அதி முக்கிய விஷயங்களில் கவனம் திரும்பட்டும்!

By காமதேனு

ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையா என்று தமிழகக்  கட்சிகள் ஒரு காலத்தில் குரலெழுப்பியதற்குக் காரணமே, மத்திய அரசின் பிரதிநிதியாக மாநிலத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீது ஆளுநர்கள் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்கள் என்பதுதான்!

ஆளுநரால் ஆட்சிக்கு இடையூறோ, அதிகார துஷ்பிரயோகமோ நடந்தால் முதலில் பாதிக்கப்படுவது ஆளும்கட்சிதான். ஆனால், இன்று தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுசெய்யப் போவதையும், அதிகாரிகளைச் சந்தித்து நாட்டு நடப்புகளைக் கேட்டறிவதையும் உறுத்தலே இல்லாமல் வரவேற்றுக் கொண்டிருக்கிறது ஆளும்கட்சி. அரசாங்கம், மக்கள் விரோதப்போக்குடன் செயல்படு வதாகக் குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகளோ, தங்களைப் போலவே அதைக் தட்டிக் கேட்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஆளுநரை எதிர்த்துச் சிலம்பம் சுற்றுகின்றன.

ஆளுநருக்கு எதிராகப் போராடும் எதிர்க்கட்சிகள், ஆளும்கட்சிக்கு எதிரான ஊழல் புகார்களை அதே ஆளுநரிடம் அளித்து, ‘இந்த அரசின் மீது நடவடிக்கை எடுங்கள்’ என அரசு அதிகாரத்தில் அவரைத் தலையிடச் சொல்வது முரண்பாடு இல்லையா?

இன்னொரு பக்கம், ‘ஆளுநர் ஆய்வுசெய்யத்தான் போகிறாரே தவிர, அரசு நிர்வாகத்தில் குறுக்கிடுவதோ, தன்னிச்சையாக உத்தரவுகளைப் பிறப்பிப்பதோ கிடையாது’ என்று விளக்கம் தந்திருக்கும் ராஜ்பவன்,  ‘ஆளுநரது செயல்பாடுகளில் குறுக்கிடுபவர்களைக் கைது செய்யவும் சட்டத்தில் இடமிருக்கிறது’ என்று சொல்வதன் மூலம் எதிர்க்கட்சிகளுடன் யுத்தத்தை வளர்க்கிறது. உரிமைக்குக் குரல்கொடுப்பது எதிர்க்கட்சிகளின் கடமைதான். அதேசமயம், வேண்டாத திசையில் தங்களது எதிர்ப்பைத் தொடர்வதன் மூலம் ஆளும்கட்சிக்கு சாதகமான சூழலை அல்லவா எதிர்க்கட்சிகள் இப்போது உருவாக்கிக்கொண்டிருக்கின்றன?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE