சோலிய முடிச்சுவிட்டுருவாங்கப்பேய்..!

By காமதேனு

மதுரை கிழக்கு திமுக எம்.எல்.ஏ.மூர்த்தியும் மதுரை தெற்கு அதிமுக எம்.எல்.ஏ.சரவணனும் கடந்த 26-ம் தேதி, ஒன்றாகப் பேசிக் கொண்டே சட்டசபைக்கு வந்தனர். காணக்கிடைக்காத இந்த அபூர்வத்தை மீடியாக்காரர்கள் சிலர் கேமராவில் ‘கிளிக்’கினார்கள். அதைப் பார்த்த சரவணன், “போட்டோதானே... நல்லா எடுத்துங்குங்க. அம்மா இருக்கும்போதுதான் இதுமாதிரி போட்டோக்களை வெச்சு சிக்கலை உண்டாக்கிவிடுவாங்க. இப்ப அந்தப் பயமெல்லாம் எங்களுக்கு இல்லையே” என்றார். அப்போது குறுக்கிட்ட மூர்த்தி, “யேய்... உனக்கு பயமிருக்காதுப்பா... ஆனா, எங்களுக்குப் பயமாருக்குல்ல... இப்ப இருக்கிற நிலைமையில அதிமுக எம்.எல்.ஏ-க்களோட யாரு பேசினாலும் ஒண்ணுக்கு ரெண்டா எதையாச்சும் போட்டுவிட்டு சோலிய முடிச்சுவிட்டுருவாங்கப்பேய்..!” என்று சொல்ல, இருவரும் சிரித்தபடியே நடையைக் கட்டினார்கள்.

படம்: எல்.சீனிவாசன்

பிஹாரில் மறுபரிசீலனை செய்யப்படும் மதுவிலக்கு

கடந்த 2016-ம் ஆண்டு காந்திஜெயந்தி நாளில் பிஹாரில் தீவிர மதுவிலக்கை அமல் படுத்தினார் முதலமைச்சர் நிதிஷ்குமார். ஆனால், மதுவிலக்கு அமலால், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும், ஏழைகளுமே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் மேல்தட்டு மக்களுக்கு இதனால் எந்தச் சிக்கலும் இல்லை எனவும் புகார் வெடித்திருக்கிறது. சமீபத்தில் பிஹாரில் நடந்த இடைத்தேர்தல்களில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் சரிவைக் கண்டதற்கும் இப்பிரச்சினையே முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள். இதையடுத்து மதுவிலக்குச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாமா என ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாராம் நிதிஷ்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE