குரங்கணி சித்தன் கதை - 15: மனுசன் மூணு விதம்!

By வடவீர பொன்னையா

சூரியன், சந்திரன், கல்லு, மரம், செடிகொடி... இப்படி, உயிரில்லாத இயற்கை வஸ்துகளைக் கும்பிடுறது ஒரு ஆதிகுடி இனம். இயற்கையை வியந்து மதிச்சு வழிபடுவாங்க. இடி, மின்னல், மழை, வெயில் எதையும் சமமா பார்ப்பாங்க. பிறப்பையும் இறப்பையும் சந்தோஷமா ஏத்துக்குவாங்க. தலைவன், புகழை விரும்ப மாட்டான்!

இன்னொரு ஆதிகுடி... யானை, பாம்பு, பூனை, பல்லி, பசு, மயில், கழுகு... இப்படி, உயிருள்ள ஜீவராசிகளையெல்லாம் கும்பிடுவாங்க. அதுங்களோட வாழப் பழகிக்குவாங்க. நமக்கு மேல ஒரு சக்தி நம்மைப் பார்த்துக்கிட்டு இருக்குனு நம்புறவங்கதான் இவங்க. பாவ புண்ணியம் பார்ப்பாங்க. தலைவன், தனக்கு வரும் புகழை எளிமையா ஏத்துக்குவான்!

வாழ்க்கையே பயம்னு வாழ ஆரம்பிச்ச மனுஷப்பயலுகதான், புத்தி, படைபலம், ஆயுத வலிமை, பொருள் இதையெல்லாம் சேர்த்து வச்சிருக்கிறவனைத் தேடித் தேடிக் கும்பிடுவாங்க, ஏமாத்துவாங்க, ஏமாறுவாங்க. பஞ்சமா பாதகம் செய்வாங்க. அதிகாரம் விரும்புவாங்க. தலைவன், தானா புகழைத் தேடி பரபரப்பா ஓடிக்கிட்டே இருப்பான்!

மஞ்சள் வெயில் கவுந்துக்கிட்டே இருந்துச்சு. சித்தனுக்கு அமாவாசை நினைப்பும் கூடவே தொத்திக்கிட்டு வந்துச்சு. இடுப்பைத் தடவிப்பார்த்து ‘மூலிகை மகரந்தம்’ இருக்கானு ருசுப்படுத்திக்கிட்டான்.

கூடாரத்துக்குள்ள ஓரமா நின்ன பொம்மி, காதைத் தீட்டி, கண்ணச் சுருக்கி, சித்தனும் போடப்ப நாயக்கரும் வாது பண்றதை மாறி மாறிப் பார்த்துக்கிட்டே இருந்தாள். சித்தனோட கண் அசைவுக்குப் பொறுமையாக் காத்துக்கிட்டு இருந்தாள். போடப்ப நாயக்கரு, அதிகார போதையில ரெண்டு காலையும் விரிச்சு நின்னு, ஒத்த விரலை ஆட்டி ஆட்டிப் பேசிக்கிட்டு இருந்தாரு.

‘‘ஆண்மரம்... பெண்மரம் கதையை இங்க விடாதே. அரண்மனைக்குக் கல்தூணும், மரவேலைப்பாடும்தான் அந்தஸ்து. மரத்தை வெட்டுவோம். அது எங்க அதிகாரம். முதல்ல உன்னைக் காப்பாத்திக்கப் பாரு..!’’னு போடப்பர் சொன்னதும், சித்தனுக்குக் காது மிளகாய்ச் சிவப்புக்கு மாறிப்போச்சு.

‘‘எங்களை அடச்சு வைக்கிறதுக்கும், எங்க தலைய வெட்றதுக்கும் உங்களுக்கு யார் அதிகாரம் குடுத்தது? பாண்டியருக்கும் உங்களுக்கும்தானே பிரச்சினை? இடையில், நாங்கள் சமாதானத்தை விரும்புற ஆதிகுடிகள்தானே? எங்களை எதுக்காகத் தண்டிக்கிறீங்க? குடிமக்களைப் பாதுகாக்கிறது உங்க கடமை இல்லையா?’’

‘‘கேள்விகளா கேட்டா, உன்கிட்ட அதிகாரபலம் வந்துடாது சித்தனே! உன்னை மாதிரி பிள்ளைப்பூச்சிகளுக்குப் பயப்பட மாட்டோம். பெரும்பிறவி பாண்டியனுக்கு அடைக்கலம் கொடுத்தது மட்டுமில்ல, அவனை சேர நாட்டுக்குப் பாதுகாப்பா அனுப்பிவச்சதும் உன் குற்றம் இல்லையா?’’

‘‘எங்க மண்ணுக்கு அடைக்கலம் தேடி வந்தவங்களுக்கு....’’

‘‘நிறுத்து! இது இப்போ உங்க மண்ணு இல்ல. இனி கனவுலயும் நினைச்சுப் பார்க்கக் கூடாது. உங்க நிலம் எல்லாம் எங்க காலுக்கடியில வந்துருச்சு. நீங்க எல்லோரும் எங்களுக்கு ‘வரி’ கட்டியாகணும். சோழனையே ஜெயிச்சு, தஞ்சாவூரை எங்க காலுக்கடியில கொண்டுவந்துட்டோம். இப்போ, பாண்டியர்களும் எங்களுக்கு அடிமைதான். அரசன்தான் கடவுள். இனி உங்க குழந்தைகளும் எங்களைக் கும்பிட்டுத்தான் வாழணும்!’’

‘‘ஆதிகாலத்திலிருந்து நாங்க யாருக்கும் அடிமை இல்லை. சுத்த ஸ்வயராஜ்யமா எங்க நிலத்தை நாங்களே பாட்டுச் சொல்லி, ஆண்டு அனுபவிச்சிக்கிட்டு வர்றோம். வரியாவது, கரியாவது! எங்க குழந்தைகளை, ருசுப்படுத்த முடியாத கடவுள்

பேரைச் சொல்லி அடிமைப்படுத்தாதீங்க!’’னு சித்தன் சீறினான்.

இப்பத்தான் நாயக்கருக்குக் கன்னம் சிவந்துபோச்சு. ‘‘எங்க ஆயுத பலம் உங்களுக்குத் தெரியும்தானே..? என்னை எதிர்த்துப் பேசினால், அதோ அந்தக் கடவுளையே எதிர்த்துப் போர் தொடுக்கிறதா அர்த்தம்!’’ மேல கைகளத் தூக்கி ஆகாசத்தைக் காட்டினார், போடப்ப நாயக்கர்.

‘‘ராசா... வில்லும் வாளும் வச்சிருக்கிற உங்க கை நீளம்தான். குதிரை வச்சிருக்கிற உங்க கால்களும் நீளம்தான். அதனால, நீங்க எங்களவிட வலிமையான இனம்னு நெனச்சு, எங்க மேல ஆதிக்கம் செய்ய முயற்சி செய்றீங்க. அதுதான் இயற்கை விரோதம்! உங்க நோக்கம் நிறைவேற எங்க சனங்களைக் கட்டாயப்படுத்திப் பணிய வைக்கிறீங்க... எதையும் கேள்வி கேட்க விடாம, சிந்திக்க விடாம அடிமைப்படுத்துறீங்க... அதானே?’’ வகையா கேட்டான் சித்தன்.

‘‘பேசாம நாங்க கொடுக்கிற கம்பி, கம்பளி, கருவாட்டையும் வாங்கிக்கிட்டு, ஒழுங்கா மலையில வேலை செய்ங்க. இல்லன்னா... திருத்தணிகைல எங்க ராயரை எதிர்த்தவனோட கதை தெரியுமில்லையா?’’ மீசையை முறுக்கினாரு நாயக்கரு.

‘‘உங்க தீம்பான ஆசைகள் எங்களுக்குத் தெரியவிடாத படிக்கி, கிழங்கு தோண்டக் கம்பி தந்து ஏமாத்துவீங்க. நீங்க போற பாதையையும், உங்க பாதங்களையும் நாங்க தெரிஞ்சுக்க முடியாத படிக்கி, எங்களை ஆகாசத்தைப் பார்க்கச் சொல்லி பயமுறுத்துவீங்க. நாங்க நம்புறதுக்காகக் கதைகளையும் தயார் செஞ்சு வச்சிருக்கீங்க...

உங்களோட ராஜ்யம் ஆயுத ராஜ்யம். எங்களோட ராஜ்யம் மனோராஜ்யம். எங்களை எங்க அனுபவம்தான் வழிநடத்தும். எங்க கன்னிதெய்வம் சாட்சியோட எங்க முன்னோர்கள் வழிநடத்துவாங்க. பொம்மி அமைதியா இருக்காளேனு எடை போடாதீங்க. பொம்மியோட சுயரூபம் உங்களுக்குத் தெரியாது ராசா. அவள் ஒரு ‘ராணித்தேனீ’! கலிங்காவை எப்படிக் காப்பாத்தணும்னு அவளுக்குத் தெரியும். மழை வரணும்னு நெனச்சா...’’

‘‘ஏய்...ஏய், உன் புரணாத்தை நிறுத்து!’’னு சொன்ன போடப்ப நாயக்கர், ‘‘வீரமுத்து... துங்கபத்ரா கமண்டலத்தை எடுத்துவா!’’னு கட்டளை போட்டாரு. கூடாரத்துக்குள்ள ஓடிப்போன வீரமுத்து நாயக்கர், செம்புக் கமண்டலத்தை எடுத்து வந்து போடப்ப நாயக்கருகிட்ட கொடுத்தாரு. நாயக்கர் அதை ரெண்டு கையால ஏந்தி நின்னு, ‘‘துங்கபத்ரா ஊத்துத்தண்ணி நிறைஞ்ச இந்தக் கமண்டலத்தைக் கும்பிட்டு, என் காலுல விழுங்க. உங்களை அடிமையா ஏத்துக்கிறேன்!’’

சித்தன் மேற்குப் பக்கம் பார்த்தான். மேகம் திரண்டு நின்னுச்சு. சூரியன், குரங்கணி மலையில, பாதி மறைஞ்சும் மறையாம கருமேகத்துல விசிறி வித்தை காட்டிக்கிட்டு இருந்துச்சு.

பொம்மி, சடார்னு கூடாரத்துல இருந்து ஓடிவந்து, போடப்ப நாயக்கர் முன்னாடி நின்னு, ‘‘கன்னி அம்மே... எங்களுக்கு கண்ணைத் திறந்துவிடு, வழியைத் திறந்துவிடு... அம்மே!’’னு கத்தினாள்.

வானத்துல ‘பளீர் பளீர்’னு மின்னல் இறங்கி, ‘திடும் திடும்’னு இடிச்சத்தம் பரவி, முரட்டு மழை ‘சோ’ன்னு பேய ஆரம்பிச்சது. போடப்பர் கூடாரத்துக்குள்ள ஓடினாரு.வீரர்களும் பின்னாடி ஓடினாங்க. பொம்மியும் சித்தனும், மழைக்கும் இடிக்கும் பயப்படாம அங்கேயே நின்னுக்கிட்டு இருந்தாங்க. கண்ணைத் திறக்க விடாம மழை அவங்கள குளிப்பாட்டுச்சு.

சித்தன், பொம்மியப் பார்த்து, ‘போடப்ப நாயக்கர் இருக்கிற கூடாரத்துக்குள்ள போ’ன்னு கண்ணால காட்டினான். பொம்மியும் புரிஞ்சிக்கிட்டு மெள்ள நடந்து, கூடாரத்துக்குள்ள போனாள். ஈரம் சொட்டச் சொட்ட வந்த பொம்மிக்கு, அங்கமெல்லாம் ‘பளிச்’னு தெரிய, போடப்ப நாயக்கருக்கு, போன நாழிகை வரைக்கும் என்ன நடந்துச்சுன்னு எல்லாத்தையும் மறந்தேபோனாரு.

சூரியன் முழுசா இறங்கி மலைக்குள்ள மறைஞ்சுபோச்சு. பூரண அமாவாசை ஆரம்பமாச்சு.

நாயக்கர், வலது கையால தன் முகத்தை வழிச்சுத் துடைச்சுட்டு, பொம்மியோட கண்களை பார்த்துக்கிட்டே, ‘‘உட்காரு பொம்மி’’னு, இதமா சொல்லி விலகி உட்கார்ந்து மரக்கட்டையை அவள் பக்கம் சாய்ச்சாரு.

‘‘ம்... பொம்மி, உனக்கு என்ன வயசு?’’

‘‘முந்நூத்து அறுபது பிறை!’’

‘‘இருக்கட்டும் இருக்கட்டும். உனக்கு சக்தி இருக்கு. வடிவா இருக்க… ஆமா எத்தனை குழந்தைங்க?’’னு கேட்டு வாய மூடல, நந்திச்சாமி ஈரத்தலையோட தபதபனு ஓடிவந்தான்.

‘‘மகாராசா... கொட்டக்குடி ஆத்துக்கு அந்தப் பக்கம் கலிங்காவைக் கொண்டுபோனபோது, நட்டாத்துல பெரிய வெள்ளம் வந்து எல்லோரையும் அடிச்சுக்கிட்டுப் போயிருச்சு. நம்ம வீரர்களைக் காணல. தண்ணிக்குள்ள தேடிப் பார்த்தோம். பாறை இடுக்குல தலை மாட்டி இறந்துட்டாங்க!’’னு, பதற்றத்தோட சொன்னான்.

‘‘கலிங்கா என்ன ஆனான்?’’

கூடாரத்தோட திரையை விலக்கி ஈரம் சொட்டச் சொட்ட ஈட்டியோட உள்ள நுழஞ்சான் கலிங்கா!

- சொல்றேன்...

-வடவீர பொன்னையா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE