சாமானியப் பெண்களின் திரை பிம்பம்!

By காமதேனு

இந்திய விடுதலை இயக்கம் உச்சநிலையை அடைந்திருந்த தருணம் அது. அப்போது தமிழ் சினிமாவிலும் சுதந்திர வேட்கை வெடித்துச் சிதறியது. தேசபக்தி மிக்க கலைஞர்கள், தங்களது திரைப்படங்களில் சுதந்திர உணர்ச்சியை ஊட்டும் கதைகள், கதாபாத்திரங்கள், பாடல்களைப் பயன்படுத்தினர். காந்தியவாதியான ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரும் சிறந்த தேசபக்திக் கதையைத் தேடிக்கொண்டிருந்தார்.

அப்போது மதராஸ் ஒற்றைவாடை நாடகக் கொட்டகையில் ‘கலைவாணர்’ என்.எஸ்.கே நாடகக் குழுவினர் 'நாம் இருவர்' என்ற சமூக நாடகத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்தனர். அதைக் கேள்விப்பட்டு நாடகத்தைப் பார்க்கச் சென்றார் மெய்யப்பச் செட்டியார். பின்னாளில் வெற்றிகரமான இயக்குநராக மிளிர்ந்த ப.நீலகண்டனால் எழுதப்பட்ட 'தியாக உள்ளம்' என்ற நாடகம் அது. அதை என்.எஸ்.கே வாங்கி, ‘நாம் இருவர்’ எனப் புதுத் தலைப்பு சூட்டி, தனது பாணி நகைச்சுவையைக் கலந்து நடத்தி வந்தார்.

நாடகத்தில் பொங்கி வழிந்த தேசபக்தியும் சமூக சீர்திருத்தக் கருத்துகளும் செட்டியாரைக் கவர்ந்தன. நாம் தேடிய கதை இதுதான் என்று முடிவு செய்தவர், கதாசிரியர் .நீலகண்டனை அழைத்து 3,000 ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். தனக்கு உதவி இயக்குநராக இருக்கும்படி நீலகண்டனைக் கேட்டுக்கொண்டார். அன்றைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான டி.ஆர்.மகாலிங்கத்தைக் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார். கதாநாயகியைத் தேடியபோது ‘நாம் இருவர்’ நாடகத்தில் கதாநாயகியாக நடித்த டி.ஏ.ஜெயலட்சுமியின் நடிப்பும் தோற்றமும் அவரது மனதை விட்டு அகலவில்லை.

நல்ல உயரம், ஒல்லியான உருவம், பக்கத்து வீட்டுப்பெண்ணைப் போன்ற ஈர்ப்பு கொண்ட முகம். இரட்டை ஜடைபோட்டு, கணீர் குரலில் சேதாரம் இல்லாத தமிழ் உச்சரிப்பில் வசனம் பேசி, நாயகன் சுகுமாரைக் காதலிக்கும் டி.ஏ.ஜெயலட்சுமிதான் திரைப்படத்துக்கும் பொருத்தமானவர் என முடிவுசெய்து அவரையே கதாநாயகி ஆக்கினார். மெய்யப்பச் செட்டியாரின் தேர்வு வீண்போகவில்லை. 1947, ஜனவரியில் வெளியான ‘நாம் இருவர்’ படத்தில், ‘கண்ணம்மா’ என்ற கதாபாத்திரத்தில் தோன்றி, ‘இவர் நம்ம வீட்டுப் பெண்’ எனக் கூற வைத்தார் டி.ஏ.ஜெயலட்சுமி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE