ஜிங்’ நூல் முழுக்க அறிவு, ஞானம், பேருண்மை என்று நாம் கொண்டாடுபவற்றை லாவோ ட்சு உடைத்துப்போடுவதையும் பரிகசிப்பதையும் நாம் காணலாம். ‘தீமை’ என்பதைவிட ‘நன்மை’ என்பதன் பேரில் காலகாலமாக நிகழ்த்தப்பட்டுவரும் கொடுமைகளையும் கொடூரங்களையும் நாம் அறிவோம். அதனால்தான் பிரம்மாண்டம், அறம், பேருண்மை, ஞானம் போன்ற ‘பெரிய’ விஷயங்களை அன்பு, எளிமை, இயல்பு, பட்டறிவு, புன்னகை போன்ற ‘சிறிய’ விஷயங்களைக் கொண்டு பரிகசிக்கிறார் லாவோ ட்சு.

‘உண்மையைப் பார்த்து சிரிப்பது’ என்பது உம்பர்த்தோ ஈகோவின் புகழ்பெற்ற ‘தி நேம் ஆஃப் தி ரோஸ்’ நாவலின் மையக் கருத்துகளுள் ஒன்று. நகைச்சுவையைப் பற்றி அரிஸ்டாட்டில் எழுதியதாக நம்பப்படும் புத்தகத்தின் ஒரே ஒரு பிரதியை யாரும் படித்துவிடாதபடி அந்தப் புத்தகத்தின் பக்கங்களில் கொடிய விஷத்தைத் தடவி வைத்துவிடுவார் ஜார்ஜ் எனும் துறவி. இந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைத் தேடிச் செல்பவர்கள் மர்மமான முறையில் இறந்துபோக அந்த மர்மத்தை வில்லியம் எனும் துறவி துப்பறிவதுதான் கதை.

சிரிப்பு என்பது பலவீனம், மலினம், நம் உடலின் முட்டாள்தனம், குடியானவனின் பொழுதுபோக்கு, குடிகாரனின் உரிமை என்றெல்லாம் கூறுகிறார் ஜார்ஜ். அரிஸ்டாட்டில் தனது புத்தகத்தில் சிரிப்பை ஒரு கலை போல் கொண்டாடுகிறார், அதை ஒரு தத்துவப் பொருளாக ஆக்குகிறார் என்று குற்றம் சாட்டுகிறார் ஜார்ஜ். மிகவும் கண்ணியமான, தீவிரமான, தூய்மையான, கட்டுப்பாடான துறவி ஜார்ஜ். கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுபவராகத் தன்னைக் கருதிக்கொள்பவர். இறுதியில் அந்த மடாலயம் முழுவதும் அவரால் அழிந்துபோகிறது. ஏராளமானோர் உயிரிழக்கிறார்கள். உயிர்பிழைக்கும் துப்பறியும் துறவி வில்லியம் இப்படிக் கூறுகிறார்:

“ஜார்ஜ்தான் உண்மையில் கிறிஸ்துவின் எதிரி… எல்லோரும் நம்புவதுபோல் யூதாஸின் குலத்திலோ தூரத்து தேசத்திலிருந்தோ அல்ல, பக்திமான்களுக்கு மத்தி யிலிருந்துதான் கிறிஸ்துவின் எதிரி (ஆன்ட்டிகிறைஸ்ட்) வருவான். கடவுள் மீதும் உண்மையின் மீதும் கொண்ட அதீதப் பற்றால்தான் கிறிஸ்துவின் எதிரி உருவாவான். ஆகவே, உண்மை என்ற ஒன்றுக்காக சாகத் துணிந்த, அதனால் மற்றவர்களையும் சாகடிக்கும் மகான்களிடமிருந்து ஒதுங்கி இருங்கள்… மனித குலத்தை நேசிப்பவர்களின் உண்மையான நோக்கம் ‘உண்மை’யைப் பார்த்து மக்களைச் சிரிக்க வைப்பதும், ‘உண்மை’யைச் சிரிக்க வைப்பதுமாகத்தான் இருக்கும். ஏனெனில் ‘உண்மை’ மீதான வெறித்தனமான பற்றிலிருந்து நம்மை விடுவிக்கக் கற்றுக்கொள்வதில் மட்டுமே ‘உண்மை’ என்பது அடங்கியிருக்கிறது.”

இதனால்தான் ஞானி என்று தன்னைச் சொல்லிக்கொள்பவர்களைக் கண்டு அஞ்சத் தோன்றுகிறது. விடாமல் தமது அறிவைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும் பண்டிதர்களைக் கண்டு பயந்தோடத் தோன்றுகிறது. ஏனெனில், நம் ஞானிகள், பண்டிதர்கள் பலருக்கும் அடிப்படையில் சிரிக்கத் தெரியாது; அப்படிச் சிரித்தால் அவர்களை நாம் குறைத்து எடை போட்டுவிடுவோம் என்பது அவர்களின் நினைப்பு. எளிய மக்களின் கையில்தான் இயற்கையும் வாழ்க்கையும் பத்திரமாக இருக்கிறது என்றும் எளிய வாழ்க்கைதான் தாவோவைப் பின்பற்றுகிறது என்றும் லாவோ ட்சு நம்பினார்.

லாவோ ட்சுவின் வரிகளைக் கொண்டு அடுத்தவர்களையல்ல, நம்மை நாமே எடை போட்டுக்கொள்ள வேண்டும். எந்த ஒன்றைப் பற்றியும் பேச ஆரம்பித்தால் நம்மிடம் சொல்வதற்கு ஏராளமாக இருக்கின்றன. ஆனால், நம்மால் சொல்ல முடியாதது அதைவிட ஏராளம். நமக்குத் தெரிந்ததோ, நமக்குத் தெரியாதது நம்மிடம் வருவதைத் தடுக்கிறது. இதனால் நம் அறிவே நம் அறிதலுக்குத் தடைபோடுகிறது.

உண்மையான அறிவு என்பது தன்னை வெளிக்காட்டிக்கொள்வதற்கானதோ பகட்டிக்கொள்வதற்கானதோ அல்ல. தன்னை மேம்படுத்திக்கொள்வதற்கானது; தனது குறைவை உணர்ந்துகொள்வதற்கானது. ஏனெனில் அறிவு முழுமையானதோ முற்றுப்பெற்றுவிட்டதோ அல்ல. முழுமை, முற்றுப்பெற்றுவிட்டது என்றால் அந்த அறிவு செத்துப்போய்விட்டது என்று பொருள். உண்மையான அறிவு என்பது வளர்வது. முழுமையற்றதுதான் வளரும்.

இந்தப் பிரபஞ்சத்தை ‘உண்மை’ என்று நாம் எடுத்துக்கொண்டால் நமக்குப் புலனாகக்கூடிய பிரபஞ்சம் மிகச் சிறிய அளவிலானதுதான்; நமக்குப் புலனாகாத பிரபஞ்சப் பகுதி இன்னும் பல மடங்கு பெரியது. நம் அறிவு அதை இன்னும் எட்டிப்பிடிக்கவில்லை. ஆகவே, எட்டிப்பிடித்ததுவரையிலான ‘உண்மை’யை முழு உண்மை என்று எப்படி நாம் கூற முடியும்?
தாவோ ஞானியைப் பற்றிய கதை ஒன்று.

ஒருநாள் ஒரு வழிப்போக்கன் ஒரு ஞானியைச் சந்திக்கிறான். 

அவரிடம், ‘நீங்கள் ஒரு ஞானியா?’ என்று கேட்கிறான். அந்த ஞானி சற்று சிந்தனையில் ஆழ்கிறார். பிறகு, இப்படிச் சொல்கிறார்: ‘நான் ஒரு ஞானி என்று நான் சொன்னால் அப்போது, நான் ஒரு ஞானி இல்லை; ஆனால், ஞானி இல்லை என்று சொன்னால் அப்போது, நான் உண்மையைச் சொல்லவில்லை.’

அவ்வளவுதான் கதை.

பின்னே என்னதான் செய்ய வேண்டும்?

ஒன்றும் செய்ய வேண்டாம். ஞானியர் ஞானியராக இருக்கட்டும். நாம் நாமாக இருப்போம். நாமும்கூட ஞானிகளாக இருக்கலாம், யாருக்குத் தெரியும்?!

-ஆசை

அதிகாரம் 81
எவனொருவன் அறிந்தவனோ
அவன் பேசுவதில்லை;
எவனொருவன் பேசுகிறானோ
அவன் அறியாதவன்.
எவனொருவன் உண்மையானவனோ
அவன் பகட்டுவதில்லை;
எவனொருவன் பகட்டுகிறானோ
அவன் உண்மையானவனில்லை.
எவனொருவன் தே உடையவனோ
அவன் வாதாடுவதில்லை;
எவனொருவன் வாதாடுகிறானோ
அவன் தே உடையவனில்லை.
எவனொருவன் பண்டிதனோ
அவன் ஞானி இல்லை;
எவனொருவன் ஞானியோ
அவன் பண்டிதனில்லை.
எனவே, ஞானி பகட்டுவதில்லை,
தன் நற்பணிகளை.
- சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு
சீன ஞானி லாவோ ட்சு எழுதிய
‘தாவோ தே ஜிங்’ நூலிலிருந்து,
தமிழில்: சி.மணி
(அடுத்த இதழில் நிறைவடையும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE