அன்று ஜெயலலிதா - சசிகலா... இப்போது ஓபிஎஸ் - ஈபிஎஸ்!- ஆட்சிக்கு எதிராக திமுக கையிலெடுக்கும் ஊழல் அஸ்திரம்!

By காமதேனு

தமிழகத்தில் இவ்வளவு களேபரங்கள் நடந்தும் திமுக அமைதியாக இருக்கிறது என்று விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். ‘செயல் தலைவர் சரியாகச் செயல்படவில்லை’ என்கிற முணுமுணுப்புகளுக்கும் பஞ்சமில்லை. ஆனால், இந்தச் சலசலப்புகளைத் தாண்டி சத்தமில்லாமல், அதேசமயம் உறுதியுடன் அதிமுக-வின் அடித்தளத்தை அசைக்கும் வேலைகளைச் சட்டப்படி செய்துவருகிறது திமுக!

அந்த வகையில் அதிமுக-வின் இரு தூண்களாகக் கருதப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் மீது திமுக கொடுத்திருக்கும் ஊழல் புகார்கள், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கைப் போலவே எதிர்காலத்தில் பூதாகரமாக சூடுபிடிக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக மேற்கொண்ட சட்டப் போராட்டங்களுக்கு நிறைய உதாரணங்கள் உண்டு. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடங்கி வைத்தது சுப்பிரமணியன் சுவாமிதான் என்றாலும், அதைக் கண்காணித்து, தீவிரமாக வழி நடத்தியது திமுக தான். தற்போது சசிகலா சிறையில் இருப்பது, ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது மட்டுமின்றி இன்று அதிமுக கட்சியில் ஏற்பட்டிருக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் அடிப்படை திமுக நடத்திய அந்த வழக்குதான்.

அதன் பின்பும் திமுக தொடர்ச்சியாக அதிமுக-வுக்கு எதிரான வழக்குகளைப் பாய்ச்சி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது அரசுக்கு எதிராக 11 எம்.எல்-ஏ-க்கள் வாக்களித்தனர். அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பின்னாளில் அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது வேறு விஷயம். திமுக சார்பில் ஜெ.அன்பழகன் தொடர்ந்த குட்கா ஊழல் வழக்கு, தற்போது சிபிஐ விசாரணையில் இருக்கிறது. இன்னொரு பக்கம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கும் தீவிரமடைந்துவருகிறது. கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மு.க. ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்தததும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அத்தனை அமைச்சர்களும் சிறையில் இருப்பார்கள்” என்று பேசியதையும் இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும். அந்த வகையில் அதிமுக-வின் இரு தூண்களான எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் மீது வழக்குகளைப் பாய்ச்சும் வேலைகளைத் தொடங்கிவிட்டது திமுக.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE